தவெக மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு.. பாமக விலகல்.. சௌமியா அன்புமணி அறிவிப்பு
சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தவெக ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுக கூட்டணி கட்சிகளான சிபிஎம், சிபிஐ,
விசிக, ஐயூஎம்எல் ஆதரவுடன் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. தவெக 13ம் தேதிக்குள் (இன்று) சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் உத்தரவிட்டார். அதன்படி தவெக ஆட்சியை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாமக பங்கெடுக்காது என்று சௌமியா அன்புமணி கூறியுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டி நிலவியது. இதில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் விஜய் முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் ஆதரவுடன் தவெக ஆட்சியை பிடித்துள்ளது.
மேலும் அதிமுகவில் வேலுமணி அணி மற்றும் அமமுக எம்எல்ஏ காமராஜ் ஆகியோர் தவெகவுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர். ஆளுநரின் உத்தரவுப்படி தவெக ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி, "சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள்.
பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் படை, மதுக்கடைகளை மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை பாமக வரவேற்கிறது. மது விலக்குக்காக பாமக தொடர்ந்து குரல் கொடுத்து, சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. போதை, மது இல்லாத சமுதாயத்தை நம் குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். தவெக அரசு நம்பிக்கை தீர்மானம் கோரியுள்ள வாக்கெடுப்பில் இருந்து பாமக விலகிக் கொள்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications