4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கோரிய விஜய் மனுவை நிராகரிக்கனும்! ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பரபர வாதம்

  • சென்னை: அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு உடனே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற விஜய் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதம் வைத்துள்ளது. மேலும், இடைத்தேர்தல் அறிவிக்காதது என்பது நிரந்தரமான முடிவு கிடையாது என்றும், வழக்குகள் முடிந்ததும் தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    Advertisement

    திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்ற முதல்வர் விஜய் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகளை நிராகரிக்க கோரி தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதம் வைத்துள்ளது.

    Advertisement

    தேர்தல் ஆணையம் பதில் மனு

    தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க கடந்த ஜூலை 10 ஆம் தேதி இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கானது தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் தலைமையிலான அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    முதல் நாளே தேர்தல் நடத்த வேண்டும் என கூறப்படவில்லை

    அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இடைத்தேர்தல் அறிவிக்காதது நிரந்தரமானது அல்ல. உயர் நீதிமன்றம் வழக்கை முடித்ததும் தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பெருந்துறை தொகுதியை பொறுத்தவரை தேர்தல் வழக்கு கடந்த 8 ஆம் தேதி நிராகரிக்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு நவம்பர் 24 ஆம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால், அந்த தொகுதியை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் சட்டப்படி முடிவு எடுக்க அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 151 பிரிவு ஏ-ன் படி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட முதல் நாளே தேர்தல் நடத்த வேண்டும் என கூறப்படவில்லை என்றும், 6 மாதம் காலம் அவகாசம் வழங்கப்பட்டு இருப்பதாகவும், தேர்தல் வழக்கில் தன்னை தேர்ந்தெடுக்கப்பட்டவராக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும் போது அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது என கருத முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

    விஜய் கோரிக்கையினை நிராகரிக்க வேண்டும்

    தேர்தல் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என நீதிமன்றம் கருதினால், தேர்தல் ஆணையம் அதனை வரவேற்பதாகவும் இந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது. மேலும் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த கருத்தையும் தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை எனவும், தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் முடிவெடுத்த பிறகு திருச்சி கிழக்கு தொகுதி உள்பட 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். தேர்தலை விரைந்து நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என முதல்வர் விஜய் மற்றும் எதிர் மனு தாரர்களின் கோரிக்கையினை நிராகரிக்க வேண்டும் எனவும் இந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Election Commission has submitted written arguments to the Madras High Court opposing Vijay's demand to immediately hold by-elections for four constituencies, including Ambasamudram. Furthermore, the Commission informed the court that the decision not to announce by-elections is not permanent and that the elections will be conducted once the pending cases are resolved.