கோவை தமிழகத்தில் யானை மனித மோதல் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே யானை மனித மோதல் அதிகம் நடைபெறும் பகுதியாக கோவை உள்ளது. சட்டவிரோதமாக மின்வேலிகளில் சிக்கி யானைகள் உயிரிழப்பது வாடிக்கையாகிவிட்டது. மின்வேலியில் யானை உயிரிழந்த விவகாரத்தில் தம்பதிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தங்களின் சுய நலத்துக்காக யானையை கொலை செய்யலாமா என்றும் கோவை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
கோவை மாவட்டம், பேரூர் அருகே போளுவாம்பட்டி வனச்சரகத்துக்குட்பட்டு அரளவடி பகுதி உள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஆறுச்சாமி என்கிற விவசாயி (வயது 65) 7 ஏக்கர் நிலத்தில் நெல் நடவு செய்திருந்தார். அவரின் தோட்டத்திற்கு யானை புகுந்து பயிரை சேதப்படுத்தியுள்ளது. அதைத் தடுப்பதற்காக ஆறுசாமி தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். அதுவும்
கம்பி வேலி அமைத்து, அதன் மீது மின் இணைப்பு கொடுத்துள்ளார்.
சட்டப்படி கம்பி வேலி அமைத்து அதில் மின்சார இணைப்பு கொடுப்பது குற்றம். ஆறுச்சாமி முழு சக்தி கொண்ட மின் இணைப்பை வேலியில் கொடுத்திருந்தார். கடந்த 2021 ஜனவரி 5 ஆம் தேதி 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை அவரின் தோட்டத்திற்கு உணவு தேடி வந்துள்ளது. கம்பி வேலிக்குள் நுழைய முயற்சித்தபோது, மின்சாரம் பாய்ந்ததில் யானை அலறித்துடித்து உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து போளுவாம்பட்டி வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஆறுச்சாமி மற்றும் அவரின் மனைவி திலகவதி மீது வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த சில வருடங்களாக விசாரித்த சிபிஐ அதிகாரிகள், கோவை முதன்மை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி சிவக்குமார் விசாரித்தார். இதில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆறுச்சாமி மற்றும் அவரின் மனைவி திலகவதி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரு.23,000 அபராதம் விதிக்கப்பட்டது. சிபிஐ தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் ஆஜரானார். இதேபோல கடந்த 2019 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி பகுதியிலும் தோட்டத்தில் உள்ள மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது. இதுதொடர்பாக காளையர் மற்றும் அவரின் மகன் மாதப்பா ஆகிய இருவருக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவர்கள் இருவருக்கும் தலா மூன்றரை ஆண்டு சிறை தண்டனை, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தீர்ப்பு வழங்கியபோது நீதிதி சிவக்குமார், "எதிரிகள் செய்த குற்றம் ஏற்க முடியாது. தங்களின் சுயநலத்திற்காக ஒரு வாயில்லா ஜீவனான யானையை கொலை செய்தது குற்ற செயலாகும். இந்த உலகத்திலேயே யானை மிகவும் புத்திசாலியான விலங்கு. கோயில்களில் யானையை கடவுளாக, ஒரு புனிதமான மிருகமாக வைத்து பூஜை செய்து வருகிறார்கள். திருவிழாக்களில் அதன் மீது கடவுள் சிலைகளை வைத்து ஊர்வலம் செல்கிறார்கள். இந்தியா, சீனா போன்ற இடங்களில் யானைகளை கடவுளாகவே பூஜிக்கின்றனர். எதிரிகள் செய்த செயல் தண்டனையை குறைக்க கூடிய செயல் அல்ல. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற தமிழ் பழமொழி உள்ளது. எனவே இவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுகிறது"என்று கூறினார்.சட்டப்படி தவறு
சிறை தண்டனை
சுயநலத்துக்காக