விஜய் முதல்வராவது இருக்கட்டும்.. இனி ஒரு பைசா ஏமாற்ற முடியாது.. 2 முக்கிய அமைச்சகம் கைக்கு வருகிறது!
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (மீண்டும்) ஆதரவு கொடுத்த நிலையில் ஆட்சி அமைக்க சுமார் 120 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இதன் மூலம் விஜய் முதலமைச்சராவது உறுதியானது.
இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இதற்கான முழு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று முடிந்து முக்கிய தலைவர்கள் விஜய் வீட்டுக்கு வர துவங்கியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைய உள்ள நிலையில், 2 முக்கிய துறைகளை தனது சொந்த கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.

முதல் துறை
தமிழ்நாட்டில் முதலமைச்சர்கள் கையில் எப்போதும் உள்துறை (Home Department) இருப்பது வழக்கமான மற்றும் இயல்பான ஒன்றுதான். சட்டம்-ஒழுங்கு, காவல்துறை, சிறைத்துறை மற்றும் உளவுத்துறை போன்ற மிக முக்கிய துறைகள் உள்துறையின் கீழ் வருவதால், மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சரே இந்தத் துறையைத் தன்வசம் வைத்திருப்பது நிர்வாக ரீதியாக வலுவானதாக இருக்கும். இதை தாண்டி மற்றொரு துறையும் கையில் எடுக்கிறார்.
2வது துறை
இதை தொடர்ந்து விஜய் நிதித்துறை முழுமையாக தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் வரவு செலவு கணக்குகளில் எந்தவிதமான குறைபாடும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த முடிவு புதிய அரசின் நிதி நிர்வாகத்தில் தெளிவான அணுகுமுறை இருக்கும் என நம்பப்படுகிறது.
விஜய் தனது நிதியமைச்சர் பொறுப்பு
நிதியமைச்சகத்தை (Finance Department) தனது வசமே வைத்துக்கொள்வது மூலம் மாநிலத்தின் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் நிதி மேலாண்மை முழுமையாக முதலமைச்சரின் கண்காணிப்பில் இருக்கும். இந்த நடவடிக்கை தமிழ்நாட்டின் நிதி நிலைமையை வலுப்படுத்தும் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
9 அமைச்சர்கள்
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசில், முதலமைச்சர் விஜயுடன் சேர்த்து மொத்தம் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கும் வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் மூத்த தலைவர்கள் பலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியின் முக்கிய நிர்வாகிகளான என். ஆனந்த், செங்கோட்டையன், அருண் ராஜ், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் அமைச்சர் பொறுப்பு ஏற்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இதில் பொதுப்பணித் துறை செங்கோட்டையனுக்கும், நகராட்சி நிர்வாகத் துறை என். ஆனந்துக்கும், மின்சாரத் துறை நிர்மல் குமாருக்கும், விளையாட்டு மற்றும் மது விலக்குத் துறை ஆதவ் அர்ஜுனாவுக்கும், ஆதி திராவிடர் நலத் துறை ராஜ்மோகனுக்கும், சிறுபான்மையினர் நலத் துறை முஸ்தபாவுக்கும், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அருண்ராஜுக்கும், பள்ளிக்கல்வித் துறை வெங்கட்ரமணனுக்கும் ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாத் ஆகியோரும் அமைச்சர் பதவி வகிக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த முதற்கட்ட அமைச்சரவை அமைப்பு தவெகவின் நிர்வாக அமைப்பில் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
59 ஆண்டு திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி
தமிழ்நாட்டில் 59 ஆண்டுகால திராவிட சித்தாந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தவெக அரசு பொறுப்பேற்க உள்ளது. இது தமிழர்களுக்கு ஒரு புதிய ஆட்சி மாற்றமாக இருக்கும். புதிய அரசு முதல் 100 நாட்களில் எப்படித் தாக்குப்பிடிக்கும் என்பது பலரின் மனதில் எழும் கேள்வியாக உள்ளது. இந்த காலகட்டம் தான் புதிய அரசின் செயல்திறனை நிரூபிக்கும் முக்கிய கட்டமாக இருக்கும்.
தமிழ்நாட்டின் கடன் - புதிய அரசுக்கு பெரும் சவால்
தவெக அரசு பொறுப்பேற்கும் நிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய கடன் சுமை ஒரு பெரிய சவாலாக உள்ளது. தமிழ்நாடு அரசின் கணக்குப்படி மொத்த கடன் நிலுவை 9,55,000 கோடி ரூபாயாக உள்ளது. ஆனால் மத்திய அரசின் கணக்கில் இதில் சுமார் 26,000 கோடி ரூபாய் வித்தியாசம் இருப்பதாகத் தெரிகிறது. இந்த இடைவெளி இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. மத்திய அரசு தமிழ்நாடு அதிக கடன் வாங்கியதாகக் கூறுகிறது. ஆனால் தமிழக அரசோ தான் வாங்கிய கடன் இவ்வளவுதான் என்று தெரிவிக்கிறது. இந்த முரண்பாடு புதிய அரசுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
கடைசி ஐந்து ஆண்டுகளில் கடன் இரட்டிப்பு
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. 2021ஆம் ஆண்டில் 5 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன், தற்போது 9.21 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது கடைசி ஐந்து ஆண்டுகளில் கடன் அளவு கிட்டத்தட்ட இரு மடங்காகியுள்ளது. இந்த அதிகரிப்பு முந்தைய அரசின் கடன் கொள்கையை பிரதிபலிக்கிறது. விஜய் தலைமையிலான புதிய அரசு இந்த கடன் சுமையை எப்படி நிர்வகிக்கப் போகிறது என்பது தான் மக்கள் கவனிக்கும் முக்கியமான விஷயமாக உள்ளது.
புதிய அரசின் முதல் 100 நாட்கள்
தவெக அரசு பொறுப்பேற்றவுடன் முதல் 100 நாட்களில் நிதி நிர்வாகம், கடன் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். இதற்கு மத்தியில் தவெக கட்சி அள்ளி வீசியுள்ள தேர்தல் வாக்குறுதிகளை எப்படி அமலாக்கம் செய்யப்போகிறார் என்பது முக்கியமான விஷயமாக உள்ளது.
விஜய் நிதித்துறையை நேரடியாகக் கையில் எடுப்பதன் மூலம் தெளிவான நிதி ஒழுங்கை உறுதி செய்ய முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications