ஆம்னி பஸ்களுக்கு சொகுசு.. கிளாம்பாக்கத்தில் அரசு பஸ் பயணிகளுக்கு எவ்வளவு பெரிய அநியாயம் தெரியுமா?

  • சென்னை: அரசுப் பேருந்தில் சென்னையில் இருந்து வெளியூர் சென்றாலோ அல்லது வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்தாலோ கிளாம்பாக்கத்திலேயே இறங்க வேண்டியுள்ளது. அங்கிருந்து மாநகரப் பேருந்து , ஆட்டோ அல்லது கார் முன்பதிவு செய்துதான் போக வேண்டிய இடத்திற்குச் செல்ல வேண்டும். அதுவும் இயலவில்லை என்றால், வரும் வழியிலேயே பொத்தேரியில் இறங்கி, அங்கிருந்து மின்சார ரயிலில் ஏறி தாம்பரம், கிண்டி, சென்னை கடற்கரை எனப் போக வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    Advertisement

    ஆனால், ஆம்னி பேருந்துகள் மட்டும் தாராளமாகக் கோயம்பேட்டில் இருந்தும், அடையாறு மற்றும் வேளச்சேரியில் இருந்தும் கிளம்புகின்றன. இதைப் பார்க்கும்போது, "அரசுப் பேருந்தில் பயணிப்போருக்கு மட்டும் ஏன் இந்த பாராபட்சம்?" என்ற கேள்வி எழுகிறது.

    Advertisement

    ஆம்னி பேருந்துகள் சென்னையில் கோயம்பேட்டில் இருந்து கிளம்பி, கிளாம்பாக்கம் வழியாகச் செங்கல்பட்டைக் கடந்து கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், தஞ்சை, கடலூர் எனப் பல்வேறு ஊர்களுக்குச் செல்கின்றன. அதேபோல் வரும்போதும் கிளாம்பாக்கத்தோடு நிற்காமல் கோயம்பேடு வரை வந்து செல்கின்றன. ஆனால் ஒன்று, முன்பு தாம்பரம் வழியாக உள்ளே சென்று கிண்டி கத்திப்பாரா, வடபழனியை அடைந்து அதன்பிறகு கோயம்பேடு செல்வார்கள்.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின்னர், அப்படிச் செல்லாமல் பெருங்களத்தூரில் இருந்து போரூர் சுங்கச்சாவடி வழியாக மதுரவாயலை அடைந்து கோயம்பேடு செல்கின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதற்குப் பிறகு, அரசுப் பேருந்துகள் எதுவுமே கிளாம்பாக்கத்தைத் தாண்டி சென்னைக்குள் வருவதில்லை. ஆனால், அனைத்து ஆம்னி பேருந்துகளுமே கோயம்பேடு வரை செல்கின்றன. இதனால் பலரும் அரசுப் பேருந்திற்குப் பதிலாக ஆம்னி பேருந்துகளிலேயே பயணிப்பதை அதிகம் விரும்புகிறார்கள்.

    Advertisement

    அதேபோல், சென்னைக்கு வரும் அல்லது சென்னையில் இருந்து செல்லும் கணிசமான ஆம்னி பேருந்துகள், தென்சென்னை பகுதிகளான அடையாறு மற்றும் வேளச்சேரியில் இருந்தே புறப்பட்டுச் செல்கின்றன. இவை வேளச்சேரி அல்லது அடையாறில் இருந்து புறப்பட்டுத் தரமணி, டைட்டல் பார்க், பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், சேலையூர், கிழக்கு தாம்பரம் வழியாகப் பெருங்களத்தூர், வண்டலூரைக் கடந்து கிளாம்பாக்கம் வழியாக வழக்கம்போல் செல்கின்றன. சில ஆம்னி பேருந்துகள் தரமணி, டைட்டல் பார்க், பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம் வழியாக அப்படியே கிளாம்பாக்கம் வந்தும் செல்கின்றன.

    இப்படித் தென்சென்னை வழியாகச் செல்லும் பேருந்துகளில் கட்டணம் எப்போதுமே அதிகமாகவே இருக்கும். வடசென்னை வழியாக அல்லது கோயம்பேடு வழியில் வரும் பேருந்துகளைவிட, வேளச்சேரியில் இருந்து புறப்பட்டுத் தென்சென்னை வழியாக வரும் பேருந்துகளுக்கே தேவை (Demand) மிக அதிகம்.

    Advertisement

    இன்னொரு விஷயம், அரசுப் பேருந்துகளில் பண்டிகைக் காலத்திற்கோ அல்லது நேரத்திற்கோ ஏற்பக் கட்டணங்கள் மாறுவது இல்லை; ஒரே சீராகவே இருக்கும். ஆனால் ஆம்னி பேருந்துகளில் சாதாரண நேரங்களில் ரூ.400-க்குக் கூட டிக்கெட் கிடைக்கும். அதே சமயம் பண்டிகைக் காலங்களில் ரூ.2000 முதல் ரூ.3000 வரை கூடக் கட்டணம் உயரும். இந்தச் சீசன் காலங்களில் மட்டும் மக்கள் அரசுப் பேருந்துகளை நாடுவார்கள்; மற்ற நேரங்களில் பெரும்பாலும் ஆம்னி பேருந்துகளையே தேர்வு செய்கிறார்கள். இதற்குக் முக்கியக் காரணம், ஆம்னி பேருந்துகள் சென்னை நகருக்குள் வந்து செல்வதுதான்.

    எனவே, அரசுப் பேருந்துகளிலும் ஒவ்வொரு வழித்தடத்திலும் சில பேருந்துகளையாவது ஆம்னி பேருந்துகளைப் போல நகருக்குள் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கலாம். ரெட் பஸ் , அபி பஸ் , மேக்மைட்ரிப் போன்ற பல்வேறு தனியார் செயலி ஏஜென்சிகளில் தனியார் பேருந்துகளைப் போல அரசுப் பேருந்துகளையும் முன்பதிவு செய்யும் வசதிகளை அனுமதிக்கலாம். ஆம்னி பேருந்துகளைப் போலவே அரசுப் பேருந்துகளிலும் பல்வேறு இடங்களில் பயணிகள் ஏறி, இறங்கும் வசதிகளை அறிமுகப்படுத்தலாம். ஆனால், இவை எதுவுமே இன்றுவரை செய்யப்படவில்லை.

    Advertisement

    அரசுப் பேருந்துகள் கிளாம்பாக்கத்துடன் தங்கள் சேவையைச் சுருக்கிக் கொண்டுள்ளன. ஆம்னி பேருந்துகளுக்குக் கிடைக்கும் நெகிழ்வுத்தன்மை அரசுப் பேருந்துகளுக்குக் கிடைப்பதில்லை. அரசுப் பேருந்தில் பயணிப்போருக்கு இது எவ்வளவு பெரிய அநீதி?

    அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அனைத்துப் பேருந்துகளையும், அனைத்துப் பயணிகளையும் ஒரே கண்ணோட்டத்திலேயே பார்க்க வேண்டும். ஆம்னி பேருந்து பயணத்திற்கு ஒரு நியாயம், அரசுப் பேருந்து பயணத்திற்கு ஒரு நியாயம் என்பது ஏற்கவே முடியாத ஒன்றாகும். அரசு நினைத்தால் இந்த நிலை நிச்சயம் மாறும்!

    English Summary

    Luxury for omni buses alone in chennai: Do you know what a huge injustice is being done to passengers traveling on government buses at Kilambakkam?