சென்னை: ஜெம் வீரமணி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியிருப்பதாவது: ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். வீரமணி வழக்கை கடந்த ஆட்சியில் கிடப்பில் போட்டதும் காவல் துறைதான். தற்போது வழக்கை விசாரிப்பதும் காவல் துறைதான்.
வழக்கை முடிக்க சொன்னவர்கள், தொடர்புடையவர்கள் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குற்றத்தில் தொடர்புடையவர்களை கண்டறிந்து வெளியே வர முடியாத அளவுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை போலீஸ் விசாரிப்பது சரியில்லை. திமுக ஆட்சியில் இந்த விவகாரத்தை மூடி மறைத்தது போலீஸ்தான், இப்போது விசாரிப்பதும் போலீஸ்தான். எனவே மீண்டும் அவர்களே விசாரித்தால் முக்கியஸ்தர்களை காப்பாற்றத்தான் முயற்சி செய்வார்கள். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். வீரமணியிடம் இருந்து யாரெல்லாம் பணம் வாங்கினார்கள், இந்த விஷயத்தை மூடி மறைத்ததில் யாருக்கெல்லாம் தொடர்பு, எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், திமுக ஆட்சியில் யார் சொல்லி இந்த கேஸ் குளோஸ் செய்யப்பட்டது என்பதை விசாரித்து தொடர்புடையவர்கள் அத்தனை பேரும் தண்டிக்கப்பட வேண்டும். உலகமறியா சிறுமிகளுக்கு நடந்த அநீதிக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். இந்த விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை. எனவே போலீஸே விசாரிப்பதை விட சிபிஐ விசாரித்தால்தான் சிறுமிகளுக்கு உண்மையான நியாயம் கிடைக்கும். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள பாலியல் தடுப்பு பிரிவு ஆய்வாளரை தொடர்பு கொண்டு ரகசிய புகார் ஒன்றை அளித்தார். அதில் அடையாளம் தெரியாது நபர் ஒருவர் தனது அலுவலகத்திற்கு வந்து பென்டிரைவ் ஒன்றை கொடுத்ததாகவும் அதில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்படும் காட்சிகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அந்த வீடியோவை ஆய்வு செய்த போது வயதானவர் ஒருவர் 13 வயது மதிக்கத்ததக்க சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட காட்சி இருந்தது. இதன் அடிப்படையில் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணையை தொடங்கினர். வீடியோவில் இடம் பெற்றிருந்த அந்த முதியவர், பிரபல கிரானைட் தொழிலதிபரும் ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணி (84) என்பது தெரியவந்தது. மேலும் வீரமணி தேனாம்பேட்டை பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதன் நிர்வாக பொறுப்புகளை சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கனிடம் ஒப்புடைத்திருந்தார். அந்த வீட்டிற்குள் சிறுமிகள் அழைத்து வரப்பட்டு பாலியல் குற்றங்கள் நடைபெற்றதாகவும் மேலும் சில தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு சிறுமிகளை அனுப்பி வைக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து சில புகைப்படங்கள், ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து வீரமணி, சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகிய 3 பேரும் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கில் 4ஆவதாக வீரமணியிடம் உதவியாளராக பணிபுரிந்த கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.நடந்தது என்ன?