செங்கல்பட்டு: முதல்வர் விஜய்யுடன் விசிக தலைவர் திருமாவளவன் இருப்பது மிகப்பெரிய பலம் என்று அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் முதல்வர் விஜய் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து தான் முடிவு செய்வார் என்றும், திமுகவின் வெற்றிக்கு விசிக தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.
மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து கூட்டணி கட்சிகளின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. திருமாவளவன், வைகோ, மாணிக்கம் தாகூர், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார், ஷாஜகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தவெக கூட்டணியில் பாமக இணைய உள்ளதாக சில பேச்சுகள் எழுந்தன.
ஆனால் பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணி மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் இருவருமே மறுத்தனர். அதுமட்டுமல்லாமல் பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என்றும் திருமாவளவன் அறிவித்துள்ளார். ஆனால் தவெக தரப்பில் பாமக கூட்டணிக்குள் வருமா என்ற கேள்விக்கு இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் விஜய் இல்லாமல் தவெக கூட்டணி கட்சித் தலைவர்களின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், எதுவாக இருந்தாலும் சரி, முதல்வர் விஜய் அனைவருடனும் கலந்து பேசி முடிவு செய்வார். இந்த கூட்டணி மேடையில் பார்க்கும் போதே அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜய் 30 ஆண்டுகளுக்கு முதல்வராக இருக்க, கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் துணையாக இருப்பார்கள். அண்ணன் திருமாவளவன் எங்களுடன் இருக்கிறார். கடந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளின் பங்கு தான் திமுக வெற்றிக்கு காரணம். முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் இருப்பது மிகப்பெரிய பலம். அதனால் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் வென்றுவிடுவார் என்று தெரிவித்தார். மதுராந்தகத்தில் விசிக வாக்குகள் கணிசமாக இருக்கும் சூழலில், திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டிருப்பது தவெகவுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஆனால் பாமகவின் வாக்குகள் எந்தப் பக்கம் சாயும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பாமகவின் வாக்குகளை திமுக மற்றும் அதிமுக பிரித்தால், அது தவெகவுக்கு பின்னடைவாக மாறும் என்றும் பார்க்கப்படுகிறது.