சென்னை: தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின் அவரின் சொந்த பணத்தை போட்டு, நிலத்தை விற்று மக்களுக்கு நலத்திட்டங்களை செய்வதாக பேசும் விஜய் ரசிகை வீடியோவை திமுக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பகிர்ந்து தலையில் அடித்து கொண்டுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு பின் தவெகவை சேர்ந்த பெண் ஒருவர், முதல்வராக விஜய் வந்த பின் அவரின் சொந்த காசை போட்டு நலத்திட்டங்களை செய்வார் என்று பேசி இருந்தார். அப்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி கிண்டல் செய்யப்பட்டது. தற்போது விஜய் முதல்வராகி 100 நாட்கள் கடந்துவிட்டது. இதனையொட்டி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
மகளிருக்கான விலையில்லா பேருந்து திட்டம் விரிவாக்கம், விலையில்லா 3 சிலிண்டர் திட்டம் ஆகியவற்றை அறிவித்தார். அதேபோல் அடுத்த மாதம் தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்று ஒரு இளம் மாணவி பேசுகையில், விஜய் சேர்த்து வைத்த சொத்து எதுக்கு.. மக்களுக்கு செய்தற்கே ஆட்சிக்கு வந்துள்ளார். இப்போ வரை அவரின் சொந்த பணத்தில் தான் மக்களுக்கு எல்லாவற்றையும் செய்துள்ளாரே தவிர, வேறு எந்த பணத்தையும் .. ஏமாற்றியோ, திருட்டு வேலை செய்தோ, ஊழல் செய்தோ எங்களுக்கு கொடுத்ததே இல்லை. விஜய் கஷ்டப்பட்டு சினிமாவில் சம்பாதித்த பணத்தை தான் இப்போ எங்களுக்கு செய்றாரு.. விஜய் அறிவிக்கும் திட்டங்கள் எல்லாமே அவரின் சொந்த பணத்தில் தான்.. 100 நாட்களில் எப்படிண்ணே கஜானாவை ஃபில் செய்ய முடியும்.. சரியா? தப்பா? 100 நாட்களில் யாராலும் கஜானாவை ஃபில் பண்ண முடியாது. அப்படியிருக்கும் போது, அவரோட சொந்த பணத்தில் தான் நமக்கு செய்றாரு.. இதுவரைக்கும் அவர் அரசு பணத்தில் ஒரு பைசா கூட தொடவில்லை. யாரால் செய்ய முடியும். இதுவரை ஆண்ட எந்த கட்சியாவது அவர்களின் நிலத்தை விற்று மக்களுக்கு செய்தார்கள் என்று சொஞ்சோம்னு சொல்ல சொல்லுங்க.. யாராலயும் சொல்ல முடியாது. ஸ்டாலின், ஜெயலலிதாவாக இருந்தாலும் மக்கள் காசை வைத்துதான் மக்களுக்கு செய்தார்கள்.. யாரும் அவர்களின் சொந்த காசில் செய்யவில்லை. மகளிர் உரிமை தொகை ஆயிரம், சிங்கப்பெண் அதிரடி படை செஞ்சுருக்காரு.. போலீஸ்க்கு புதுசா வண்டி விட்ருக்காரு.. 3 சிலிண்டர் கொடுத்துருக்காரு.. இதெல்லாம் எப்படி பண்ண முடியும் என்று கூறுகிறார். அப்போது இடைமறித்த யூடியூபர் தேர்தல் பிரமாண பத்திரத்தில் விஜய்யின் சொத்து மதிப்பு ரூ.700 கோடிதான் காட்டி இருந்தார் என்று அவருக்கு விளக்கம் அளிக்கிறார். ஆனால் அந்த மாணவி, ரூ.700 கோடினு சொல்கிறார்.. ஒரு குடும்பத்துக்கு ரூ.1 கோடி வச்சுக்கோங்க.. ரூ.700 கோடியில் ரூ.400 கோடி செலவு செய்துள்ளார் அண்ணே.. அவருடன் சொந்த பணத்தில் தானே அண்ணே செலவு செய்கிறார்.. அதில் கொஞ்சம் வேண்டுமானால் வரிப் பணமாக இருக்கும். விஜய் இடத்தை விற்றோ, வருமானத்தை வைத்தோ தான் எங்களுக்கு செய்துள்ளார். இடத்தை விற்று பெண்களுக்கு உரிமை தொகை கொடுத்திருக்கிறார்.. அதுபோதாதா என்று கேட்டுள்ளார். இந்த வீடியோவில் அந்த நிருபர்கள் எவ்வளவு அந்த பெண்ணிற்கு எடுத்து கூறியும், அந்த மாணவி எதையும் காதில் கேட்கவில்லை. இந்த வீயியோவை பகிர்ந்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தலையில் அடித்து கொள்ளும் ஸ்மைலியை பகிர்ந்து விமர்சித்துள்ளார். இது சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.