தலைவர் பதவி மட்டுமில்லை..காங்கிரஸில் மொத்தமாக ஓரம்கட்டப்படும் செல்வபெருந்தகை? விஜய்யால் போன புகார்

  • சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த செல்வபெருந்தகை சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தார். தற்போது காங்கிரஸ் தலைவர் பதவியையும் இழந்துள்ளார். இந்நிலையில்தான் செல்வபெருந்தகை கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வருகிறார். தற்போது காங்கிரஸ் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் முதல்வர் விஜய் மீது கூறிய குற்றச்சாட்டால் செல்வபெருந்தகை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடத்துக்கு பரபரப்பான புகார் சென்றுள்ளது. இதனால் செல்வபெருந்தகை காங்கிரஸ் கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிட்டது. மொத்தம் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வபெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் தனது தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

    Advertisement

    மேலும் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி முதல்வர் விஜய்யின் தவெக கூட்டணியில் இணைந்தது. காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களில் ராஜேஷ் குமார், விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சராக செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே தான் தமிழகத்தின் புதிய காங்கிரஸ் தலைவராக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் நேற்று நியமனம் செய்யப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

    இப்படியாக சட்டசபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை செல்வபெருந்தகை இழந்துள்ளார். இது ஒருபுறம் இருக்க தற்போது செல்வபெருந்தகை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்துக்கு நேற்று புகார் சென்றுள்ளது. இந்த புகாரானது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர் சங்கம் (National Student's Union of India or NSUI) சார்பில் மேலிடத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    Advertisement

    அந்த கடிதத்தில், ''சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் பற்றி செல்வப்பெருந்தகை தெரிவித்த கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. செல்வபெருந்தகையின் சமீபத்திய கருத்துகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் சரியானதாக இல்லை. கட்சி மேலிடத்தின் முடிவுக்கு எதிராக உள்ளது. செல்வப்பெருந்தகையின் அணுகுமுறை காங்கிரஸின் கூட்டணி கட்டமைப்பின் நீண்டகால மரபுகள், ஒழுங்குமுறை மற்றும் அடிப்படை கொள்கைகளை மீறும் வகையில் அமைந்துள்ளது.

    தமிழகத்தில் காங்கிரஸின் எதிர்கால வளர்ச்சியை செல்வப்பெருந்தகையின் சமீபத்திய அரசியல் நகர்வுகளும் அறிவிப்புகளும் நேரடியாக பாதிக்கிறது. அதுமட்டுமின்றி கட்சியில் செல்வபெருந்தகையின் செயல்பாடு, யுத்திகள் உள்ளிட்டவை விசுவாசமிக்க தொண்டர்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளது. இதனால் செல்வபெருந்தகையின் செயல்பாடுகள் குறித்து உயர்மட்டக் குழு விரிவான விசாரணை நடத்த வேண்டும் . கட்சியை விட தனிநபர் யாரும் பெரியவர்கள் அல்ல. ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் தொண்டர்களின் முழுமையான நம்பிக்கை ஆகியவை மட்டுமே காங்கிரஸின் உண்மையான பலம்.

    Advertisement

    செல்வபெருந்தகையின் சமீபத்திய கருத்து காங்கிரஸ் கட்சி, திமுகவிற்கு அடிபணிந்து போவது போன்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் தனித்துவமான அடையாளத்தை பலவீனப்படுத்துவது போல் இருக்கிறது. பொதுவெளியில் சொல்லப்படும் கருத்துகள் தொண்டர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாகவோ அல்லது கட்சியின் அரசியல் நம்பகத்தன்மையைக் குறைப்பதாகவோ இருக்கக் கூடாது. இதனால் செல்வபெருந்தகை மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

    செல்வபெருந்தகை மீதான இந்த புகாருக்கு முக்கிய காரணம் அவரது சமீபத்திய கருத்து தான் சட்டசபையில் முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை குறிப்பிடும் வகையில் ''அப்பாவை எங்கே காணோம்'' என்று குட்டிக்கதை கூறி நையாண்டி செய்தார். இந்த வீடியோ இணையதளங்களில் பரவியது. இதுபற்றி செல்வபெருந்தகை கருத்து தெரிவித்தார்.

    Advertisement

    அப்போது அவர், '' சட்டசபையில் நடந்தது எல்லாம் அருவருக்கத்தக்கது. அநாகரீகமானது. அது ஒன்றும் சூட்டிங் ஸ்பாட் இல்லை. அது மாண்புமிக்க ஒருவரலாற்று சிறப்புமிக்க அவை. அங்கு இருந்து கொண்டு கையை காட்டி பேசியதை எல்லாம் நான் வன்மையாக கண்டிக்கிறேன். காங்கிரஸ் பேரியக்கம் சார்பில் நான் ஏற்கனவே கண்டித்துள்ளேன். இப்போதும் கண்டிக்கிறேன். இப்படியெல்லாம் செய்யக்கூடாது. அது நாகரீகம் கிடையாது.

    தொடர்ந்து சட்டசபைக்கு வந்து பணியாற்றிய முதல்வர் ஸ்டாலின் தான் என்று டேட்டா சொல்லுது. மாவட்டங்கள் தோறும் அவர் சென்றதுபோல் யாரும் போகவில்லை. அவருடைய திட்டங்களை சொல்ல வேண்டும். இன்று ஆட்சி மாறியிருக்கிறது. அவருடைய திட்டங்கள் பற்றிய பேச்சு தானே இருக்கிறது. அவரது திட்டத்தை தானே நடைமுறைப்படுத்துறாங்க. உலகில் முதல் முறையாக காலை உணவுத்திட்டம் கொண்டு வந்தார். இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முதல்வர் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கலாம்.

    Advertisement

    அதேபோல் தான் திமுக தலைவர் முக ஸ்டாலினின் வரலாற்றை யாரும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. இன்றைக்கு ஏன் அவருக்கு வாக்களிக்கவில்லை என அழுதுகொண்டு இருக்கிறார்கள். எனது உறவினர்கள், சின்ன பிள்ளைகள் சொன்னதால் ஓட்டு போட்டுவிட்டு இப்போது, என்னிடம் வந்து தவறு செய்துவிட்டோம் எனக் கதறிக்கதறி அழுதுகொண்டு இருக்கிறார்கள். தவறு பண்ணிவிட்டோம் மாமா என்று சொல்கிறார்கள். மாற்றம் என்பதை மாற்ற முடியாது. இதுபோல, அநாகரீகமாக கொச்சைப்படுத்தி, புண்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டியது நல்லது'' என்று விஜய்யை சாடியிருந்தார்.

    காங்கிரஸ் கட்சி தற்போது முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் பங்கேற்றுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவராக செல்வபெருந்தகை நேற்று முன்தினம் இந்த கருத்தை தெரிவித்தார். இது கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்கும் என்பதால் செல்வபெருந்தகைக்கு எதிராக கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதனால் தற்போது எம்எல்ஏ மற்றும் காங்கிரஸ் தலைவர் பதவியில் இல்லாத செல்வபெருந்தகை இன்னும் கூட திமுக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். இதனால் அவர் காங்கிரஸில் ஓரம்கட்டப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    English Summary

    Selvaperunthagai News: Selvaperunthagai, who served as the president of the Tamil Nadu Congress Committee, had previously lost in the assembly elections and has now also lost the party presidency. Amid of this a high-level complaint has been lodged with the Congress leadership urging disciplinary action against him, following allegations he leveled against CM Vijay, who currently leads the Congress alliance. Consequently, there is widespread speculation that Selvaperunthagai may be sidelined within the party.