விஜயனின் செல்போனை பிடுங்கி.. நள்ளிரவு விசாரணையா? ஊடகப் பணியாளர்களுக்காக சீறிய தவாக வேல்முருகன்

  • சென்னை: "பத்திரிகையாளர் விஜயன் மீது நடைபெற்று வரும் விசாரணை முழுமையான சட்ட நடைமுறைகளின் அடிப்படையில், வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். அவரிடம் கைப்பற்றப்பட்டுள்ள கைப்பேசி குறித்து சட்டப்படி தேவையான விளக்கத்தை உடனடியாக வழங்கி, சட்டத்திற்குப் புறம்பான நடைமுறைகள் ஏதேனும் இருந்தால் அதை சரி செய்ய வேண்டும்" என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Advertisement

    இது தொடர்பாக தவாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராகப் பணியாற்றி வரும் பத்திரிகையாளர் திரு. விஜயன் அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா அளித்த புகார் தொடர்பான விசாரணைக்காக, சிறப்பு புலனாய்வுக் குழுவால் அழைக்கப்பட்ட நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் கடும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

    Advertisement

    புதிய தலைமுறை விஜயன்

    விசாரணைக்கு ஒத்துழைத்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜரான திரு விஜயனைப் பல மணி நேரம் கேள்வி கேட்டதோடு நிற்காமல், நள்ளிரவில் மீண்டும் வருமாறு அழைத்து, உரிய நடைமுறைகள் குறித்த வெளிப்படையான விளக்கமின்றி அவரது கைப்பேசியைக் கைப்பற்றியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகுந்த கவலைக்குரியவை.

    அதனைத் தொடர்ந்து மீண்டும் விசாரணை என்ற காரணத்தால் அழைத்து, நீண்ட நேரம் காவல் நிலையத்திலேயே வைத்திருப்பதாகக் கூறப்படுவதும் ஜனநாயக நடைமுறைகள் குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.

    பத்திரிகையாளர் உரிமை

    குற்றப்புலனாய்வு மேற்கொள்வதற்கான அதிகாரம் காவல்துறைக்கு இருப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அந்த அதிகாரம் சட்ட வரம்புகளுக்குள், மனித உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளையும் மதித்தே பயன்படுத்தப்பட வேண்டும். சட்டத்தை அமல்படுத்தும் அமைப்பே சட்ட நடைமுறைகளைப் புறக்கணிக்கிறது என்ற எண்ணம் மக்களிடையே உருவாகக் கூடாது.

    Advertisement

    ஒரு பத்திரிகையாளரின் தகவல் தொடர்பு சாதனத்தை கைப்பற்றுவது என்பது அவரது தனிப்பட்ட உரிமையோடு மட்டுமல்ல. ஊடகத்தின் சுதந்திரமான செயல்பாடு, செய்தி மூலங்களின் பாதுகாப்பு மற்றும் கருத்துரிமை ஆகியவற்றுடனும் நேரடியாக தொடர்புடையது. எனவே, இத்தகைய நடவடிக்கைகளை மிகுந்த பொறுப்புணர்வுடனும், சட்டப்பூர்வமானக் காரணங்களுடனும் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

    வேல்முருகன் கோரிக்கை

    பத்திரிகையாளர் திரு. விஜயன் அவர்கள் மீது நடைபெற்று வரும் விசாரணை முழுமையான சட்ட நடைமுறைகளின் அடிப்படையில், வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். அவரிடம் கைப்பற்றப்பட்டுள்ள கைப்பேசி குறித்து சட்டப்படி தேவையான விளக்கத்தை உடனடியாக வழங்கி, சட்டத்திற்குப் புறம்பான நடைமுறைகள் ஏதேனும் இருந்தால் அதை சரி செய்ய வேண்டும்.

    Advertisement

    மேலும், விசாரணை என்ற பெயரில் ஊடகப் பணியாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்ற சந்தேகத்திற்கு இடமளிக்கும் செயல்கள் இனிமேல் நடைபெறாதவாறு முதலமைச்சர் திரு.விஜய் அவர்கள் உரிய அறிவுறுத்தல்களை காவல் துறைக்கு வழங்க வேண்டும்.

    பத்திரிகைச் சுதந்திரம் என்பது ஊடகங்களுக்கான உரிமை மட்டுமல்ல. உண்மையை அறியும் மக்களின் ஜனநாயக உரிமையும் ஆகும். அந்த உரிமையை பாதிக்கும் எந்த செயலையும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஏற்றுக் கொள்ளாது என்பதை, இவ்வரிக்கையின் மூலம் வலியுறுத்துகிறேன். " என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    English Summary

    Media Outrage Over Vijayan's Phone Seizure! TVK Velmurugan Demands Action From CM Vijay