சண்டிகர்: 'ஏகே -47' துப்பாக்கியை எடுத்து அசால்டாக சேலை கட்டிய பெண் ஐபிஎஸ் அதிகாரி சில ரவுண்ட்டுகள் சுட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அவரது செயலை பார்த்து அங்கிருந்தவர்கள் நடுங்கினர். இதனால் ஒரு தரப்பினர் வியப்புடன் பார்க்கும் நிலையில் இன்னொரு தரப்போ விமர்சித்து வரும் நிலையில் இந்த ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா சர்மா யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
சத்தீஸ்கரில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அங்கிதா சர்மா. இவர் தற்போது ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் எஸ்பியாக செயல்பட்டு வருகிறார். சத்தீஸ்கரில் ஒவ்வொரு தசரா நாளிலும் காவல் நிலையங்களில் உள்ள ஆயுதங்களை வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் நேற்று சத்தீஸ்கரில் காவல்நிலையங்களில் உள்ள துப்பாக்கிகள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. ராஜநந்த்கான் போலீஸ் லைனில் நடந்த விழாவில் எஸ்பி அங்கிதா சர்மா பங்கேற்றார். அவர் சேலை அணிந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் அங்கிதா சர்மா பூஜை செய்யப்பட்ட இடத்தில் இருந்து ஒரு 'ஏகே 47' துப்பாக்கியை எடுத்து தனது தோளுடன் சேர்த்து வைத்து சில ரவுண்ட்டுகள் வானத்தை நோக்கி சுட்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பலருடைய கவனத்தை பெற்றுள்ளது. 'ஏகே 47' துப்பாக்கியை எல்லோராலும் எளிதாக கையாள முடியாது. அந்த துப்பாக்கியை முறையாக கையில் ஏந்தி பின்பகுதியை தோளில் சரியாக வைத்தால் மட்டுமே துல்லியமாக இலக்கை நோக்கி சுட முடியும். இதில் தவறு நடந்தால் இலக்கு தவறுவது மட்டுமின்றி காயங்கள் ஏற்படுவது மட்டுமின்றி, இலக்கு தவறுவதால் மற்றவர்கள் மேலேயும் தோட்டாக்கள் பாய வாய்ப்புள்ளது. இது காயம், உயிர் பலியை உருவாக்கலாம். இத்தகைய சவால்கள் இருந்தும் அங்கித் சர்மா ஏகே -47 துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி சுட்டதை ஒரு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். அதேவேளையில் இன்னொரு தரப்பினர் அவரது செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அவர்கள் கூறுகையில், ''ஏகே 47 துப்பாக்கியை பயன்படுத்துவதற்கு முன்பு முறையான பயிற்சி, உரிய பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றி இருக்க வேண்டும்'' என சாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர் துப்பாக்கியால் சுடும்போது அவருக்கு பின்னால் இருந்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்ததாகவும், பொது இடத்தில் இதுபோன்ற செயலை தவிர்த்து இருக்க வேண்டும் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ள அங்கிதா சர்மா, சத்தீஸ்கரில் துர்க் மாவட்டத்தில் 1990 ஜூன் 15ல் பிறந்தார். இவர் 2017 ல் யுபிஎஸ்சி தேர்வில் 203வது இடம் பிடித்த நிலையில் சொந்த மாநிலத்திலேயே 2018 ம் ஆண்டில் ஐபிஎஸ் பணியை பெற்றார். இவர் குறுகிய காலத்திலேயே மக்களிடம் நற்பெயர் பெற்றார். குறிப்பாக சத்தீஸ்கர் என்பது நக்சலைட்டுகளின் நடமாட்டம் உள்ள இடமாகும். இருப்பனும் அவர் துணிச்சலாக நக்சலைட்டுகளுக்கு எதிரான பல்வேறு ஆபரேஷன்களை மேற்கொண்டார். அதில் முக்கியமானது பாஸ்டர் பிராந்தியத்தில் அவர் எடுத்த நடவடிக்கை தான். இதனால் 'லேடி சிங்கம்' என்று பலரும் அவரை அழைத்து வருகின்றனர். அதோடு சோஷியல் மீடியாவிலும் அவர் ஆக்டிவ்வாக இருக்கிறார். இதனால் மக்களிடம் அவர் பிரபலம். இவரது தந்தை பெயர் ராகேஷ் சர்மா. தொழிலதிபராக இருக்கிறார். தாய் பெயர் சவிதா சர்மா. இந்த தம்பதிக்கு மொத்தம் 3 மகள்கள். இதில மூத்த மகள் தான் அங்கிதா சர்மா. அங்கிதா சர்மாவின் கணவர் இந்திய ராணுவத்தில் மேஜராக பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது.