உளவுத்துறை ரிப்போர்ட்.. மதுராந்தகத்தில் தவெகவை தண்ணீர் குடிக்க வைத்த திமுக: வல்லம் பஷீர்
சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, தவெக தலைவர் விஜயின் அடுத்தடுத்த மாவட்டப் பயணங்கள் அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளன. இந்நிலையில், இடைத்தேர்தல் களம் திமுகவுக்கு சாதகமாகவும், தவெகவுக்கு வாழ்வா சாவா போராட்டமாகவும் இருக்கும் என்று திராவிட வெற்றி கழகத்தின் முதன்மைச் செயலாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நிறம் சேனலுக்கு பேட்டி தந்துள்ள வல்லம் பஷீர், "உண்மையிலேயே இடைத்தேர்தல் களம் திமுகவுக்குக் கடினமானது இல்லை. போனஸ்தான்.. திமுக இழப்பதற்கு ஒன்றுமில்லை. பெறுவதற்கு ஆயிரம் இருக்கின்றன. ஆனால், இது தவெகவுக்கு மிகவும் கடினமான களம். தவெகவுக்கு இது வாழ்வா, சாவா என்ற போராட்டம்.

மதுராந்தகம், தாராபுரம்
மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் வெற்றி பெற்றுவிட்டோம் என்று தவெக நினைக்கிறது. ஆனால், அந்த வெற்றியை பெற விஜய் எவ்வளவு பாடுபட்டார் என்பது அவருக்குத்தான் தெரியும். விடுமுறைக்கு டூர் சென்றால்கூட லண்டனில் ஞாயிற்றுக்கிழமை ஓய்வெடுப்பவர் விஜய். அப்படிப்பட்டவர் வரலாற்றில் முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை வீதிக்கு வந்து வாக்கு சேகரித்தார்.
தலைமை செயலகத்திலிருந்து மாலை 5 மணிக்குப் புறப்படும் வாகனம், 6 மணிக்குள் அவரது வீட்டுக்குள் நுழைந்துவிடும். ஆனால், இப்போது மாலை 6 மணிக்குப் பிறகும் வீதிக்கு வந்து ஒவ்வொருவரையும் சந்தித்து வாக்குக் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அங்கு கிடைத்ததை போன்ற வெற்றி இங்கு கிடைக்காது. களம் மாறிவிட்டது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.
எதுக்காக புதுக்கோட்டை
சமிக்ஞையின் அடிப்படையில்தான் திடீரென திருநெல்வேலிக்குப் பயணம், புதுக்கோட்டைக்குப் பயணம் என தவெகவில் செல்கிறார்கள்.. இப்போது அடுத்து கரூருக்கும், ஈரோட்டுக்கும் பயணம் செய்யத் தயாராகி வருகிறார்கள்..
அப்படியென்றால், இடைத்தேர்தலுக்கான பிரச்சாரமாகத்தானே இதைப் பயன்படுத்துகிறீர்கள்? இல்லாவிட்டால், நலத்திட்ட உதவிகளை சென்னையில் ஏன் தொடங்கி வைக்கவில்லை? காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஏன் தொடங்கி வைக்கவில்லை? அப்படியென்றால், இடைத்தேர்தல் பயம்தானே காரணம்? எனவே, நூற்றுக்கு நூறு விழுக்காடு விஜய் தொடங்கியிருப்பது இடைத்தேர்தலுக்கான முன்னோட்டப் பணிகள்தான்.
தாராபுரம் - முருங்கைக்காய்
திமுகவுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. பெறுவதற்கு ஆயிரம் இருக்கின்றன,, வெற்றி கிடைத்தால் போனஸ். கிடைக்காவிட்டாலும் நஷ்டம் இல்லை. அதேநேரத்தில், அதிமுக தேர்தல் களத்தில் நின்று பணியாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், திண்டுக்கல் சீனிவாசன் கூறுவதைப் பார்த்தால் அதிமுக அந்த அளவுக்குப் பலவீனப்பட்டிருக்கிறது.
பாஜகவுடன் கூட்டணி
கடந்த காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று எவ்வளவோ எச்சரித்தோம். நிதிஷ்குமாரின் அரசியல் நகர்வுகளையும் ஆதாரமாக எடுத்துக் கூறினோம். எடப்பாடி பழனிசாமி தனது பலத்தை அறியாமல், இயக்கத்தின் வீழ்ச்சியைப் புரிந்துகொள்ளாமல் பாஜகவின் உத்தரவுக்காகக் காத்திருந்தார். அதன் விளைவாக இன்று அந்தக் கட்சி இந்த நிலைக்குச் சென்றிருக்கிறது.
இப்போது இந்த இடைத்தேர்தல் குறித்த அச்சம் விஜய்க்கு ஏற்பட்டிருக்கிறது.. உளவுத்துறையின் அறிக்கை மிகவும் தெளிவாக இருக்கிறது. கரூரில் மு.க. ஸ்டாலினைப் போட்டியிடுங்கள் என்று செந்தில் பாலாஜி அழைக்கிறார். களத்தில் அவருக்கு சாதகமான நிலை தெரிந்திருக்கிறது. இதை உளவுத்துறை தெரிவிக்காதா? நிச்சயமாக தெரிவிக்கும்.
அம்பாசமுத்திரத்தில் சீமான்
அம்பாசமுத்திரத்தில் சீமான் பொதுவேட்பாளர் என்ற செய்தியைப் பரப்புகிறார்கள். ஆனால், திமுக தரப்பில் அப்படியொரு பேச்சே நடைபெறவில்லை. அம்பாசமுத்திரத்தில் திமுக வெற்றி பெற்றுவிடும் என்பது உளவுத்துறையின் அறிக்கை. இதைத் திசைதிருப்பவும், திமுகவுக்குள் சோர்வை ஏற்படுத்தவும் இப்படிப்பட்ட வேலைகளைச் செய்கிறார்கள்.
முதலமைச்சர் ஏன் திடீரென புதுக்கோட்டைக்குச் செல்கிறார்? காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்குச் சென்றாரா? செல்லவில்லை. ஆனால், திருநெல்வேலி, கரூர், ஈரோடு என இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் பகுதிகளுக்குச் செல்கிறார். இடைத்தேர்தலுக்கான பணிகளை விஜய் முன்கூட்டியே தொடங்கிவிட்டார். டெல்லியில் இருந்து அவருக்கு தகவல் கிடைத்துவிட்டது.
தண்ணீர் குடிக்க வைத்த திமுக
ஏற்கனவே மதுராந்தகத்தில் அவரைத் திமுக தண்ணீர் குடிக்க வைத்துவிட்டது. 10 நிமிடங்களில் கொத்துப் பரோட்டா போட்டுவிடுவேன் என்று கூறியவர் என்ன ஆனார்? திமுக அவரை டீ ஆற்ற வைத்துவிட்டது. இப்போது வீதியில் இறங்கி டீக்கடை வைத்துத் தேநீர் ஆற்றிக்கொண்டிருக்கிறார்.
இதைவிடப் பெரிய கொடுமை என்ன தெரியுமா? தாராபுரத்தில் முருங்கைக்காய் பறிக்க வைத்துவிட்டார்கள். ஹெலிகாப்டரில் வந்து, மாட்டு வண்டியில் சென்று முருங்கைக்காய் பறித்த ஒரே முதலமைச்சர் இவர்தான். உலகத்தில் வேறு யாரும் இப்படி இருந்திருக்க மாட்டார்கள். அத்தகைய பெருமை நம்முடைய ஜோசப் விஜய்க்கு மட்டும்தான் உண்டு" என்றெல்லாம் கருத்து தெரிவித்துள்ளார்.




Click it and Unblock the Notifications
