சென்னை: சென்னையில் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நாளை நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம், இந்த ஆண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில், இந்த திருக்குடை பாதயாத்திரை ஊர்வலம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஊா்வலம் செல்லும் வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் காலை 8 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் இணைப்புச் சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. இந்த வாகனங்கள் ஈவெரா சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை, பிரகாசம் சாலை வழியாகச் செல்லலாம். மாலை 3 மணி முதல் ஊா்வலம் யானைகவுனி பாலத்தைக் கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் இணைப்புச் சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. வாகனங்கள் பேசின் பிரிட்ஜ் சாலை, மின்ட், பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலை வழியாகச் செல்லலாம். ஊா்வலம் யானைகவுனி பாலத்தை நெருங்கும்போது சூளை ரவுண்டானாவில் இருந்து டெமலாஸ் சாலை செல்லும் வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை, ராஜா முத்தையா சாலை வழியாகவும், மசூதி பாயிண்டில் இருந்து சூளை ரவுண்டானா செல்லும் வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகவும் திருப்பி விடப்படும். மேலும், சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூா் பேரக்ஸ் சாலை, ஓட்டேரி சந்திப்பு ஆகிய பகுதிகளில் ஊா்வலம் செல்லும் நேரத்துக்கு ஏற்ப போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். ஊா்வலம் கொன்னூா் ஒன் பாயிண்ட் பகுதிக்கு வரும்போது, ஓட்டேரி பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் குக்ஸ் சாலை வழியாகவும், ஐசிஎஃப் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் நியூ ஆவடி சாலை வழியாகவும், மேடவாக்கம் டேங்க் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் எம்.டி. சாலை, வி.பி. காலனி சந்திப்பு வழியாகவும் மாற்றி விடப்படும். போக்குவரத்து மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.