3 கேஸ் சிலிண்டர் ஒரே வீட்டில் வைத்திருக்கலாமா? யார் பெயரில் இருக்கணும்? இதுதான் முக்கிய ரூல்ஸ்

  • சென்னை: இன்றைக்கு கேஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். சமையலுக்கு தினமும் தேவைப்படும் அத்தியாவசிய பொருளாகிவிட்டது. அதிலும் பெரிய குடும்பம் என்றால் ஒரு சிலிண்டர் மட்டும் போதாமல் போகலாம். அப்படியிருக்கும்போது ஒரே வீட்டில் 2 அல்லது 3 கேஸ் இணைப்புகள் வைத்திருக்கலாமா? இதற்கு என்ன ரூல்ஸ் இருக்கிறது என்று பார்க்கலாம்...!!

    Advertisement

    வீட்டில் 2 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்று பொதுவாக சொல்லிவிட முடியாது. கேஸ் சிலிண்டர் தொடர்பான ரூல்ஸ்களில், சிலிண்டர்களின் எண்ணிக்கையுடன் அதிலுள்ள கேஸின் அளவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    Advertisement

    வீட்டில் 2 கேஸ் சிலிண்டர்கள்

    Gas Cylinders Rules, 2016-ன் Rule 44-ன்படி, சொந்த பயன்பாட்டுக்காக எரியக்கூடிய, நச்சுத்தன்மையற்ற வாயுவை வைத்திருப்பதற்கு 25 சிலிண்டர்கள் அல்லது 200 கிலோ என்ற வரம்பு உள்ளது. இதில் எது குறைவோ அந்த வரம்புதான் பொருந்தும்.

    ஆனால், சமையலுக்கு பயன்படுத்தும் எல்பிஜிக்கு தனி விதிகள் இருப்பதால், இந்த எண்ணிக்கையை வைத்து வீட்டில் எத்தனை சிலிண்டர்கள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்துவிடக்கூடாது. மேலும், கேஸ் சிலிண்டர்களை அங்கீகரிக்கப்பட்ட கேஸ் நிறுவனங்கள் அல்லது அவற்றின் விநியோகஸ்தர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும்.

    அதேபோல சில வீடுகளில் கூட்டுக் குடும்பமாக இருப்பார்கள்.. சிலர் வாடகை வீட்டில் வசிப்பார்கள். இதனால் ஒரே வீட்டில் 3 கேஸ் இணைப்புகள் வைத்திருக்கலாமா என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.. ஒரே வீட்டில் 3 கேஸ் சிலிண்டர் இணைப்புகள் இருந்தால் அது சட்டப்படி சரிதானா என்றும் சந்தேகம் எழலாம்.

    Advertisement

    ஒரே வீட்டில் 3 கேஸ் சிலிண்டர்

    ஆம்.. ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கேஸ் இணைப்புகளை வைத்திருக்க முடியும். அதனால் ஒரு வீட்டில் 3 கேஸ் சிலிண்டர் இணைப்புகள் இருந்தாலே அது தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அந்த 3 இணைப்புகளும் ஒரே நபர் பெயரில் இருக்கக்கூடாது. ஒவ்வொரு இணைப்பும் வெவ்வேறு வயது வந்த குடும்ப உறுப்பினரின் பெயரில் இருக்க வேண்டும்.

    அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு இணைப்புக்கும் தனித்தனி சந்தாதாரர் விவரங்களும் தேவையான KYC ஆவணங்களும் இருக்க வேண்டும்.

    தனித்தனி கேஸ் இணைப்புகள்

    உதாரணமாக, ஒரு வீட்டில் அப்பா, அம்மா, மகன் என 3 வயது வந்தவர்கள் இருந்தால், அவர்களுடைய பெயர்களில் தனித்தனியாக கேஸ் இணைப்புகள் இருக்கலாம். அதேபோல் ஒரு கூட்டுக் குடும்பத்தில் அப்பா, அம்மா, மகன், மகள் அல்லது வேறு வயது வந்த உறுப்பினர்கள் தங்களது பெயர்களில் தனித்தனி கேஸ் கனெக்‌ஷன்களை பெற முடியும். ஆனால் ஒவ்வொருவரும் தங்களுடைய அடையாள அட்டை, முகவரிச் சான்று போன்ற தேவையான ஆவணங்களை கொடுக்க வேண்டும்.

    Advertisement

    பொதுவாக, ஒருவருடைய பெயரில், ஒரு வீட்டு கேஸ் இணைப்பு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஒரே நபரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு கேஸ் இணைப்புகள் இருந்தால் சிக்கல் ஏற்படலாம்.. அதிலும் தவறான தகவல்களை கொடுத்து கூடுதல் கனெக்‌ஷன் பெற்றிருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் விசாரணை நடத்தலாம்... தேவைப்பட்டால் அந்த இணைப்பை கேன்சல் செய்யவும் முடியும்.. அதனால் ஒரே நபர் பெயரில் 2, 3 இணைப்புகளை வைத்துக்கொள்வதை தவிர்ப்பது முக்கியம்.

    வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கும் கேஸ் கனெக்‌ஷன்

    வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கும் கேஸ் இணைப்பு பெறலாம்.. வாடகை ஒப்பந்தம், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, மற்றும் பிற செல்லுபடியாகும் ஆவணங்கள் இருந்தாலே போதும.

    Advertisement

    எப்போதுமே புதிய கேஸ் இணைப்பு எடுக்கப் போகிறவர்கள் முதலில் தங்களுடைய பெயரில் ஏற்கனவே வேறு இணைப்பு செயல்பாட்டில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். கேஒய்சி தகவல்களையும் சரியாக வைத்திருக்க வேண்டும்.. முக்கியமாக, அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் மூலமாக மட்டுமே புதிய இணைப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    சிலிண்டர் உபயோகிப்பு

    அதனால், ஒரே வீட்டில் 3 கேஸ் இணைப்புகள் இருப்பது மட்டுமே பிரச்சனை இல்லை. அந்த 3 இணைப்புகளும் யார் பெயரில் இருக்கின்றன என்பதுதான் முக்கியம். 3 வெவ்வேறு வயது வந்த உறுப்பினர்களின் பெயரில், தேவையான ஆவணங்களுடன் இணைப்புகள் இருந்தால் ஒரே முகவரியில் பல கேஸ் இணைப்புகளை வைத்திருக்க முடியும் என்பதுதான் நினைவில் கொள்ளவேண்டிய விஷயம்.

    Advertisement

    எப்போதுமே, சிலிண்டர் உபயோகிப்பதிலும் கவனம் தேவை.. வீட்டில் சிலிண்டரை வைத்திருக்கும்போது நேராக நிற்கும் நிலையில் வைக்க வேண்டும். வெயில் அதிகமாக படாத, காய்ந்த மற்றும் காற்றோட்டம் உள்ள இடமாக இருக்க வேண்டும். ஸ்டவ், தீப்பொறி அல்லது அதிக வெப்பம் வரும் இடத்துக்கு அருகில் சிலிண்டரை வைக்கக்கூடாது. வீட்டில் எத்தனை கேஸ் இணைப்புகள் இருக்கின்றன என்பது மட்டுமல்ல.. சிலிண்டர்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறோமா என்பதும் முக்கியம்..!!

    English Summary

    Can You Keep 3 LPG Cylinders in One House? Whose Name Should They Be In? Key Rules