Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு

  • சென்னை: பக்ரீத் பண்டிகை, முகூர்த்த தினங்கள் மற்றும் தொடர் வார இறுதி விடுமுறையால் மக்கள் அதிக அளவில் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்க மே 26 முதல் 30ஆம் தேதி வரை 4,195 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

    Advertisement

    விசேஷ நாட்கள், தொடர் விடுமுறைகள் மற்றும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வது வழக்கம். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    Advertisement

    அந்த வகையில், பக்ரீத் பண்டிகை, முகூர்த்த தினங்கள் மற்றும் வார இறுதி தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக மே 26 முதல் மே 30 வரை மொத்தம் 4195 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மே 26) 475 பேருந்துகளும், புதன்கிழமை (மே 27) 845 பேருந்துகளும், வியாழன், வெள்ளி, சனிக்கிழமை (மே 28, 2 30) 455 பேருந்துகளும் இயக்கப்படும்.

    Advertisement

    மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர்,பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை 80 பேருந்துகளும், புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாள்களிலும் தலா 170 பேருந்துகளும் இயக்கப்படும்.

    இதுபோல, மாதவரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை 35 பேருந்துகளும், புதன் முதல் சனிக்கிழமை வரை தலா 60 பேருந்துகளும் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் ஞாயிற்றுக்கிழமை (மே 31) 1085 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 4,195 சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Bakrid Special Bus: The Tamil Nadu government has announced 4,195 special buses from May 26 to 31 to manage the heavy travel rush during Bakrid, weekend holidays, and auspicious days. Special services will operate from Chennai, Bengaluru, Coimbatore, and other major cities to various destinations across the state. The move aims to reduce passenger crowding and ensure smooth travel for people returning to their hometowns.