ராதன் பண்டிட் நியமனம்! "I will rethink about it" பிரேமலதாவுக்கு விஜய் வாக்குறுதி!
சென்னை: ராதன் பண்டிட்டிற்கு அரசு பதவி கொடுத்தது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். ஜோதிடர் ராதன் பண்டிட்டிற்கு எதற்காக அரசு பதவி என தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா, விசிக எம்எல்ஏ வன்னியரசு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் விஜய் பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் (சி. ஜோசப் விஜய்) பதிலுரை ஆற்றினார். அப்போது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், தனது அரசின் கொள்கை முடிவுகள் குறித்துப் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அரசுப் பதவி ஒன்றில் ஜோதிடர் ஒருவரை ('ராஜகுரு') நியமித்தது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், "ஜோதிடர் நியமனம் தொடர்பான முடிவை அரசு மீண்டும் பரிசீலனை செய்யும்" என்று உறுதி அளித்தார். அறிவியல் பூர்வமான அணுகுமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதை அவர் இதன் மூலம் கோடிட்டுக் காட்டினார்.
மதச்சார்பற்ற அரசு & மக்கள் நலத்திட்டங்கள்
"இந்த அரசு ஒருபோதும் தனது மதச்சார்பற்ற கொள்கையிலிருந்து பிறழாது" என்று குறிப்பிட்ட விஜய், முந்தைய அரசுகள் கொண்டு வந்த நல்ல திட்டங்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தொய்வின்றித் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். முந்தைய அரசின் திட்டங்கள் தொடரும் என்றும் விஜய் அறிவித்தார்.
குதிரை பேரம் குறித்த பதிலடி
தனது அரசைத் தக்கவைக்க 'குதிரை பேரம்' (Horse Trading) நடத்தப்படுவதாக எழுந்த புகார்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அவர்:
"இந்த அரசு ஒருபோதும் குதிரை பேரத்தில் ஈடுபடாது. ஆனால், மக்கள் நலப்பணிகளில் இந்த அரசு ஒரு குதிரையின் வேகத்தில் ஓடும்!" என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, தனது முதல் சோதனையான நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்தித்துள்ள நிலையில், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்போம் என்றும், வேகமான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம் என்றும் முதல்வர் விஜய் சட்டசபையில் சூளுரைத்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், "இந்த அரசுக்கு ஆதரவளித்த தோழமை கட்சியினருக்கும், தோழமை கட்சி எம்எல்ஏக்களுக்கும் நன்றி. இந்த அரசு நீடிக்க வாக்களிக்காதவர்களுக்கும் நன்மை செய்யக் கூடிய அரசாக இது அமையும்.
முந்தைய அரசுகளால் கொண்டு வரப்பட்ட முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக தனி அணியாக, மக்கள் அணியாக, மக்கள் விரும்பும் அணியாக களமிறங்கியது.
1967, 1977 தேர்தல்களை போலவே சாமானியர்களின் அரசையே அமைக்கும் என்று நாங்கள் தீர்மானமாக கூறினோம், அதன்படியே ஒரு விரல் புரட்சி விசில் புரட்சியானது. இந்த அரசு சாமானியர்களின் அரசாக அமையும். தனிபெரும் கட்சியாக எங்களை மக்கள் சட்டசபைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் அந்த தனிப்பெரும்பான்மை நூலிழையில் தவறிவிட்டது. பெரும்பான்மை இன்றி சிறுபான்மை என கூறினாலும் அதுவும் எங்களுக்கு மகிழிச்சிதான். எங்கள் அரசு சிறுபான்மை அரசுதான். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் அரசு.
பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைவருக்குமான அரசாக இருக்கும். கொள்கைத் தலைவர்கள் வழியில் மனசாட்சியுள்ள மக்களாட்சி அரசாக இருக்கும். சமூக நீதி, மதசார்ப்பற்ற , ஜாதி மதம் பாகுபாடு காட்டாத அரசாக இருக்கும். துணிச்சலுடன் செயல்படும் அரசாக இருக்கும். பதவிக்காக அதிகாரத்திற்காக அமைந்த அரசு அல்ல, இது மக்களுக்காக அமைக்கப்பட்ட அரசு
நம் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உழைத்த தலைவர்கள் வழிகாட்டிய கொள்கைகளில் இருந்து இம்மியளவு விலகாமல் இந்த ஆட்சி நடைபெறும். டாஸ்மாக் கடைகள் குறித்து சவுமியா பேசியதை கருத்தில் கொள்வதாகவும்" முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications