பீட்சா டெலிவரி பாய் டூ ஆஸ்திரேலியாவில் 3 ரெஸ்டாரெண்டுகளுக்கு ஓனர்.. இந்தியரின் சக்சஸ் கதை

  • சிட்னி: ஒரு காலத்தில் பீட்சா டெலிவரி பாயாக வேலை செய்த இந்திய இளைஞர் ஒருவர், இன்று ஆஸ்திரேலியாவில் சொந்தமாக மூன்று உணவகங்களுக்கு உரிமையாளராகத் திகழ்கிறார். உயர்கல்விக்காக ஆஸ்திரேலியா சென்று, அங்கு டெலிவரி பாயாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர், இன்று அந்நாட்டிலேயே வெற்றிகரமான தொழிலதிபராக உருவெடுத்துள்ளார். அத்துடன் ஆஸ்திரேலியக் குடியுரிமையும் பெற்றுத் தன் குடும்பத்துடன் அங்கு குடியேறிவிட்டார். இவரது இந்த வெற்றிப் பயணத்தை, இவரது மைத்துனரான வினேஷ் என்பவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    Advertisement

    இன்றும் பலருக்குப் பிடித்தமான நாடு என்றால் அது ஆஸ்திரேலியாதான். அமெரிக்காவிற்குப் போக வேண்டும், ஆஸ்திரேலியா போக வேண்டும், இங்கிலாந்து, கனடா, நார்வே, ஜெர்மனி போக வேண்டும்" என்று ஆளுக்கொரு கனவு நாட்டைப் பற்றிக் கூறுவார்கள். இதில் அமெரிக்காவிற்கு அடுத்து பெரும்பாலானோர் விரும்புவது ஆஸ்திரேலியாவைத்தான்.

    Advertisement

    ஆனால் என்னவொரு சிக்கல் என்றால், அமெரிக்காவைப் போலவே ஆஸ்திரேலியாவும் அவ்வளவு எளிதாக யாருக்கும் குடியுரிமை வழங்கிவிடாது; அனைவரையும் சந்தேகக் கண்ணுடனேயே பார்க்கும். அகதிகளைப் போலச் சென்று ஆஸ்திரேலியாவில் குடியேறிவிட முடியாது. அதேநேரம், உயர்கல்விக்காகச் செல்பவர்கள் திறமை இருந்தால் அங்கேயே நல்ல வேலை பெற்றுச் குடியேறிவிட முடியும். அப்படிச் குடியேறிய ஒருவரைப் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

    பீட்சா டெலிவரி பாயாக வேலை செய்த இந்திய இளைஞர் இன்று ஆஸ்திரேலியாவில் தொழிலதிபராக உயர்த்துள்ளார். இதுகுறித்து அவரது மைத்துனர் வினேஷ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிடுகையில்:

    Advertisement

    "என் மச்சான் 11 ஆண்டுகளுக்கு முன்பு உயர்கல்வி கற்பதற்காகத்தான் ஆஸ்திரேலியா சென்றார். அங்குத் தன் படிப்பையும் வெற்றிகரமாக முடித்தார். படித்த படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடுதான் வேலை தேடினார்.

    ஆனால், சூழ்நிலை அவருக்குச் சுத்தமாகச் சாதகமாக இல்லை; நல்ல வேலை கிடைக்கவில்லை. குடும்பத்திற்குச் சுமையாக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவர், சற்றும் யோசிக்காமல் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பீட்சா கடையில் முழுநேர ஊழியராகச் சேர்ந்தார். பீட்சா தயாரிப்பது, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வது என அத்தனை வேலைகளையும் தயக்கமின்றிப் பார்த்தார்.

    சுமார் மூன்று ஆண்டுகள் அதே கடையில் வேர்வையைச் சிந்தி உழைத்தவர், தான் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தையும், ஒரு கூட்டாளியின் முதலீட்டையும் இணைத்து, அதே பீட்சா நிறுவனத்தின் உரிமத்தை விலைக்கு வாங்கினார். அதுவே அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

    அவரது அயராத உழைப்பால் பிசினஸ் அமோகமாக வளர்ந்தது. அடுத்தடுத்து மேலும் இரண்டு பீட்சா ஃபிரான்ச்சைஸிகளைத் தனதாக்கினார். கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியா வந்து திருமணமும் செய்துகொண்டு, மனைவியையும் ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

    தொழிலில் லாபம் குவியத் தொடங்கியதும், அவரது பொருளாதார நிலையும் உயர்ந்தது. ஆஸ்திரேலியாவில் அழகான ஒரு சொந்த வீடு, ஆடம்பர பிஎம்டபிள்யூ கார் என அவரது வாழ்க்கை அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டது. அத்துடன் நிறுத்தாமல், ஹைதராபாத்தில் ஒரு வீட்டைக் கட்டி, தன் பெற்றோரையும் ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச் சென்று தான் உருவாக்கிய வீட்டில் வாழ வைத்துள்ளார்.

    Advertisement

    11 ஆண்டுகால இடைவிடாத உழைப்பிற்குப் பிறகு, அவரும் அவரது குடும்பத்தினரும் சமீபத்தில் ஆஸ்திரேலியக் குடியுரிமையைப் பெற்றார்கள். ஆரம்ப நாட்களில் பீட்சா டெலிவரி செய்ய அவர் சிந்திய வேர்வைதான் இந்த நிலைக்குக் காரணம். இதுபோன்ற வெற்றிக் கதைகளைப் பார்க்கும்போது நமக்குள்ளும் ஒரு புதுத் தன்னம்பிக்கை பிறக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    சமூக வலைத்தளங்களில் குவியும் வாழ்த்துகள்!

    இந்த நிஜக் கதை இணையத்தில் வைராகி, ஆயிரக்கணக்கானோரை நெகிழ வைத்துள்ளது. இணையவாசி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், "கடின உழைப்பிற்கு ஈடு இணை எதுவும் இல்லை. சரியான நேரம், அதிர்ஷ்டம், உழைப்பு எல்லாமே சேர்ந்தால் வெற்றி நிச்சயம்!" என்று வாழ்த்தியுள்ளார்.

    Advertisement

    இன்னொரு இணையவாசி, "படித்த படிப்புதான் முக்கியம் என்று சும்மா உட்கார்ந்துவிடாமல், அடிமட்டத்தில் இருந்து தொடங்கி ஜெயித்துக் காட்டிய இந்த உழைப்பு போற்றுதலுக்குரியது" என்று உருகியபடி பதிவிட்டுள்ளார்.

    மூன்றாவது இணையவாசி வெளியிட்ட பதிவில், "இதுதான் சம வாய்ப்புகள் நிறைந்த பூமி! நேர்மையாக உழைப்பவன் நிச்சயம் ஒரு நாள் ஜெயிப்பான் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்" என்று பாராட்டியுள்ளார். இந்தக்கருத்தைப் பலரும் 'லைக்குகள்' செய்து பகிர்ந்து வருகிறார்கள்.

    உழைக்கத் தயங்காதவர்களும், விடாமுயற்சியைக் கைவிடாதவர்களும் ஒரு நாள் வெல்வார்கள் என்பதற்கு இந்த ஹைதராபாத் இளைஞரின் வெற்றிக் கதையே மிகச்சிறந்த சான்றாகும்!

    English Summary

    An Indian youth who went to Australia for his studies and started his life there working as a pizza delivery person has now become a successful entrepreneur in the country. He has also obtained Australian citizenship and settled there with his family. His brother-in-law Vineeth, himself an entrepreneur, has shared the story of this successful journey.