காலங்காத்தால எடப்பாடி பத்தி கேள்வி கேட்டு டென்ஷன் ஆக்காதீங்க! நிருபரிடம் சீறிய சி.வி.சண்முகம்
சென்னை: எடப்பாடி பழனிசாமி குறித்து காலையிலேயே கேள்வி எழுப்பி டென்ஷன் செய்யாதீர்கள் என செய்தியாளரிடம், அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம் கூறிவிட்டு சட்டசபைக்குள் வேகமாக சென்றுவிட்டார்.
தமிழகத்தில் நடைபெற்ற 17வது சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க.வையும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வையும் விட அதிக இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கியது.

கழகத்தின் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான ஜோசப் விஜய், ஆளுநர் அர்லேக்கரைச் சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரினார். மேலும், இரண்டு வாரங்களுக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் உறுதியளித்தார்.
ஆனால், ஆளுநர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை; இன்று (மே 13) சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.
அதன்படி, முதல்வர் ஜோசப் விஜய் கடந்த மே 10ஆம் தேதி பதவியேற்றார். அவருடன் ஒன்பது அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். தொடக்கத்தில் 108 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பலம், முதல்வர் ஜோசப் விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் 107 ஆகக் குறைந்தது.
மேலும், திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் தற்போது 106 ஆக உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன.
இக்கட்சிகளின் ஆதரவுடன், தமிழக வெற்றிக் கழகத்தின் மொத்த பலம் சட்டசபையில் 119 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் மட்டுமே தேவை என்பதால், தற்போதைய பலம் போதுமானது.
இன்று காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. முதல்வர் ஜோசப் விஜய், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான தீர்மானத்தை முன்மொழிவார். அதனைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வாக்கெடுப்பை நடத்துவார்.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, சட்டசபையின் அனைத்துக் கதவுகளும் மூடப்பட்டு, உறுப்பினர்கள் தங்களது ஆதரவை ஆறு வரிசைகள் வழியாகப் பிரிவு ரீதியாக வாக்களிப்பதன் மூலம் உறுதி செய்வார்கள். அவையில் இருக்கும் மொத்த உறுப்பினர்களில் பாதிக்கும் மேல் ஒரு வாக்கு கூடுதலாகப் பெறுபவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.
தற்போதைய சூழ்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மைக்கான ஆதரவு தெளிவாக அமைந்துள்ளது. அரசியல் நோக்கர்கள், இன்றைய முக்கியப் பரீட்சையில் முதல்வர் ஜோசப் விஜய் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கிறார்கள்.
பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதும், இத்தகவல் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். முக்கியமாக, அதிமுகவின் 30 உறுப்பினர்களும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரு உறுப்பினரும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கொறடா, அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் விஜய் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதிமுகவில் இரு தரப்பினரும் தனித்தனியே சட்டசபை குழு தலைவர்களின் பெயர்களை பரிந்துரைத்துள்ளனர். இது குறித்து சபாநாயகர் முக்கிய முடிவு எடுக்க வேண்டும்.
சி.வி.சண்முகத்திடம் 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இருந்தால் அவர்கள் தவெகவுக்கு வாக்களித்தால் கட்சி தாவல் தடை சட்டம் பாயாது. முன்னாள் முதல்வர் ஸ்டாலின், சீமான், அன்புமணி, வைகோ உள்ளிட்டோரின் வீடுகளுக்கு மரியாதை நிமித்தமாக சென்ற விஜய், எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு செல்லவில்லை. ஆனால் நேற்றைய தினம் தவெகவுக்கு ஆதரவு என சி.வி.சண்முகம் தரப்பு கூறிய நிலையில் அவரது மாலையில் எம்ஆர்சி நகரில் உள்ள சண்முகத்தின் அலுவலகத்திற்கு விஜய் சென்றிருந்தார். அவருக்கு ஒவ்வொரு எம்எல்ஏக்களாக சண்முகமும் வேலுமணியும் அறிமுகப்படுத்தினர்.
இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டசபை உறுப்பினர்கள், சட்டசபைக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சட்டசபைக்கு வந்திருந்த சி.வி.சண்முகத்திடம் செய்தியாளர் ஒருவர் எடப்பாடி பழனிசாமி குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு சி.வி.சண்முகம் காலையிலேயே எடப்பாடி குறித்து கேட்டு டென்ஷனாக்காதீர்கள் என கோபமாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.












Click it and Unblock the Notifications