சென்னை விமான நிலையத்தின் தலையெழுத்தே மாறுதா? முதல்வர் விஜய் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் பின்னணி

  • சென்னை விமான நிலையத்தை நிர்வகிக்கும் நிறுவனத்தை மாற்றக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடிதம் எழுதி உள்ளதாக இந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. விமான நிலையத்தின் செயல்பாட்டில் உள்ள சில அம்சங்களில் அதிருப்தி அடைந்துள்ள விஜய் தலைமையிலான தமிழக அரசு, 'இந்திய விமான நிலையங்கள் ஆணையம்' (AAI) அல்லாத வேறொரு நிறுவனத்தை நிர்வாகப் பொறுப்பில் அமர்த்துமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளதாம். இந்த கடிதத்தை ஆகஸ்டில் எழுதிய நிலையில், இது இவ்வளவு நாட்களாக பொதுவெளியில் வெளியிடப்படாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Advertisement

    முன்னதாக ஆகஸ்ட் மாதம் முதல்வர் விஜய் அனுப்பிய கடிதத்தில், தொழில் மற்றும் முதலீடுகளை ஈர்க்கத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசு தொழில்-நட்புச் சூழலைக் கொண்டிருப்பதாகவும், எனவே விமான நிலையத்தை சிறப்பாக நிர்வகிப்பது மிக முக்கியம் என்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    மேலும் அந்த கடிதத்தில் "தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது என்றும் தொழில் மற்றும் முதலீட்டு வளர்ச்சிக்கு சர்வதேச அளவிலான விமான நிலைய உள்கட்டமைப்பும் நிர்வாகமும் முக்கியமானவை என்றும் பயணிகள் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம், சரக்கு கையாளும் திறன் ஆகிய மூன்று அம்சங்களிலும் சென்னை விமான நிலையம் மேம்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

    தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் தமிழ்நாட்டுக்கு அதற்கேற்ற சிறப்பான விமான நிலையம் அவசியம் என்பதால், தற்போதைய ஆபரேட்டர்- நிர்வாகமான Airports Authority of India - AAI-ஐ மாற்றிவிட்டு வேறு ஆபரேட்டர் நிர்வாகத்தை கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் விஜய், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    தற்போது சென்னை விமான நிலையத்தினை இந்திய விமான நிலைய ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஆபரேட்டரை மாற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் தற்போதைய கோரிக்கையை மத்திய அரசு ஏற்றால், சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் முயற்சியாக பார்க்கப்படும்.

    காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த விமான நிலையத் திட்டத்தை விஜய் தலைமையிலான தவெக அரசு கைவிட்ட நிலையில், அடுத்த கட்டமாக விமான நிலையத்திற்கான இடத்தை விஜய் தலைமையிலான அரசு தேடி வருகிறது. எனவே புதிய இடத்தை தேடி விமான நிலையம் அமைக்க இன்னும் 10 ஆண்டுகள் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ஏற்கனவே உள்ள சென்னை விமான நிலையத்தை திறம்பட கையாள வேண்டும் என்றும், பெரிய அளவில் மேம்படுத்தி அதனை வைத்து அடுத்த 10 ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதும் தமிழக அரசின் விருப்பமாக தெரிகிறது.

    Advertisement

    இதுபற்றி தமிழக அரசு வட்டாரங்கள் கூறும் போது, நாங்கள் கடிதத்தை அனுப்பிவிட்டோம். இப்போது மத்திய அரசு இதற்கு முன்னுரிமை அளித்து, விமான நிலையத்தை தனியார்மயமாக்குவதற்கான பணிகளைத் தொடங்கும் என்று நம்புகிறோம் என கூறுகிறார்கள். விமான நிலையத்தை தனியார் மயம் ஆக்கும் நடவடிக்கை குறித்து இந்து நாளேடு நேற்று வெளியிட்ட செய்தி தான் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக இருக்கிறது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    English Summary

    The Hindu has reported that Chief Minister C. Joseph Vijay has written to Prime Minister Narendra Modi requesting a change in the company managing the Chennai airport. Dissatisfied with certain aspects of the airport's operations, the Tamil Nadu government, led by Vijay, sent the letter in August.