திமுகவின் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்-ஐ பாலோ செய்யும் விஜய்.. ஆட்சிக்கு வந்த உடன் முக்கிய அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடனேயே தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்குப் பிறகு பேசிய அவர், இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த நடவடிக்கை தமிழ்நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை மக்களுக்கு தெளிவாக உணர்த்தும் வகையில் அமையும் என்று விஜய் விளக்கியுள்ளார்.

வெள்ளை அறிக்கை
விஜய் தனது பேச்சில், "தமிழ்நாட்டின் கடன் அளவு 10 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகுதான் ஒவ்வொரு துறையிலும் உண்மையான நிலைமை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்" என்று கூறினார்.
தற்போதைய நிலையில் மாநிலத்தின் கஜானா காலியாக உள்ளது என்றும், நிதி நிலை கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளது என்றும் அவர் தெளிவாகச் சுட்டிக்காட்டினார். மேலும் முந்தைய ஆட்சி நம் தலையில் சுமக்க முடியாத சுமையை வைத்துள்ளனர் என்றும் விஜய் வெளிப்படையாக தெரிவித்தார்.
இந்த வெள்ளை அறிக்கை மூலம் அரசின் வரவு-செலவு நிலை, கடன் சுமை, துறை வாரியான நிதி நிலை ஆகியவை மக்களுக்கு முழுமையாக தெரியவரும்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்-ஐ பாலோ செய்யும் விஜய்
விஜயின் இந்த அறிவிப்பு, திமுகவின் முன்னாள் நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட 2021 வெள்ளை அறிக்கையை நினைவூட்டுகிறது. அப்போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை மூலம் அதிமுக ஆட்சியின் நிதி நிலை குறித்து வெளிப்படைத்தன்மை மக்களுக்கும், அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கிடைத்தது.
அதே மாதிரியான அணுகுமுறையை விஜயும் பாலோ செய்ய முடிவு செய்துள்ளார். இது தமிழ்நாட்டு அரசியலில் வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
பிடிஆர்-ன் நோக்கம்
2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, திமுக அரசு முந்தைய அதிமுக ஆட்சியில் இருந்து பெற்ற நிதி நெருக்கடியை விரிவாக விளக்கும் 120 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டது.
அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதல் முறையாக வெள்ளை அறிக்கையை வெளியிடும் திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்த அறிக்கையின் மூலம் அப்போதைய தமிழ்நாட்டின் உண்மையான நிதி நிலவரத்தை மக்களுக்கு தெளிவாகத் தெரிவிக்கும் வகையில், மாநிலத்தின் கடன் சுமை, TANGEDCO உள்ளிட்ட நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறைகள் மற்றும் போக்குவரத்துத் துறை உள்ளிட்டவற்றை விரிவாக விவரிக்கிறது.
வாக்குறுதிகளுக்கு கால அவகாசம்
தமிழ்நாட்டின் உண்மையான நிதி நிலை தெரியும் வரை வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்று விஜய் தெரிவித்தார். "நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன்" என்று உறுதியுடன் கூறிய அவர், தேர்தல் அறிக்கையில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.
புதிய அரசின் முதல் முக்கிய நடவடிக்கை
விஜய் தலைமையிலான புதிய அரசு மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொறுப்பேற்றுள்ளது. நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடும் முடிவு, அரசின் செயல்பாடுகளுக்கு வெளிப்படைத்தன்மையையும், தெளிவையும் கொண்டு வரும். இந்த அறிவிப்பு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கும் முதல் படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications