ராமர் கோயில் காணிக்கை திருட்டு! அறக்கட்டளைக்கு முன்கூட்டியே தெரியுமாம்! பகீர் கிளப்பிய அகிலேஷ் யாதவ்
லக்னோ: அயோத்தி ராமர் கோயில் உண்டியல் காணிக்கை திருடப்பட்ட விவகாரத்தில், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு இந்த முறைகேடு குறித்து பொதுமக்களுக்குத் தெரிவதற்கு முன்பே தெரியும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
பாஜக ஆட்சியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் அஜெண்டாவாகும். இப்படி இருக்கையில்தான் கடந்த 2024ம் ஆண்டு கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.

பாஜகவின் வெற்றியும் சலசலப்பும்
சர்வதேச அளவில் ராமர் பக்தர்களை ஈர்க்க கட்டப்பட்ட இந்த கோயில் குறித்து தெருவுக்கு தெரு.. மூலைக்கு மூலை பாஜக பிரச்சாரம் செய்திருந்தது. 2024ம் ஆண்டு பாஜகவின் மக்களவை தேர்தல் வெற்றிக்கு இந்த கோயில் திறப்பும் முக்கிய காரணமாக பேசப்பட்டிருந்தது. இப்படி இருக்கையில், இந்த கோயில் உண்டியலில் பக்தர்கள் அளித்த காணிக்கை திருடப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகார் சலசல்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தத் திருட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) நடத்திய விசாரணையில், இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.80 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் வங்கி ஊழியர்களும் அடங்குவர். இவர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பணத்தைத் திருடியதாகக் கூறப்படுகிறது.
விசாரணையில் வெளி வந்த உண்மைகள்
திருட்டு நடந்த சமயங்களில் சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டிருந்ததும், காட்சிகள் சிதைக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜூன் மாதம் 5-ஆம் தேதியே அறக்கட்டளை நிர்வாகிகள் காவல்துறையினருடன் இணைந்து குற்றவாளிகளில் ஒருவரான அவினாஷ் சுக்லாவின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். இதன் மூலம், இந்த விவகாரம் வெளியில் தெரிவதற்கு முன்பே அறக்கட்டளைக்குத் தெரிந்திருந்தது உறுதியாகியுள்ளது.
இந்த முறைகேட்டிற்குப் பொறுப்பேற்று அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இருப்பினும் இந்த திருட்டு சம்பவம் குறித்து அறக்கட்டளைக்கு முன்கூட்டியே தெரிய வந்திருப்பது பற்றி எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.
அரசியல் மோதல்
குறிப்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. "பாஜக அரசுக்கு 'நாட்டை விட காணிக்கையே முக்கியம்'. முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கடி அயோத்திக்குச் சென்றது இந்தத் திருட்டுகளை மேற்பார்வையிடத்தானா?" என்று அகிலேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பாஜகவை 'பயங்கர சதி, ஜனங்களை ஏமாற்று, காணிக்கை திருட்டு' என்று அழைக்க வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
யோகியின் ரிப்ளை
அகிலேஷின் விமர்சனத்திற்குப் பதிலளித்த முதல்வர் யோகி, "முந்தைய சமாஜ்வாதி ஆட்சியைச் சுட்டிக்காட்டி.. ராமர் பக்தர்களைச் சுட்டுக்கொன்றவர்களுக்கு ஆன்மீகத்தைப் பற்றிப் பேசத் தகுதியில்லை. அகிலேஷ் யாதவ் ராமர் கோயிலுக்குச் சென்று தனது பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடிக்கொள்ள வேண்டும்" என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலை
கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தத் திருட்டில் இன்னும் பெரிய நெட்வொர்க் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து SIT தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ராமர் கோயிலில் நடந்துள்ள இந்தத் திருட்டுச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications