நாலைஞ்சி "சீன்" மட்டும்தான் நல்லா இருக்கு.. இயக்குநர்களிடம் ஏமாறாமல், சூர்யா சுதாரிக்கனும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையாளி ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, லால் மற்றும் சில, பல மலையாளிகள் நடித்து வெளியான தமிழ் திரைப்படமான "சீன்" 145 கோடியை வசூலித்துவிட்டது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சூர்யா-ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் லகரம் ஸ்டூடியோஸ் அறிவித்திருந்தாலும், படம் பார்த்த ரசிகர்கள் என்னவோ மறுமுறை தியேட்டர் பக்கம் தலைவைத்து படுக்க யோசிக்கிறார்கள்.

படம் எப்படி?

சீன் திரைப்படம் ஆரம்பித்ததுமே டிஎஸ்பி இன்பராஜ் நல்லவரா கெட்டவரா என்ற ரேஞ்சில் இரு போலீஸ்காரர்கள் ஒன்றுகூடி பிளாஷ்பேக்கை சொல்லி சொல்லி பட்டிமன்றம் நடத்துகிறார்கள். எப்போதும் புகை பிடிப்பவராய், பிறரிடம் அதிகார தோரணை காட்டுபவராக அவரது கதாப்பாத்திரத்தை சித்தரிக்கிறார்கள். போலீஸ்காரராக இருந்து கொண்டு ஏன் இப்படி நெகட்டிவ் ஷேடில் வருகிறார். பேண்ட்டில் ஏன் ஒரு சாவிக் கொத்தை தொங்கவிட்டுக்கொண்டு தட்டியபடியே வருகிறார், எல்லோரிடமும் ஏன் எரிந்து விழுகிறார் என்பது குறித்த பின்னணி ட்விஸ்ட் படம் ஆரம்பித்து 20 நிமிடங்களில் அவிழ்க்கப்படுகிறது. அதுவரை ஜெட் வேகத்தில் போன படமும் அதன்பிறகு படுக்க ஆரம்பிக்கிறது.

Scene movie

சீரியசாக கொண்டுபோயிருக்கலாம்

சீரியல் கில்லர் ஜெயிலுக்குள் இருக்கும்போது, அதே பாணியில் வெளியே ஒருவன் கொலை செய்கிறான் என்றால் அவன் யாராக இருக்கும் என்று போலீஸ் கண்டுபிடிப்பதுதான் கதை. இதை வழக்கமான மலையாள த்ரில்லர் பாணியில் கொண்டு சென்றிருந்தால் இன்னொரு ராட்சசன் மாதிரியோ, போர் தொழில் மாதிரியே படத்தை மாற்றியிருக்கலாம். ஆனால் விசாரணை வேகம்பிடிக்கும்போதெல்லாம் அதற்கு ஸ்பீடு பிரேக்கர் போடும் வகையில் இன்பராஜின் அப்பா, அம்மா கதாப்பாத்திரங்களையும், சில போலீஸ்காரர்கள் கதாப்பாத்திரங்களையும் கொண்டுவந்து தனக்கு தானே சூனியம் வைத்துள்ளார் ஜித்து.

சூர்யா பெற்றோர் கதாப்பாத்திரம்

சூர்யாவின் அப்பா, அம்மா, கதாப்பாத்திரங்கள் சுத்த அபத்தம். மெமரி லாஸ் பிரச்சினை உள்ளவராக அப்பா ஆனந்தராஜின் கதாப்பாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது கூட நகைச்சுவைக்காக ஓகே என வைக்கலாம், ஆனால் நல்ல புலனாய்வு அதிகாரி என அறிமுகப்படுத்தப்படும் அம்மா கதாப்பாத்திரம் ஏன் கள்ளச்சாராயம் காய்ச்சி, குடித்தே தனது வாழ்க்கையை வீண் செய்கிறது. இப்படி அதை சித்தரிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தூக்கத்தில் இந்த கேரக்டரை வடித்த இயக்குநருக்கே வெளிச்சம்.

நஸ்ரியா ஷார்ப்

அம்மா, அப்பா கதாப்பாத்திரங்களையும், குறைபாடுள்ளவராக இருந்தாலும் ஷார்ப்பான நபர்கள் என காட்டினால் போதுமே. நஸ்ரியா அப்படித்தானே காட்டப்பட்டார். அதற்கு எத்தனையே வழிகள் உள்ளன. வில்லனை ஹீரோ கெஸ் செய்யும் காட்சிகள், வில்லன் எப்படி இருப்பான் என்று ஹீரோவின் அப்பா, அம்மா கெஸ் செய்து விவரிக்கும் காட்சிகள் என சில சீன்கள் சீன் படத்தில் நன்றாக உள்ளன. ஆனால் அதே வேகத்தை திரைக்கதையின் மற்ற காட்சிகளுக்கு கடத்தாமல் தானே தனக்கு வேகத்தடை போட்டு படத்தை பயணிக்க வைத்து கடுப்பேற்றியுள்ளார் இயக்குநர் ஜித்து.

லாஜிக் இல்லை

படத்தில் ஏகப்பட்ட லாஜிக் பிரச்சினைகள். எந்த அளவுக்கு என்றால், எதிரிகளால் ஆபத்து சூழ்ந்துள்ள ஹீரோ துப்பாக்கியை கரண்ட் பாக்ஸ் உள்ளே வைத்திருக்கும் அளவுக்கு. அதை கையில் வைத்திருந்தால் என்ன பிரச்சினை? ஹீரோவுக்கு இவ்வளவு பெரிய குறைபாடு இருக்கும் நிலையில், அவருக்காக போலீஸ்காரர்கள் வேலை பார்க்கிறார்கள் என்பதெல்லாம் யதார்த்த சினிமா எடுத்த மலையாள பின்புலத்திலிருந்து வந்த ஜித்துவிடம் எதிர்பார்க்காத ட்விஸ்ட். ஹீரோ, நஸ்ரியாவை தனது விழியாக பாவித்து ட்ரெயினிங் எடுக்கும் காட்சிகள் எத்தனை மணி நேரத்திற்குதான் காட்டிக்கொண்டே இருப்பீர்கள் என்ற கேள்வியும் பக்கத்து இருக்கையில் இருந்து வந்து விழுந்தது.

சூர்யா சுதாரிக்க வேண்டும்

கருப்பு திரைப்படம் சூர்யாவிற்கு திருப்பத்தை கொடுத்தது. என்னதான் எஸ்.ஜே. பாலாஜி எடுக்கத் தெரியாமல் படத்தை எடுத்து வைத்திருந்தாலும், கருப்பனின் அருளால் கருப்பு படம் சக்கை போடு போட்டது. அதே சூட்டோடு விஸ்வநாதன் சன்ஸ் வந்தது. மமிதா பைஜுவும் கை கொடுக்க, சூப்பர் படம் என்று சொல்ல முடியாவிட்டாலும், பார்க்கும் அளவுக்கான படம் என்பதால் அதுவும் சக்சஸ் ஆனது. சீன் சக்சஸ் ஆனதாக படக்குழு கூறுகிறது, தியேட்டர்களுக்கு வரும் கூட்டமும் அதையே சொல்கிறது. ஆனால் நல்ல நேரத்தால் தப்பிக்கும் சூர்யா, உடனே சுதாரித்துக்கொள்ள வேண்டும். ஓங்கியடித்தால் ஒன்றரை டன் வெயிட்டுடா என்ற சூர்யா ரசிகர்களின் நாடி நரம்பில் ஊறிய டயலாக்கை ஜித்து மாதவன்தான் கேலியாக காட்சியமைக்க சொல்லியிருந்தாலும் சூர்யா எப்படி ஏற்றுக்கொண்டிருக்கலாம். பார்வையற்றோர் படும் கஷ்டங்களை காமெடியாக காட்டக்கூடாது என்றாவது சூர்யா சொல்லியிருக்கலாமே. அது எஸ்.ஜே.பாலாஜியோ, ஜித்துவோ, சூர்யா இயக்குநர்களின் பணியில் தலையிடவில்லை என்பதைத்தான் படத்தின் அவுட்புட் காட்டுகிறது. ஆனால் சூர்யா ரசிகர்கள் அதை ஏற்க மாட்டார்கள். அவர்களுக்கு தேவை மாஸ் ஹீரோ. அதற்கான பற்றாக்குறை தமிழ் திரையுலகில் இப்போது அதிகமாக உள்ளது. சீன் மாதிரி ஓடிடியில் பார்க்கத்தக்க படங்களை எடுத்து துள்ளிக்குதிக்கும் தனது ரசிகர்களை தானே சோர்வாக்கிவிடக்கூடாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+