மகளிருக்கு மாதம் 2500 சாத்தியமா? 10 லட்சம் கோடி கடனில் தமிழகம்! விஜய் மேஜிக்கிற்கு வாய்ப்பு இருக்கா?
சென்னை: தமிழ்நாடு நிதிநிலை மிக மோசமாக இருப்பதாக முதல்வர் விஜய் தனது முதல் உரையிலேயே குறிப்பிட்டிருந்தார். இதற்கு திமுக தலைவரும் மாஜி முதல்வருமான ஸ்டாலின் பதிலடியும் கொடுத்திருந்தார். இந்த வார்த்தை மோதல் ஒரு பக்கம் இருக்க மாநிலத்தின் நிதிநிலை உண்மையில் எப்படி இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, தவெக தலைவர் விஜய், தனது முதல் உரையிலேயே திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். நிதிநிலையில் அரசு ரூ. 10 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் சுமையை விட்டுச் சென்றதாகவும், மாநிலக் கருவூலத்தை காலி செய்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

நிலைமை மோசம்
பதவியேற்புக்குப் பிறகு கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், மாநிலத்தின் நிதிநிலை எதிர்பார்த்ததைவிட மோசமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளறிக்கையை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "தமிழக அரசு எந்த நிலையில் எப்படி இருக்கிறது என்பதை இப்போது தான் பார்த்துள்ளோம். முந்தைய அரசு ரூ. 10 லட்சம் கோடிக்கும் அதிகமான கடனை வாங்கிவிட்டுச் சென்றது.. அதிகாரத்தை விட்டு வெளியேறும் முன் கருவூலம் முழுமையாகக் காலியாக்கிவிட்டனர்" என்று விஜய் குறிப்பிட்டார்.
விஜய்
விஜய்யின் இந்த கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. முதல்வர் விஜய்யின் இந்த விமர்சனத்திற்கு மு.க. ஸ்டாலின் உடனடியாகப் பதிலளித்தார். மாநிலக் கருவூலம் காலியாக உள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அவர் அடியோடு மறுத்தார். அரசுக்கு நிதி இல்லை என்று உடனடியாக கூற வேண்டாம், நிதி இருக்கிறது என்று ஸ்டாலின் தனது 'எக்ஸ்' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டார். "மக்களுக்கு அதனை வழங்க மனமும், திறமையும் தான் தேவை" என்று அவர் மேலும் வலியுறுத்தினார். தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்துள்ள திருமாவளவனும் கூட இப்போது கிட்டத்தட்ட அதே கருத்தை தான் கூறியிருக்கிறார்.
திமுக vs தவெக
அதேநேரம் இந்த கருத்து மோதல் 2021இல் நடந்த சம்பவத்தை தான் நினைவுபடுத்துகிறது. அப்போது, திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே, அப்போதைய நிதியமைச்சர் பிடிஆற் ஒரு வெள்ளறிக்கையை வெளியிட்டார். அதில் 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் நிதிநிலை மிக மோசமான நிலையில் இருப்பதாக விவரித்தார். இப்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, விஜய்யும் கிட்டத்தட்ட அதே கருத்தை கூறியிருக்கிறார். அதேநேரம் தமிழகத்தில் கடன் சுமை குறித்த நம்பரை பார்த்தால் அது வேறு கதையையே சொல்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின்படி, 2025 நிதியாண்டின் முடிவில் தமிழ்நாட்டின் நிலுவையில் உள்ள கடன்கள் ரூ.9.56 லட்சம் கோடியாக இருந்தன. இது இந்திய மாநிலங்களிலேயே மிக உயர்ந்த அளவாகும். அதே நேரத்தில், தமிழ்நாடு நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாகும் என்பது கவனிக்கத்தக்கது.
தமிழ்நாடு வளர்ச்சி
2011-12 அடிப்படை ஆண்டாகக் கொண்ட பழைய ஜிடிபி கணக்கீட்டின்படி, 2025 நிதியாண்டில் தமிழகம் 11.2% வளர்ச்சியடைந்தது. உண்மயைான வளர்ச்சி 10.8%ஆக இருந்தது.. கடந்த இரண்டு ஆண்டுகளில் 10%க்கு மேல் தமிழ்நாடு வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. மேலும், இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது.
வேகமாக வளரும் பொருளாதாரங்களால் தான் காரணமாக அதிக கடனைத் தாங்க முடியும். ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, மாநிலத்தின் கடன் என்பது மாநில ஜிடிபி விகிதம் 30.6 விழுக்காடாக இருந்தது. இது 2022 இருந்த 32% என்ற நிலையை விடக் குறைவாகும். இது வளர்ச்சிக்கு ஒரு பாசிட்டிவ் அறிகுறி.
மேலும், தமிழக அரசின் கடன் என்பது திமுகவால் மட்டும் ஏற்பட்டது இல்லை. அது பல ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வரும் சிக்கலாகவே இருந்து வருகிறது. சமீபத்திய நிதி ஆணையத்தின் அறிக்கை கூட, தமிழ்நாட்டின் கடன் கடந்த பல ஆண்டுகளாக சீராக உயர்ந்து வருவதையும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் மேலும் அதிகரித்திருப்பதையும் காட்டுகிறது.
கட்டாய செலவுகள்
அதேநேரம் தமிழகத்தின் கட்டாய செலவினங்களான சம்பளம், ஓய்வூதியம், வட்டி செலுத்துதல் பெரிய செலவாக இருக்கிறது. 2026 நிதியாண்டில் மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகளில் சுமார் 62% இந்தக் கட்டாயச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற விஜய்யின் வாக்குறுதி அரசு செலவினங்களை மேலும் அதிகரிக்கும்!
2025-26 நிதியாண்டில், தமிழ்நாடு அரசு ஏற்கனவே மானியங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்காக ரூ.72,000 கோடிக்கு மேல் செலவழிக்கத் திட்டமிட்டிருந்தது. இது சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை விட அதிகமாகும். விஜய்யின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்து நலத்திட்ட வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது நிதி நெருக்கடியை கணிசமாக அதிகரிக்கும்!












Click it and Unblock the Notifications