Vanni Arasu: முதல்வர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் அருவருக்கத்தக்க பேச்சு! பொங்கி எழுந்த வன்னி அரசு

  • சென்னை: தமிழக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் என்று குட்டிக்கதை சொல்லி முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்து இருந்தார். முதல்வர் விஜய்யின் இந்த பேச்சு பற்றி இன்று பேசியுள்ள நயினார் நாகேந்திரன், முதல்வர் விஜய் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசினார். நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு விசிக துணைப் பொதுச்செயலாளரும், அமைச்சருமான வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று பாஜக தலைமையகமான கமலாலயாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது முதல்வர் விஜய் பற்றி அருவருத்தக்க வகையில் பேசினார். நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-

    Advertisement

    அநாகரீக பேச்சு

    தமிழகத்தை பொறுத்தவரை மாநில கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. பிரதமரின் சாதனைகள் மக்களிடம் சென்றடைந்தாலும், அது வாக்கு வங்கியாக மாறுவதில்லை. திமுக ஆட்சிக்கு மாற்றாக வருவோம் என்று நினைத்தபோது இவர்கள் வந்துவிட்டனர். இதுவும் மாறும். வருகிற நாட்களில் தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும்.

    வன்னி அரசு கண்டனம்

    இவர்களால் நாட்டில் என்ன செய்துவிட முடியும். சட்டசபையில் சென்று அப்பா எங்கே?.. அப்பா எங்கே?.. என தேடுகிறார். வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யார் என்று சொல்வார்கள். சட்டசபையில் சென்று அப்பாவை தேடினால் எப்படி கிடைப்பார். இப்படிப்பட்டவர்களின் ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது" என்று நயினார் நாகேந்திரன் பேசினார்.

    Advertisement

    நயினாரின் இந்த சர்ச்சை பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தது. தவெக கூட்டணி கட்சிகளும் கடும் விமர்சனம் முன்வைத்து வருகின்றன. விசிக துணை பொதுச்செயலாளரும் அமைச்சருமான வன்னி அரசு கூறியதாவது:- தமிழ்நாடு முதல்வர் அவர்கள் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் மிக மோசமான அருவருக்கத்தக்க வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் பேசிய அநாகரிகமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

    ஆசிபா கூட்டு பாலியல் வன்கொடுமை

    பாஜக சனாதனிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குறித்து இந்திய தலைமை அமைச்சர் மோடி பேசாத அவதூறா? காஷ்மீரில் 8 வயது ஆசிபாவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி, 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்து, வரவேற்பு அளித்தவர்கள் தான் பாஜகவினர்.

    Advertisement

    பெண்களுக்கு எதிரான வெறுப்பும், அவதூறும் தான் அவர்கள் பேசும் அரசியலின் அடிப்படை. இதற்கு முன்னரும் நடிகை ஒருவர் குறித்தும் நயினார் அவர்களின் பேச்சு தரம் தாழ்ந்து அமைந்திருந்தது. நயினார் நாகேந்திரன் அவர்கள் தமது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

    காட்டமாக பதிலடி கொடுத்த மாணிக்கம் தாகூர்

    அதேபோல, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரும் காட்டமாக பேசியுள்ளார். மாணிக்கம் தாகூர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- "அரசியல் விரக்தியின் உச்சத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களையும், அவரது தாயாரையும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    Advertisement

    அரசியல் நாகரிகமற்ற முறையில் தரம் தாழ்ந்து பேசுவது இவருக்கு இது முதல் முறையல்ல, தொடர் வாடிக்கையாகிவிட்டது. பொதுவெளியில் கவனத்தைப் பெற பெண்களை இழிவுபடுத்தும் தனது அருவருக்கத்தக்க பேச்சுக்குத் தமிழ்நாட்டு மக்களிடமும் முதலமைச்சரிடமும் உடனடியாக நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    English Summary

    Vanni Arasu: Tamil Nadu Chief Minister Vijay indirectly criticized former Chief Minister M.K. Stalin in the Legislative Assembly by recounting a short story about a "missing father." Speaking on this matter today, Nainar Nagendran made disparaging remarks about Chief Minister Vijay. Vanni Arasu, a Minister and the Deputy General Secretary of the VCK, has strongly condemned these comments by Nainar Nagendran.