சென்னை: மலைப்பாதைகளில் உள்ள செங்குத்தான ரயில் தண்டவாளங்களில் ரயில்கள் பின்னோக்கிச் செல்லாமல் எப்படி மேலே ஏறுகின்றன? இதற்குப் பின்னால் சில நேரங்களில் 'பேங்கர் இன்ஜின்' எனப்படும் சக்திவாய்ந்த உதவி ரயில் இன்ஜின் செயல்படுகிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மலைப்பாதைகளில் தண்டவாளங்கள் அதிகச் சரிவுடன் அமைந்திருக்கும்போது, கனமான ரயிலை மேல்நோக்கி இழுத்துச் செல்ல பிரதான இன்ஜினுக்குக் கூடுதல் இழுவிசை தேவைப்படலாம். அப்போது, ரயிலின் பின்புறத்தில் இணைக்கப்படும் பேங்கர் இன்ஜின், பின்னால் இருந்து தள்ளி உதவுகிறது. இதனால் ரயில் சரிவில் ஏறுவதற்குத் தேவையான கூடுதல் இழுவிசை கிடைக்கிறது.
இரண்டு இன்ஜின்களும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. அதேசமயம், இன்ஜினின் சக்கரங்களுக்கும் தண்டவாளங்களுக்கும் இடையிலான பிடிப்புத்தன்மை (Grip), சக்கரங்கள் வழுக்காமல் எவ்வளவு விசையைச் செலுத்த முடியும் என்பதைத் தீர்மானிக்கிறது. பிரதான இன்ஜின் இழுக்கிறது → பேங்கர் இன்ஜின் தள்ளுகிறது → கூடுதல் இழுவிசை கிடைக்கிறது → ரயில் மலைச்சரிவில் மேலே ஏறுகிறது. மலைப்பாதைகளில் செல்லும் எல்லா ரயில்களுக்கும் பேங்கர் இன்ஜின் தேவைப்படுவதில்லை. ஆனால், அதிகச் சரிவுகள் கொண்ட குறிப்பிட்ட ரயில் வழித்தடங்களில் இந்தக் கூடுதல் சக்தி ரயிலை மேலே கொண்டு செல்வதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது! மகாராஷ்டிராவின் மும்பை-புனே வழித்தடத்தில் கர்ஜத் - லோணாவளா இடையே மலையில் ரயில்கள் செல்ல இந்த முறை தான் பயன்படுகிறது. போர்காட் மலைச்சரிவில் கனமான பயணிகள் ரயில்களுக்கும் சரக்கு ரயில்களுக்கும் கூடுதல் இன்ஜின்கள் உதவுகிறது. சில ரயில்களுக்கு இரண்டு அல்லது மூன்று உதவி இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் மகாராஷ்டிராவில் மும்பை-நாசிக் வழித்தடத்திலும் கசாரா - இகத்புரி இடையே துல் காட் பகுதியில் கடுமையான மலை சரிவுகள் இருக்கிறது. பாரம்பரியமாக இங்கு கூடுதல் இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது பயன்பாட்டில் உள்ள சில நவீன ரயில்களில் மாற்று இன்ஜின் ஏற்பாடுகள் இருப்பதால், எல்லா ரயில்களுக்கும் ஒரே முறை இருப்பது இல்லை. கர்நாடகா-கோவா எல்லைப் பகுதியில் உள்ள கேஸில் ராக் - குலேம் வழித்தடத்தில் பிரகன்சா காட் பகுதியில் சுமார் 1:37 என்ற கடுமையான சரிவு காணப்படுகிறது. எனவே இந்த வழித்தடத்தில் செல்லும் கனமான சரக்கு ரயில்களுக்கு கூடுதல் இன்ஜின்கள் மிக முக்கியம் ஆகும். துத்சாகர் நீர்வீழ்ச்சிப் பகுதியில் செல்லும் ரயில் வழித்தடம் இதுதான் என்பதால் ரயில்களுக்கு கூடுதல் என்ஜின் தேவைப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே செல்லும் ரயில் வழித்தடத்தில் பேங்கர் இன்ஜின் முறையை மட்டும் நம்புவதில்லை; அதனுடைய ரேக் மற்றும் பாதையின் தொழில்நுட்ப அமைப்புகள் முறறிலும் தனித்துவமானது. ஊட்டிக்கு செல்லும் மலை ரயிலில் மலைச்சரிவில் ஏறுவதற்காகவே ரேக் அண்ட் பினியன் அமைப்பு பொறுத்தப்பட்டிருக்கிறது. பொதுவாக, சாதாரண ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தின் மீது உருண்டு செல்லும். அப்படி செல்லும் போது, முன்புற இன்ஜின் ரயிலை இழுக்கும். அப்படியே வழுக்காமல் பெட்டிகள் மலையேறும். ஆனால் ஊட்டி மலை ரயிலை பொறுத்தவரை, அங்குள்ள தண்டவாளங்களுக்கு நடுவில் பற்கள் கொண்ட கூடுதல் இரும்புப் பட்டை பொருத்தப்பட்டிருக்கும். இன்ஜினில் அதற்குப் பொருந்தும் பற்சக்கரம் இருக்கும். அதாவது இரண்டு தண்டவாளங்களுக்கு இடையில் பற்கள் கொண்ட மூன்றாவது பட்டை இருக்கும். இன்ஜினின் பற்சக்கரம் அந்தப் பட்டையின் பற்களுடன் பொருந்தி இயங்கும். பற்சக்கரம் பட்டையின் பற்களைப் பிடித்துச் சுழல்வதால், சாதாரண சக்கரங்களின் உராய்வை மட்டும் நம்பாமல் ரயில் சரிவில் முன்னோக்கி பயணிக்கும்.திருமயிலை ரயில் நிலையத்தில் இருட்டுப் பள்ளம்.. தெரியாத ஆபத்து.. விஜயாவின் மரணம் எழுப்பும் கேள்விகள்
ரயில் கவுண்டர் டிக்கெட்டுக்கும் இன்சூரன்ஸ்.. அக். 27 முதல் சூப்பர் சர்ப்ரைஸ்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?