ஒரே ஓட்டில் தோற்ற பெரியகருப்பன்.. திருப்பத்தூருக்கு போன சிவகங்கை தபால் வாக்கு! திடீர் ட்விஸ்ட்!
சென்னை: திருப்பத்தூர் தவெக வேட்பாளர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க தடை கோரி, திமுக வேட்பாளர் பெரியகருப்பன் மனு மீதான விசாரணை நாளை காலை 10.30-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மாறியதாக எழுந்த புகார் மீது பதிலளிக்காதது ஏன்? என நாளை அறிக்கை தாக்கல் செய்ய தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை கடும் போட்டி நிலவியது. திமுக சார்பில் பலமுறை வெற்றி பெற்றிருந்த பெரியகருப்பன் மீண்டும் களமிறங்கினார். அவருக்கு எதிராக தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக சீனிவாச சேதுபதி போட்டியிட்டார்.

அதிமுக கூட்டணி சார்பில் பாஜக ஆதரவு வேட்பாளராக திருமாறன் போட்டியிட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் ரம்யா மோகன் களமிறங்கினார். மே 4ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே பெரியகருப்பனும் சீனிவாச சேதுபதியும் மாறி மாறி முன்னிலை பெற்றனர்.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி
ஒவ்வொரு சுற்றிலும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசம் மட்டுமே இருந்ததால், தொகுதி முழுவதும் கடும் பதற்றம் நிலவியது. கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கை சில நேரம் நிறுத்தப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் மீண்டும் எண்ணிக்கையை தொடங்கினர்.
பெரியகருப்பன்
இறுதியில், பெரியகருப்பன் 83,374 வாக்குகளும், சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளும் பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தமிழக தேர்தல் வரலாற்றிலேயே மிகவும் அரிதான முடிவுகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த முடிவை ஏற்க மறுத்த பெரியகருப்பன் தரப்பு, வாக்கு எண்ணிக்கையில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
பெரியகருப்பன் ரிட் மனு
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியகருப்பன் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், தபால் வாக்குகள் சரியாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும், சில வாக்குகள் வேறு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், மறுஎண்ணிக்கை முறையாக நடத்தப்படவில்லை என்றும், வாக்கு எண்ணிக்கை நடந்தபோது பதிவு செய்யப்பட்ட காணொளி ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, சீனிவாச சேதுபதி சட்டமன்றத்தில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதை தற்காலிகமாக தடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் விக்டோரியா கௌரி மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை கால சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது."திருப்பத்தூர் என்ற பெயரில் (எண்கள் 185, 50) என இரு தொகுதிகள் உள்ளன. ஒரு தபால் வாக்குச் சீட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனால் அங்கு அது நிராகரிக்கப்பட்டுள்ளது.அந்த வாக்குச்சீட்டை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பியிருக்க வேண்டும். அந்த வாக்கு எண்ணப்பட்டிருந்தால், இறுதி நிலவரம் மாறியிருக்கும்" என பெரிய கருப்பன் தரப்பு வாதத்தை முன் வைத்தது.
இதனை ஏற்ற நீதிபதிகள், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மாறியதாக எழுந்த புகார் மீது பதிலளிக்காதது ஏன்? என நாளை அறிக்கை தாக்கல் செய்ய தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications