சென்னை: 2024-இல் ஒளிபரப்பான நேர்காணல் ஒன்றில் பெண் தொகுப்பாளர் மாலினி பற்றி அவதூறாகப் பேசியதற்காக, பத்திரிகையாளர் 'நக்கீரன்' பிரகாஷை சென்னை நகரக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆதம்பாக்கம் காவல்துறையினர், இன்று காலை கைது செய்ததுடன், அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மாலதி (38 வயது) என்பவர் தனி நபர் நடத்தி வரும் 'சவுக்கு மீடியா' என்ற யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாக பணி செய்து வருவதாகவும் வார பத்திரிகையின் நிருபர் தாமோதரன் பிரகாஷ் என்பவர் பெயர் தெரியாத ஒரு நெறியாளருடன் சேர்ந்து, 'HIV சவுக்கு மாலதியும் கல்யாணம்' என்ற தலைப்பில், மாலதியை பற்றி அவதூறாகவும், அவருக்கு HIV உள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் மாலதியின் புகைப்படத்தை காண்பித்து, தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பொய்யாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் வீடியோ பதிவிட்டு கடந்த ஜனவரி-2026 மாதம் "கிங் 24 X 7" என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டு, பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டுள்ளதால், மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாலதி என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act), தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இப்புகார் தொடர்பாக S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி வழக்கில் தொடர்புடைய தாமோதரன் பிரகாஷ், (58 வயது) த.பெ.தாமோதரன், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை என்பவரை இன்று (16.09.2026) கைது செய்து, தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்" இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த பத்திரிக்கையாளரான தாமோதரன் பிரகாஷ் அண்மை காலங்களில் முதல்வர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தார். அதேபோல் நடிகை திரிஷா குறித்தும் கடைசியாக கடுமையான முறையில பதிவுகளை போட்டு வந்தார். லண்டனில் முதல்வர் விஜய்யின் பயணம் குறித்தும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த சூழலில் 2024ம் ஆண்டு சவுக்கு மீடியா மாலதி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தவெக ஆதரவாளர்கள் தாமோதரன் பிரகாஷ் கைதை கொண்டாடி பதிவிட்டு வருகிறாரகள். அதேநேரம் தாமோதரன் பிரகாஷ் கைதுக்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளது.