ஜஸ்ட் மிஸ்.. கடைசி 4 பந்துகளில் நெருப்பாக மாறிய சிவம் துபே.. 42 டாட் பால்கள் ஆடிய சிஎஸ்கே!
லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 42 டாட் பால்களை ஆடி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடைசி 4 பந்துகளில் 2 சிக்ஸ், 2 பவுண்டரியை சிவம் துபே விளாசியதன் காரணமாக, சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களை குவிக்க முடிந்தது.
ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய கார்த்திக் சர்மா 42 பந்துகளில் 5 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 71 ரன்களை விளாசி இருக்கிறார்.

அதேபோல் கடைசி நேரத்தில் வந்த சிவம் துபே 16 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 32 ரன்களை விளாசினார். 7.2 ஓவர்களில் சிஎஸ்கே அணி 52 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் கார்த்திக் சர்மா மற்றும் பிரெவிஸ் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால், சிஎஸ்கே அணி வலிமையான ஸ்கோரை பதிவு செய்தது.
கடைசி ஓவருக்கு முன் 3 ஓவர்களில் சிஎஸ்கே அணி வெறும் 22 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் சிவம் துபே மீது சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஆனால் கடைசி ஓவரில் சிவம் துபே 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 23 ரன்களை விளாசினார். இதன் மூலமாக சிஎஸ்கே அணி 187 ரன்களை எட்டியது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி மொத்தமாக 42 டாட் பால்களை ஆடி இருக்கிறது.
லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் அதிகபட்சமாக 12 டாட் பால்களையும், ஆகாஷ் சிங் 11 டாட் பால்களையும், முகமது ஷமி 8 டாட் பால்களையும், பிரின்ஸ் யாதவ் 6 டாட் பால்களையும், ஷாபாஸ் அஹ்மத் 5 டாட் பால்களையும் வீசியுள்ளனர். இதனால் சிஎஸ்கே அணி வீரர்கள் டாட் பால்கள் ஆடுவதை குறைக்க வழியை பார்க்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கடைசி 4 பந்துகளில் மட்டும் சிவம் துபே அதிரடியாக ஆடி ரன்களை சேர்க்கவில்லை என்றால், இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்திருக்கும். மிடில் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக ஆடி இருந்தாலும், கொஞ்சம் டாட் பால்கள் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications