ஜெகதீஸ்வரியின் தடுமாற்றம்.. மாறிய டேட்டா.. எல்லாத்துக்கும் ஒரே பதில்? குறுக்கே டிப்ஸ் தந்த சபாநாயகர்

  • சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பது என்பது சாதாரண நிகழ்வோ, சம்பிரதாயமோ கிடையாது.. குறிப்பாக எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு தெளிவான பதிலையும், சம்பந்தப்பட்ட புள்ளிவிவரங்களையும் முன்வைப்பது அமைச்சர்களின் முக்கியமான பொறுப்பு. ஆனால், அமைச்சர் ஜெகதீஸ்வரியின் நேற்றைய செயல்பாடு இப்போது வரை சோஷியல் மீடியாவில் விவாத பொருளாக மாறியுள்ளது.

    Advertisement

    நேற்றைய தினம், சட்டமன்ற பேரவை வினாக்கள்-விடைகள் நேரத்தில் குடியாத்தம் தொகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்கள் தொடர்பாக தவெக சட்டமன்ற உறுப்பினர் சிந்து முக்கியமான கோரிக்கையை முன்வைத்தார்.

    Advertisement

    டேட்டாவை மாற்றி படித்தாரா ஜெகதீஸ்வரி

    தொகுதியில் பெரும்பாலான அங்கன்வாடி மையங்கள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருவதால், குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும், அரசு சார்பில் சொந்தக் கட்டடங்கள் கட்டித்தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இதற்கு பதிலளிக்க எழுந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு தொடர்புடைய தகவலை சொல்வதற்கு பதிலாக, சம்பந்தமேயில்லாமல் வேறொரு டேட்டாவை வாசிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. பிறகுதான், நாம் வேறு எதையோ எடுத்து வைத்து கொண்டு படிக்கிறோம் என்பதை உணர்ந்த அமைச்சர், எம்எல்ஏ சிந்துவின் கேள்விக்கு பதிலளிப்பதில் சிரமப்பட்டார்.

    Advertisement

    அவரது சிரமத்தை அறிந்த பேரவைத் தலைவர் உடனே குறுக்கிட்டு, உறுப்பினரின் கோரிக்கையை குறிப்பெடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சருக்கு அறிவுறுத்தினார்.

    குறுக்கிட்ட சபாநாயகர்

    பேரவையில் அடுத்தடுத்து எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அமைச்சர் ஒரே மாதிரியான பதில்களையே தொடர்ந்து சொன்னதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதனால், கேள்விகளுக்கு குறிப்பிட்ட பதில் கிடைக்க வேண்டும் என எதிர்பார்த்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அவை நடவடிக்கைகளை கவனித்தவர்களுக்கும் இது கவனம் ஈர்க்கும் விஷயமாக மாறியுள்ளது.

    ஏற்கனவே அமைச்சரின் உரையில் சில தமிழ் வார்த்தைகளை தடுமாறி வாசித்ததாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. தளபிதியார், பேரவர் தலைவர், வடிக்கப்பட்ட, இலக்கங்கள், அரிமை கருதி, உயரம் குறித்த இப்படியெல்லாம் தமிழை கடித்து கடித்து குதறியதாக கமெண்ட்கள் இணையத்தில் வெடித்து கிளம்பி உள்ளன.. இந்த வார்த்தைகளையும் சபாநாயகர்தான் குறுக்கிட்டு திருத்தினார். இப்போது கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதும் ஏற்பட்ட குழப்பம் தொடர்பான வீடியோக்களும் வேகமாக பரவி வருகின்றன.

    Advertisement

    முக்கியம் வாய்ந்த சமூகநலத்துறை

    எந்தவொரு அமைச்சர் பேசும்போதும், ஒரு சில வார்த்தைகளில் தடுமாறுவது மட்டும் அரசியல் செயல்பாட்டின் அளவுகோல் கிடையாது.. அதேநேரத்தில், சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சரியான தகவல்களுடன், குறிப்பிட்ட பதிலை வழங்குவது மிகவும் முக்கியம். முக்கியமாக சமூக நலத்துறை போன்ற நேரடியாக மக்களை சென்றடையும் துறையை கவனிக்கும் அமைச்சரிடம் இதுபோன்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே அதிகமாக இருக்கும்.

    இந்த விவகாரத்தில், சோஷியல் மீடியா விமர்சனங்களை தாண்டி நாம் பார்க்க வேண்டிய முக்கியமான கேள்வி ஒன்றுதான்... சட்டப்பேரவையில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் துறை சார்ந்த முழுமையான தகவல்களுடன் அமைச்சர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதே அது...

    Advertisement

    விமர்சனங்களை கடந்து, அடுத்தடுத்த பேரவை அமர்வுகளில் அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது பதில்களில் தெளிவையும் துல்லியத்தையும் காட்டுவாரா என்பதுதான் தற்போது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது..!!

    English Summary

    Jeyadeeswari Stumbles in Assembly.. Wrong Data, Same Answer to Every Question? Speaker Steps In