சென்னை: எஸ்ஐஆர் பணிகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருப்பதாக தேர்தல் ஆணையர்கள் இருவர் குற்றச்சாட்டை எழுப்பியிருக்கின்றனர். எனவே தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டிருக்கின்றன. இந்நிலையில், ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், மக்களவை எம்பியுமான திருமாவளவன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
நாடு முழுவதும் எஸ்ஐஆர் எனப்படும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர்தான் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடந்தன. தமிழ்நாட்டிலும் இப்படித்தான் நடந்தது.
ஆனால், இந்த எஸ்ஐஆர் பணிகளில்.. பல லட்சம் பெயர்களை சேர்ப்பதும், விடுவிப்பதும் குறித்து தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரிடம் தலைமை தேர்தல் ஆணையரான ஞானேஷ்குமார் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. இது குறித்து 14 முறை முறையிட்டபோதும் கூட ஞானேஷ் குமார் கண்டுகொள்ளவில்லை என்பதே குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான ஞானேஷ் குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் மீது மட்டுமல்லாது மொத்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன. இந்நிலையில், திருமாவளவன் இது குறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. கடிதத்தில் உடனடியாக ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியிருக்கிறார். மேலும் எஸ்ஐஆர் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இந்த பணிகள் குறித்து ஆணையத்திற்கு உள்ளேயே பிரச்சனை எழுந்திருக்கிறது எனவும் திருமாவளவன் சுட்டிக்காட்டியிருக்கிறார். முன்னாதாக இதே கோரிக்கையை மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.