விஜய்க்கு ஆதரவு அளித்து கைப்பட கடிதம் எழுதிய அமமுக எம்எல்ஏ? தவெக வெளியிட்ட வீடியோ!
சென்னை: விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் பெயரில், ஆளுநருக்கு தவெக சார்பில் கொடுக்கப்பட்ட கடிதம் போலியானது என டிடிவி தினகரன் நள்ளிரவில் புகார் அளித்து இருந்தார். இந்த நிலையில், எம்.எல்.ஏ காமராஜ் தவெகவிற்கு ஆதரவளித்து கையெழுத்திடும் வீடியோவை தவெகவினர் வெளியிட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அமமுக எம்எல்ஏ காமராஜ் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து கைப்பட கடிதம் எழுதுவது போன்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கடிதம் தொடர்பான சர்ச்சைக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தவெக தரப்பு இந்த வீடியோவை வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தவெகவுக்கு அவசியம் இல்லை
அந்த வீடியோ கேப்ஷனில் கூறப்பட்டு இருப்பதாவது:- மன்னார்குடி அமமுக எம்எல்ஏ காமராஜ் தன்னிச்சையாகவும், மகிழ்ச்சியுடனும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கும் கடிதத்தை தன் கைப்பட எழுதினார். மேலும் இந்த ஆதரவு கடிதம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் ஒப்புதலுடன் வழங்கப்பட்டதாகவும் காமராஜ் கூறியதாக இதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது, "அவர் கடிதம் எழுதவில்லை" என பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் உண்மைக்கு புறம்பானவை என்றும் தவெக தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. அனைத்து உண்மைகளையும் மறைத்து டிடிவி தினகரன் தொடர்ந்து தவறான தகவல்களையும், போலி செய்திகளையும் பரப்பி வருகிறார் என்றும் தவெக விமர்சித்துள்ளது.
மேலும், யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில், விஜய்யின் தவெக மற்றும் டிடிவி தினகரன் இடையேயான அரசியல் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. முன்னதாக டிடிவி தினகரன் கூறியிருந்ததாவது:-
டிடிவி தினகரன் கூறியது என்ன?
தவெக சார்பில் காமராஜ் என்ற பெயரில் ஆளுநரிடம் வழங்கப்பட்ட கடிதம் போலியானது. இது தொடர்பாக நாங்கள் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம். போலீசிலும் புகாரளிக்க உள்ளோம். முதலில் என் பெயரில் ஒரு கடிதம் தவெகவிற்கு ஆதரவு என அளிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் உண்மையா? என ஆளுநர் மாளிகையிலிருந்து அழைத்து விசாரித்தார்கள்.
நான் வாட்ஸ் அப் மூலம் ஆதரவுக் கடிதம் அளித்ததாகக் கூறி ப்ரிண்ட் அவுட்டை தவெக கொடுத்துள்ளது. ஒரிஜினல் கடிதம் அவர் கேட்டதற்கு அனுப்புகிறோம் என்று தவெக தரப்பு ஆளுநரிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார்களாம். இப்போது தான் எங்களுக்கு இந்த விஷயம் தெரிந்தது. இதையடுத்து உடனே நாங்கள் அங்கு வந்துவிட்டோம்.
தூய சக்தி செய்யும் வேலையா இது?
மற்ற கட்சியின் பெயரில் போலியான கடிதத்தை தவெக ஏன் ஆளுநரிடம் கொடுக்கிறார்கள்?.. ஆளுநர் தரப்பில் இருந்து அழைப்பு வந்தது தெரிந்ததால், நான் நேராக ஆளுநர் மாளிகை வந்துவிட்டேன். பின்னாடியே காமராஜ் வந்துவிட்டார். ஆட்சிக்கு வரும் முன்பே இப்படி ஒரு மோசடி செய்தால் எப்படி? இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க நாங்கள் வெண்ணெய்கள் அல்ல..
இது போன்ற மோசடியாளர்களை ஆட்சி அமைக்க சொன்னால் என்ன ஆகும். யாருடைய பெயரிலும் மோசடி செய்துவிடுவர். தூய சக்தி செய்யும் வேலையா இது.. இவர்களை நம்பி ஆட்சி ஒப்படைத்தால் என்ன ஆகும்" என்று கூறியிருந்தார்.














Click it and Unblock the Notifications