சென்னை: தமிழக சட்டசபையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் காட்சிகள் ரீல்ஸ்களாக பகிரப்படுவது குறித்து எதிர்க்கட்சிகள் தங்கள் ஆதங்கத்தை சபாநாயகரிடம் கூறியிருந்த நிலையில், இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட புதிய வழிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சட்டசபை நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பு செய்யாமல் 10 முதல் 15 நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டு வருவதாகவும் கோட்டை வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து சட்டசபை நடவடிக்கைகள் நேரலை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே ஒரு நிமிடம் கூட கட் இல்லாமல் நேரலை செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசு செய்தி தொடர்புத்துறை யூடியூப் பக்கத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், அவை நடவடிக்கைகளை மக்களும் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். இதுவரை இல்லாத அளவிற்கு சட்டசபை காட்சிகளை வீடுகளில் மக்கள் விரும்பி பார்ப்பதாக பலரும் சொல்கிறார்கள். நேரலை ஒளிபரப்பு செய்யப்படுவது மக்களிடையே பெரும் வரவேற்பை கொடுத்து இருக்கிறது. எனினும், சட்டசபையில் அவை உறுப்பினர்கள் சில நேரங்களில் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாலும் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே வார்த்தை யுத்தம் ஏற்படுகிறது. உறுப்பினர்களின் பேச்சுக்கள் அவை குறிப்பில் இடம் பெறாது என்று சபாநாயகர் அறிவித்தாலும், நேரலை செய்யப்படுவதால், அந்த காட்சிக்ளும் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ்களாக பரவி விடுகின்றன. இது பற்றி திமுக கொறடா எ.வ. வேலு சபாநாயகரிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து இருந்தார். இது குறித்து சபநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறுகையில், அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டவற்றை ரீல்ஸ், வீடியோவாக வெளியிடக் கூடாது. அதுகுறித்து பேரவையின் கவனத்துக்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனாலும் இத்தகைய ரீல்ஸ்கள் நின்ற பாடில்லை என்ற ஆதங்கம் எழுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது மேற்கூறிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய திட்டம் ஒன்றை முன்னெடுக்க ஆலோசனை நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதாவது, சட்டசபை நிகழ்ச்சிகளை லைவ் ஆக காட்டாமல் ,5 முதல் 15 நிமிடங்கள் வரை தாமதமாக ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான சோதனை முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த முறை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படலாம் என்று சட்டசபை செயலக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. எனினும், இவ்விவகாரத்தில் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதேனும் வெளியானாதால், இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பது உறுதியாக தெரியவரும். அதே நேரத்தில் சட்டசபை லைவ் காட்சிகளை எந்த வகையிலும் கட் செய்யவோ நீர்த்து போகவோ செய்யக்கூடாது என்ற குரலும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வலுத்து வருகிறது. பொதுமக்கள் இதுவரை இல்லாத வகையில் தற்போதுதான் தங்கள் தொகுதி எம்.எல்.ஏக்கள் செயல்பாடு உள்ளிட்டவற்றையும் மக்கள் பிரச்சினைகள் உரிய முறையில் அவையில் பேசப்படுகிறதா? என்பதை மக்கள் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியுள்ள சூழலில், சட்ட சபை காட்சிகளை தொடர்ந்து லைவில் ஒளிபரப்பு செய்வதை விஜய் அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.சட்டசபை நேரலை..
5 நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்பு?
லைவ் கட் செய்யக் கூடாது