சென்னை: சென்னையில் கிண்டி, கோயம்பேடு, மயிலாப்பூர், பிராட்வே ஆகிய இடங்களிலிருந்து தாம்பரம், கிளாம்பாக்கம், கேளம்பாக்கம், திருப்போரூர், சோழிங்கநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வழித்தடங்களில் 'வெற்றிப்பயணம்' பேருந்துகளைக் காண முடியாத நிலையை இன்று பார்க்க முடிந்தது. எங்கு பார்த்தாலும் ஏசி (AC) பேருந்துகளும், தாழ்தளப் பேருந்துகளுமே இயங்குகின்றன. சில பேருந்துகளில் மட்டுமே 'மகளிர் பயணம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஏன் இப்படி என்ற கேள்வி எழுந்த நிலையில், இதற்கான சில நடைமுறைச் சிக்கல்கள் தெரியவந்துள்ளன.
தமிழ்நாடு முழுவதும் 'வெற்றிப்பயணம்' திட்டத்தால் ஆட்டோ ஓட்டுநர்கள், கேப் (Cab) ஓட்டுநர்கள், தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கவலையை வெளிப்படுத்தும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக டிரெண்ட் ஆகி வருகின்றன. ஆனால், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மட்டும் அதுபோன்ற வீடியோக்கள் எதுவும் வராதது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. உண்மையில், தமிழக அரசு கொண்டு வந்த இத்திட்டம் மற்ற நகரங்களை விட சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். ஏனெனில், இங்குள்ள பெரும்பாலான பேருந்துகள் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளாகவே இயங்கி வருகின்றன.
எனவே, இந்த 'வெற்றிப்பயணம்' திட்டம் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாநகரப் பேருந்துகள் அதிகம் இயங்கும் நகரங்களுக்குத்தான் அதிகப் பயனுள்ளதாக இருக்கும். அப்படி இருக்கும்போது, சென்னையில் மட்டும் இதைப் பற்றிய பெரிய சலசலப்பு இல்லாமல் அமைதியாக இருப்பது எப்படி என்று யோசித்தபோது ஆச்சரியமாக இருந்தது. அதேபோல, சென்னை மாநகரச் சாலைகளில் 'வெற்றிப்பயணம்' பலகையுடன் கூடிய பேருந்துகளைப் பெருமளவில் காண முடியவில்லை. "கோயம்பேட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம் தாம்பரம், கிளாம்பாக்கம், கிண்டி, வண்டலூர், பல்லாவரம், மேடவாக்கம், சோழிங்கநல்லூர், திருப்போரூர், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வழித்தடங்களில் ஏன் ஒன்றைக்கூடக் காண முடியவில்லை?" என்று ஆராய்ந்தபோதுதான், அதன் பின்னணியில் உள்ள முக்கியக் காரணம் தெரியவந்தது. அதுதான் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல். மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது. தேர்தல் காரணமாக அந்த மாவட்டம் முழுவதும் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்றன. எனவே, சென்னை மாநகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், கிளாம்பாக்கம், கிண்டி, வண்டலூர், பல்லாவரம், மேடவாக்கம், சோழிங்கநல்லூர், திருப்போரூர், கேளம்பாக்கம் செல்லும் வழித்தடங்களில் 'வெற்றிப்பயணம்' பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை. அதாவது, சென்னையில் எந்தப் பகுதியில் இருந்து புறப்பட்டாலும், தாம்பரம் அல்லது கிளாம்பாக்கம் பகுதிக்கு வரும் எந்தப் பேருந்தும் 'வெற்றிப்பயணம்' திட்டத்தின் கீழ் தற்போதைக்கு இயங்க முடியாத சூழல் உள்ளது. நாளை (அக்டோபர் 9) தேர்தல் முடிவுகள் வந்து, தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பின்னரே, 'வெற்றிப்பயணம்' திட்டம் சென்னையில் முழுமையாக நடைமுறைக்கு வரும். அதன்பிறகுதான் இத்திட்டம் சென்னையில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையாகத் தெரியும். ஏனெனில், சென்னையில் ஏராளமான பேருந்துகள் 'வெற்றிப்பயணம்' பேருந்துகளாக மாறவுள்ளன. மற்ற நகரங்களில் வெளிப்பட்ட ஓட்டுநர்களின் எதிர்வினைகள் அடுத்த ஓரிரு நாட்களில் சென்னையிலும் எதிரொலிக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், சென்னையில் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் ஏசி பேருந்துகள் அதிகளவில் இயங்கத் தொடங்கியுள்ளன. மேலும் 1,000 பேருந்துகள் சென்னையில் இயங்கவுள்ள நிலையில், தொடர்ந்து பல ஏசி பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. எனவே, அரசு 'வெற்றிப்பயணம்' பேருந்துகளால் ஏற்படும் நிதி இழப்பை ஏசி பேருந்துகளின் கட்டணம் மூலம் ஈடுசெய்துவிடும் எனக் கருதப்படுகிறது. ஆனால், மற்ற ஊர்களில் அப்படிச் செய்ய முடியாது. ஏனெனில், பெரும்பாலான நகரங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சாதாரண கட்டணப் பேருந்துகளே அதிகம் இயங்கி வருகின்றன. தற்போது மாவட்டம் முழுமைக்கும் இயங்கும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லை என்பதால், நிதி இழப்பு அதிகமாகும். இதற்காக ஆண்டுக்கு ரூ.6,000 கோடி செலவாகும் என அரசு மதிப்பிட்டுள்ள நிலையில், அந்த மானியத்தைப் போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்க வேண்டும்.பெங்களூருவில் வாழ்க்கையை நடத்த மாதம் ரூ.1 லட்சம் வேண்டும்.. தனியார் நிறுவன பெண் ஊழியர் வீடியோ வைரல்!
செட்டில்மெண்ட், விடுதலை பத்திரம், பாகப்பிரிவினை, செட்டில்மெண்ட் ரத்து.. நவ 2 முதல் புதிய நடைமுறை