லாட்ஜில் சிக்கிய 53 வயது சென்னை அதிகாரி.. போதை தெளிந்து கண் விழித்து பார்த்தால்? யார் அந்த பெண்?

  • சென்னை: லாட்ஜ்களுக்கு வரவழைத்து.. மது அருந்த வைத்து.. போதையில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் செய்து ஆண்களை குறிவைக்கும் மோசடி நடக்கிறது. ஆன்லைன் டேட்டிங் செயலிகள், புதுப்புது அறிமுகங்கள் என மோசடிக்கான வழிகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அப்படி சிக்கிய சென்னையைச் சேர்ந்த நபரின் புகார், போலீசாரை பெங்களூரு வரை செல்ல வைத்திருக்கிறது.

    Advertisement

    சென்னையை அடுத்த குரோம்பேட்டையை சேர்ந்தவர் அந்த முன்னாள் தனியார் நிறுவன அதிகாரி.. இவருக்கு 53 வயதாகிறது.. சுமார் 15 நாட்களுக்கு முன்பு டேட்டிங் ஆப் மூலம் ஒரு பெண் இவருக்கு அறிமுகமாகியுள்ளார்.

    Advertisement

    பெங்களூரில் வசித்து வந்த அந்த பெண், குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 48 வயது கஞ்சன் லதா சிங் ஆவார்.. டேட்டிங் செயலியில் தொடங்கிய இந்த பழக்கம், பிறகு வாட்ஸ்அப் சேட்டிங் வரை சென்றுள்ளது. கஞ்சன் லதா சிங் மட்டுமல்லாமல் இன்னொரு பெண்ணுடனும் அதிகாரி தொடர்ந்து பேசி பழகி வந்துள்ளார்.

    லாட்ஜில் ஏமாந்த அதிகாரி

    இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி ஆலந்தூரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தாங்கள் தங்கியிருப்பதாகக் கூறி அந்த 2 பெண்களும் அவரை அழைத்துள்ளனர். இதையடுத்து அவரும் அங்கு சென்றுள்ளார். அங்கு 2 பெண்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். மது போதையில் இருந்த அவர் சிறிது நேரத்தில் தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

    Advertisement

    பிறகு இரவு நேரத்தில் கண்விழித்துப் பார்த்தபோது, அங்கிருந்த 2 பெண்களையும் காணவில்லையாம்.. அவர்கள் எப்போது வெளியே சென்றார்கள் என்பதும் அதிகாரிக்கு தெரியவில்லை. அதுமட்டுமல்ல, கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியும், வைத்திருந்த ரூ.4 ஆயிரம் பணமும் காணாமல் போயிருந்தது.

    ஓட்டலில் லதா சிங் எஸ்கேப்

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பரங்கிமலை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான பெண் தன்னை ஓட்டலுக்கு வரவழைத்து, மது குடிக்க வைத்து, தான் போதையில் தூங்கிய பிறகு நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றிருக்கலாம் என புகாரில் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரி கேட்டுக்கொண்டார்.

    Advertisement

    இதையடுத்து பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் பசுபதி தலைமையில் குற்றப்பிரிவு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கஞ்சன் லதா சிங் குறித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் பெங்களூரில் தங்கியிருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூருக்கு சென்று கஞ்சன் லதா சிங்கை கைது செய்தனர். பிறகு அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணையும் மேற்கொண்டனர்..

    முதல்முறையாக கைது

    போலீஸ் விசாரணையில், கஞ்சன் லதா சிங் மீது இதேபோன்ற குற்றச்சாட்டுகள் பல இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களுடன் முதலில் அறிமுகமாகி, அவர்களிடம் நெருக்கமாக பழகி, பின்னர் தனிமையான இடங்களுக்கு வரவழைத்து மது அருந்தச் செய்வாராம், அவர்கள் போதையில் தூங்கிய பிறகு நகை, பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிடுவதே லதா சிங்கின் வழக்கமாக இருந்திருக்கிறது..

    Advertisement

    இதனால் கஞ்சன் லதா சிங் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், அவரை பிடிக்க காவல்துறையும் முயன்றுள்ளது.. ஆனால், இதுவரை யாரிடமும் சிக்காமல் எஸ்கேப் ஆகி வந்த நிலையில், இப்போது முதல் முறையாக பரங்கிமலை குற்றப்பிரிவு போலீசார் லதா சிங்கை கைது செய்துள்ளனர்.

    யார் அந்த இன்னொரு பெண்

    இதையடுத்து கஞ்சன் லதா சிங்கை ஆலந்தூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி அவர் ஜெயிலில் அடைத்துள்ளனர்..

    ஆனால், இந்த வழக்கில் இன்னும் சில கேள்விகளுக்கு போலீசார் விடை தேடி வருகின்றனர். குறிப்பாக, கஞ்சன் லதா சிங்குடன் வந்த இன்னொரு பெண் யார், அவர் இப்போது எங்கு இருக்கிறார், இந்த சம்பவத்தில் அவருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அதேபோல், இதுபோன்ற சம்பவங்களில் மேலும் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா, இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதையும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்...!!!

    English Summary

    Lodge Trap in Chennai.. 53 year old Man Wakes Up After Drinking.. Who Was the Woman He Met Through a Dating App?