ஜெகத்ரட்சகன் மகனுக்கு பதவி.. உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு பொறுப்பு.. காய் நகர்த்திய தவெக.. பின்னணி என்ன?

  • சென்னை: தவெகவில் துணை பொதுச்செயலாளராக ஜெகத்ரட்சகன் மகன் சந்தீப் ஆனந்த் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள சூழலில், திடீரென விஜய் தரப்பு பதவி கொடுத்திருப்பதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.

    Advertisement

    தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. முதல்வர் விஜய், எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரச்சார களத்திற்கு வந்துள்ளதால், 3 கட்சியினர் களத்தில் பம்பரமாக சுழன்று வருகின்றனர். இதனால் மதுராந்தகத்தில் தவெகவும், தாராபுரத்தில் அதிமுகவும் முன்னிலையில் இருப்பதாக பேச்சுகள் அதிகரித்துள்ளன.

    Advertisement

    தாராபுரத்தில் ஆளுங்கட்சியான தவெக பின்னடைவை சந்திப்பதும், தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு எழுந்துள்ள எதிர்ப்பும் முதல்வர் விஜய்யை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இதன் காரணமாகவே 2 தொகுதிகளிலும் விஜய் 2 நாட்கள் பிரச்சாரம் செய்யும் திட்டத்திற்கே வந்திருக்கிறார். ஆனால் தாராபுரத்தில் சமூக கணக்குகளை கையாள முடியாமல் திணறி வருகிறது.

    இதனிடையே நேற்றிரவு அதிமுகவில் இருந்தும், திமுகவில் இருந்தும் தவெக பக்கம் வந்தவர்களில் பெரும்பாலானோருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்படுவதாக விஜய் அறிவிப்பை வெளியிட்டார். இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நேரத்தில் தவெக இப்படியான ஒரு அறிவிப்பை வெளியிட்டது ஏன் என்ற கேள்விகள் எழுந்தன.

    Advertisement

    இதுதொடர்பாக பனையூர் வட்டாரத்தில் விசாரிக்கையில், தாராபுரத்தில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகளை எங்கள் பக்கம் திருப்ப முடியவில்லை. அதேபோல் திருப்பூர் அதிமுகவில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் பதவி அளிக்கப்படவில்லை. உடுமலை ராதாகிருஷ்ணன், சம்பத் உள்ளிட்டோருக்கு பொறுப்பு அளிக்கப்படாததால், அவர்கள் இடைத்தேர்தலில் சுணக்கம் காட்டுகின்றனர்.

    உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு செல்வாக்கு இருந்த போது, இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபடவில்லை. அவரை களத்ட்க்ஹிற்கு கொண்டு வரவே இப்படியான நகர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதேபோல் தவெக மீது தலித் ஆதரவு அரசு என்ற பெயர் விழுந்துள்ளது. இதனால் வன்னியர் சமூக மக்கள் மத்தியில் தவெக எழுச்சி பெறவே திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மகன் சந்தீப் ஆனந்த்க்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சந்தீப் ஆனந்த் தவெகவில் இணைந்த நாள் முதலே அதிக செலவு செய்ய தயாராக இருந்தார். ஆனால் தலைமையில் இருந்து அவருக்கு எந்த பொறுப்பும் அளிக்கப்படவில்லை. இதனால் இடைத்தேர்தலில் வன்னியர் சமூக வாக்குகளை கைப்பற்றும் நோக்கில் இந்த நகர்வை விஜய் மேற்கொண்டுள்ளதாக கூறினர்.

    English Summary

    Reason behind CM Vijay Grants Key TVK Leadership Roles to Sandeep Anand and Udumalai Radhakrishnan