வார்த்தையை விட்ட வைகோ.. வசமாக பிடித்துக்கொண்ட திமுக! விஜய்யை இறங்கி அடிக்கும் எதிர்க்கட்சிகள்
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ள மதிமுக, விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை பொதுக்குழுவில் மதிமுக எடுத்தது. அப்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசிய ஒரு கருத்து, முதல்வர் விஜய்யின் தவெகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக தவெக மீது தொடர்ந்து எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் நிலையில், வைகோ சொன்ன ஒரு கருத்து எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை மேலும் வலுவாக்குவது போல் அமைந்துள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் தவெக 108 இடங்களை வென்றது. திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்ற தவெக ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றன. தவெக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்ததையடுத்து, அதிமுகவில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சூட்டோட்டு சூடாக தவெகவில் இணைந்தனர்.

வைகோ பேசிய கருத்து
தவெக அப்பட்டமான குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் அப்போதில் இருந்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்த நேரத்தில்தான் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல, வைகோவின் ஒரு பேச்சு தவெகவிற்கு மேலும் பிரஷரை கொடுத்துள்ளது. மதிமுக பொதுக்குழுவின் முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில், மதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ-க்களாக இருக்கும் இருவர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தால் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. அதற்குப் பதிலளித்த வகோ, அவர்கள் ராஜினாமா செய்யும் பட்சத்தில், இடைத்தேர்தலில் அவர்களை மீண்டும் வெற்றி பெற வைக்க வேண்டியது தன்னுடைய பொறுப்பு என விஜய் உத்தரவாதம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
எம்.எம். அப்துல்லா கேள்வி
தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதற்கான ஒப்புதல் வாக்கு மூலம் போல வைகோ பேச்சு அமைந்துவிட்டதாக இதனை எதிர்க்கட்சிகள் கெட்டியாக பிடித்துக்கொண்டு தவெகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளன. திமுகவின் முன்னாள் ராஜ்ய சபா எம்பி எம்.எம். அப்துல்லா, வைகோவின் இந்த பேச்சு குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில் "தூய சக்தி" என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் விஜய் குதிரை பேரம் என்று குற்றச்சாட்டினை முன்வைத்தோம். அப்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் "குதிரை பேரமும் நடக்கவில்லை கழுதை பேரமும் நடக்கவில்லை" என்றார்.
அதைப்பற்றி என்னிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, "குதிரை பேரம் கழுதை பேரம் நடக்கவில்லை என்றால் ஏதேனும் அடி மாட்டு ரேட்டுக்கு பேரம் நடந்ததோ என்னவோ" எனக் குறிப்பிட்டு இருந்தேன். தற்போது அதனை ஆமாம் என்று அண்ணன் வைகோ ஒப்புக்கொண்டுள்ளார். இவ்வாறு தன்னுடைய பதிவில் எம்.எம். அப்துல்லா. குறிப்பிட்டு இருக்கிறார். எம்.எம். அப்துல்லாவின் இந்த பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
அதிமுக எம்பி இன்பதுரையும் கேள்வி
அதேபோல, அதிமுக எம்பி இன்பதுரையும் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற இரண்டு மதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யச் சொல்லி, தவெக-வில் இணையுமாறு முதல்வர் விஜய் தன்னிடம் பேசியதாக வைகோ வெளிப்படையாகவே பேட்டியளித்துள்ளார். இது அப்பட்டமான குதிரைப் பேரம் அல்லவா? தமிழகத்தில் விஜய் அரசு நடத்தி வரும் குதிரைப் பேர அரசியலை நிரூபிக்க - வைகோ அளித்துள்ள இந்த ஒப்புதல் வாக்குமூல பேட்டி ஒன்று போதாதா? " என்று பதிவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் முன்வைத்து வந்த குதிரை பேர குற்றச்சாட்டுகளை நிராகரித்து வந்த தவெக, மாற்று கட்சியினர் விருப்பப்பட்டே தவெகவில் இணைவதாக கூறி வருகிறது. இத்தகைய சூழலில், வைகோவின் பேச்சு, தவெகவை வாண்ட்டடாக வண்டியில் ஏற்றிவிட்டது போல அமைந்துள்ளதாகவும், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு வலு சேர்க்கும் வகையில், விஜய்க்கு எதிராக இந்த விவகாரம் திரும்பியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.














Click it and Unblock the Notifications