தங்கம் விடுக்கும் 'ரெட் அலர்ட்'.. உலகை அச்சுறுத்தும் அடுத்த பேராபத்து இதுதான்?

  • சென்னை: உலக நாடுகளில் தற்போது நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், நெதர்லாந்து மத்திய வங்கி எடுத்துள்ள அதிரடி முடிவு சர்வதேச நிதிச் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தனது நாட்டின் தங்க இருப்பில் சுமார் 86 டன்களை அந்வங்கி அவசரமாக லண்டனுக்கு மாற்றியுள்ளது.

    Advertisement

    பொதுவாக மத்திய வங்கிகள் தங்கள் சேமிப்பை இடம் மாற்றும்போது பெரிய காரணங்களை வெளிப்படையாக அறிவிக்க மாட்டார்கள். ஆனால், நெதர்லாந்து வங்கி "உலகளவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் வரவிருக்கும் நெருக்கடிகளைச் சமாளிக்கவே இந்த நடவடிக்கை" என்று பகிரங்கமாகக் கூறியுள்ளது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

    Advertisement

    தங்கத்தை மாற்றியது எப்படி?

    நெதர்லாந்து மத்திய வங்கியிடம் மொத்தம் 612.4 டன் தங்கம் இருப்பு உள்ளது. இதில் 31.3% அமெரிக்காவின் நியூயார்க்கிலும், 19.7% கனடாவின் ஒட்டாவாவிலும் வைக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், இவற்றில் இருந்து 86 டன் தங்கத்தை லண்டனுக்கு அந்நாடு நகர்த்தியுள்ளது.

    இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், 86 டன் தங்கத்தையும் கப்பலிலோ விமானத்திலோ நேரடியாக அள்ளிச் செல்லவில்லை. சுமார் 27 டன் மட்டுமே நேரடியாக நெதர்லாந்தின் செயிஸ்ட் (Zeist) பெட்டகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் லண்டனுக்கு அனுப்பப்பட்டது. மீதமுள்ள 59 டன் தங்கம் நியூயார்க் சந்தையிலேயே விற்கப்பட்டு, அதே அளவிற்கு இணையான தங்கம் உடனடியாக லண்டன் சந்தையில் வாங்கப்பட்டு 'பேங்க் ஆஃப் இங்கிலாந்து' லாக்கரில் சேர்க்கப்பட்டது. தற்போது நெதர்லாந்தின் மொத்த தங்கத்தில் 32% லண்டனில் பாதுகாக்கப்படுகிறது.

    Advertisement

    அமெரிக்காவை விட்டு லண்டனைத் தேர்வு செய்தது ஏன்?

    லண்டனில்தான் சர்வதேச தங்கத்தின் மிகப்பெரிய மொத்த விற்பனை சந்தை செயல்படுகிறது. அங்குள்ள பேங்க் ஆஃப் இங்கிலாந்து வங்கியில் சுமார் 4 லட்சம் தங்கக் கட்டிகள் உள்ளன. அங்கு தங்கத்தை நேரடியாக இடம் மாற்றாமல், ஆவணங்கள் மூலம் உடனடியாக விற்று பணமாகவோ அல்லது பிற தேவைகளுக்கோ மாற்றிக்கொள்ள முடியும். ஒருவேளை திடீரென ஒரு சர்வதேசப் போரோ அல்லது பொருளாதாரத் தடையோ ஏற்பட்டால், நியூயார்க்கில் இருக்கும் தங்கத்தை விட லண்டனில் இருக்கும் தங்கத்தையே மிக வேகமாகப் பணமாக மாற்ற முடியும் என நெதர்லாந்து கருதுகிறது.

    Advertisement

    ரஷ்யாவுக்கு நடந்த பாடம்.. நாடுகளுக்கு வந்த பயம்

    2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் மத்திய வங்கிக்குச் சொந்தமான பல நூறு பில்லியன் டாலர் மதிப்பிலான வெளிநாட்டுச் சொத்துக்களை முடக்கின. இது மற்ற நாடுகளுக்குப் பெரிய எச்சரிக்கையாக அமைந்தது. நாம் எவ்வளவு பணக்கார நாடாக இருந்தாலும், நமது சொத்துக்கள் அடுத்த நாட்டின் அதிகார வரம்பிற்குள் இருக்கும் வரை, அரசியல் சூழல் மாறினால் அது நம் கைக்குக் கிடைக்காமல் போகலாம் என்ற அச்சம் உலக நாடுகளுக்கு வந்தது.

    ஆனால் தங்கம் என்பது எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கத்தின் வாக்குறுதியையோ கடனையோ சார்ந்தது அல்ல. கையில் தங்கம் இருந்தால் எந்த இக்கட்டான சூழலிலும் வர்த்தகம் செய்ய முடியும். இதனால்தான் உலக நாடுகள் தங்களின் தங்கத்தை பாதுகாப்பான அல்லது சொந்த நாட்டுப் பெட்டகங்களுக்கு மாற்றத் தொடங்கியுள்ளன. முன்னதாக பிரான்ஸ் நாடும் நியூயார்க்கில் இருந்த தனது 129 டன் தங்கத்தை ஐரோப்பாவிற்கே முழுமையாகக் கொண்டு சென்றது.

    Advertisement

    இந்தியாவின் புத்திசாலித்தனமான நடவடிக்கை

    இந்தியாவும் இதே பாணியில் தனது தங்கப் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி வெளிநாடுகளில், குறிப்பாக லண்டனில் வைக்கப்பட்டிருந்த தனது தங்கத்தை படிப்படியாக தாயகத்திற்கே கொண்டு வந்து சேர்த்துள்ளது. 2024 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் 300 டன்களுக்கும் அதிகமான தங்கத்தை இந்தியா தன் சொந்த நாட்டு பெட்டகங்களுக்குக் கொண்டுவந்தது. இதன் மூலம் வெளிநாடுகளில் வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் தங்கத்தின் பங்கு 55 சதவீதத்தில் இருந்து வெறும் 22 சதவீதமாகக் குறைந்துள்ளது.

    தங்கத்தின் எதிர்காலம் என்ன?

    அமெரிக்காவின் கடன் சுமை 32 டிரில்லியன் டாலரைத் தாண்டி அதிகரித்துக் கொண்டே செல்வதும், வட்டி விகித மாற்றங்களை விட புவிசார் அரசியல் சண்டைகளே உலகச் சந்தையை ஆள்வதும் தங்கத்தின் தேவையை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளன. உலக தங்க கவுன்சிலின் ஆய்வின்படி, 89% மத்திய வங்கிகள் தங்களுடைய தங்க இருப்பை மேலும் உயர்த்தவே திட்டமிட்டுள்ளன.

    Advertisement

    பிரபல முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ், சர்வதேச மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கி வருவதால், வரும் காலங்களில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 4,900 டாலரை எட்டும் என்று கணித்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால், காகிதப் பணத்தின் மீதான நம்பிக்கை குறைந்து, ஆபத்துக் காலத்தில் கைகொடுக்கும் ஒரே சொத்து தங்கம்தான் என்பதை உலக நாடுகள் தங்களின் அதிரடி நடவடிக்கைகள் மூலம் உணர்த்தி வருகின்றன.

    English Summary

    Why Dutch Central Bank Moved 86 Tonnes of Gold Out of US: Is a Global Crisis Brewing?