அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை!

  • சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் நீடித்து வரும் உட்கட்சி குழப்பங்களுக்கு மத்தியில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதிமுகவில் இருந்து மேலும் ஒரு முக்கிய முகம் வெளியேறியுள்ள நிலையில், சனிக்கிழமை அவர் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கடுமையான தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் பல்வேறு அணிகள் உருவாகின. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்.

    Advertisement

    குறிப்பாக எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் தலைமையில் தனி அணிகள் செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    அதிமுக

    அப்போது, அதிமுகவைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவு அளித்தனர். இது அதிமுக தலைமையை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. கட்சி கொறடா உத்தரவை மீறியதாகக் கூறி, அவர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் அதிமுக தரப்பு கோரிக்கை வைத்தது. அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த சிலர் பின்னர் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதற்கிடையில் மீதமுள்ள 21 எம்எல்ஏக்கள் தொடர்பாக சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட தகுதி நீக்க கோரிக்கையை அதிமுக தலைமையே திரும்பப் பெற்றது.

    Advertisement

    சி விஜயபாஸ்கர்

    இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கரின் அரசியல் நகர்வுகள் பரபரப்பை ஏற்படுத்தி வந்த்னர். அதிமுக தலைமையை நேரடியாக விமர்சிக்காமல், சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட கருத்துகள் கட்சித் தலைமையை குறிவைத்தவையாகவே பார்க்கப்பட்டன. "உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை மக்களின் மனதை எப்படி வெல்லும்?" என்றும், "ஒன்றிணைக்கும் அரசியலே வெற்றியை தரும்" என்றும் அவர் பதிவிட்டிருந்த கருத்துகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின.

    ராஜினாமா

    மேலும், தனது தொகுதி மக்களின் கருத்தை கேட்ட பிறகே அடுத்த அரசியல் முடிவை அறிவிப்பேன் என்றும் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். இதனால் அவர் அதிமுகவில் நீடிப்பாரா அல்லது வேறு கட்சிக்கு செல்வாரா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில், நேற்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்த விஜயபாஸ்கர், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் வழங்கினார். அந்த கடிதம் முறையாக இருப்பதை உறுதி செய்த சபாநாயகர், ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி

    விஜயபாஸ்கரின் இந்த முடிவு வெளியானதும் புதுக்கோட்டை, கறம்பக்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு அதிமுக நிர்வாகிகள் சிலர் பட்டாசு வெடித்து, லட்டு வழங்கி கொண்டாடியதும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. கட்சிக்குள் நீண்ட காலமாக நீடித்து வந்த மோதலுக்கு இது ஒரு முடிவாக பார்க்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழகம்

    இந்நிலையில், வரும் சனிக்கிழமை சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் இணைவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பல முன்னாள் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பிற கட்சி பிரமுகர்கள் சனிக்கிழமைகளில் தவெகவில் இணைந்துள்ள நிலையில், அதே பாணியில் விஜயபாஸ்கரும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    உட்கட்சி மோதல்

    ஒருபுறம் அதிமுகவில் உட்கட்சி மோதல் தொடர்கிறது. மறுபுறம் தமிழக வெற்றிக் கழகம் தனது கட்சியை வலுப்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் விஜயபாஸ்கரின் அடுத்த அரசியல் நகர்வு, அதிமுகவுக்கும் தவெகவுக்கும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் மதிப்பிடுகின்றனர். குறிப்பாக புதுக்கோட்டை மற்றும் மத்திய தமிழக அரசியலில் இது நிச்சயம் பெரிய மாற்றம் தான் என்கின்றனர் அதிமுகவினர்.

    English Summary

    Former minister Vijayabaskar resigns as MLA, fueling speculation over a possible move to TVK this weekend.