காத்திருந்து காத்திருந்து..திறக்காத பனையூர் கேட்! வேதனையில் விஜயபாஸ்கர்! CVSக்கு போனை போட்ட எடப்பாடி
சென்னை: அதிமுகவில் இருந்து விலகி, விராலிமலை எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தவெகவில் சேரும் தேதி உறுதியாகாமல் இன்னும் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய அவர் தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில், தவெக கட்சி தலைமையிலிருந்து இதுவரை சிக்னல் கிடைக்கவில்லை. இந்நிலையில் சிவி சண்முகத்தை அழைத்துச் செல்ல அவர் திட்டமிட்டுள்ளாராம்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள், கட்சி தாவல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அந்த வரிசையில் அதிகம் பேசப்படும் பெயர்களில் ஒன்றாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சி. விஜயபாஸ்கர் பெயர் உள்ளது.
அதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு அவர் முதலில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் கட்சியிலிருந்தும் விலகினார். அதன் பின்னர் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் எனஇரு தரப்புடனும் அவர் தொடர்பில் இருந்ததாக புதுக்கோட்டை வட்டாரங்களில் பேசப்பட்டது.

சி விஜயபாஸ்கர்
முதற்கட்டமாக திமுகவில் இணைய திட்டமிட்டதாக கூறப்பட்டாலும், அதற்கான சூழல் சாதகமாக அமையவில்லை என தகவல்கள் வெளியாகின. அதையடுத்து அவரது முழு கவனமும் தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் திரும்பியது. குறிப்பாக விராலிமலை தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதே அவரது ஐடியாவாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம்
ஆனால், சி. விஜயபாஸ்கரை கட்சியில் இணைப்பது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தில் ஒருமித்த கருத்து இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைவரும் முதல்வருமான விஜய்க்கு நெருக்கமான ஆலோசகர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜான் ஆரோக்கியசாமி, விஜயபாஸ்கரை கட்சியில் சேர்க்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
புஸ்ஸி ஆனந்த்
இருப்பினும் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் மூலம் விஜயபாஸ்கர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் 29-ஆம் தேதி அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல்வர் விஜய் முன்னிலையில்தான் இணைய வேண்டும் என்பதில் விஜயபாஸ்கர் உறுதியாக இருந்தாராம்.
விஜய்
இதற்கிடையில் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெற்றதால், அந்த நிகழ்வில் முதல்வர் விஜய் பங்கேற்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக திட்டமிடப்பட்டிருந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை. பின்னர் ஜூலை 2-ஆம் தேதிக்கு புதிய தேதி கோரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த தேதிக்கும் இதுவரை தமிழக வெற்றிக் கழக தரப்பில் இருந்து உறுதியான தகவல் எதுவும் வரவில்லை என கூறப்படுகிறது.
மாவட்டச் செயலாளர்கள்
இதனால் சி. விஜயபாஸ்கரின் கட்சி இணைப்பு மீண்டும் தள்ளிப்போயுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்கிடையில், தனியாக கட்சியில் சேர்வதற்குப் பதிலாக, அதிமுகவில் தன்னுடன் நெருக்கமாக உள்ள சில மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளையும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைத்து செல்லும் முயற்சியில் விஜயபாஸ்கர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சி.வி.சண்முகம்
இதன் மூலம் இடைத்தேர்தலுக்கு முன்பே தனது அரசியல் பலத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே அவரது திட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது. விஜயபாஸ்கருடன் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற தகவல்களும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகின்றன. சமீபத்தில் அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டபோதும், சி.வி.சண்முகத்திற்கு எந்த முக்கியப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
இந்த சூழலில், சி.வி.சண்முகத்தை தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்ல விடக்கூடாது என்பதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதிமுக வட்டாரங்களில் கூறப்படுவதாவது, எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்து மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிய சில நிர்வாகிகளுடன் விஜயபாஸ்கர் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாம். குறிப்பாக சி.வி.சண்முகமும் அவருடன் சேர்ந்து வெளியேறலாம் என்ற தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அதிமுக
இதையடுத்து, சி.வி.சண்முகத்துடன் நேரடியாக பேசி அவரை சமாதானப்படுத்த எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருவதாகவும், பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும், சி.வி.சண்முகம் அவரது அழைப்புகளுக்கு பதில் அளிக்கவில்லை என்றும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால், சி. விஜயபாஸ்கரின் தமிழக வெற்றிக் கழக இணைப்பு எப்போது நடைபெறும், அதேபோல் சி.வி.சண்முகத்தின் அடுத்த அரசியல் முடிவு என்ன என்பதுதான் தற்போது அதிமுகவில் அதிகம் பேசப்படும் தகவலாக மாறியுள்ளது.














Click it and Unblock the Notifications