கோவை: கோவை மாணவர் அகிலன் தற்கொலை விவகாரத்தில் புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் ரம்யா பாரதிக்கு எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை பீளமேட்டில் உள்ள கே.கே. நாயுடு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் அகிலன். மாணவர் அகிலனை பள்ளிக்கூடத்தில் வைத்து சக மாணவர்கள் சாதி பெயரை சொல்லி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த மாணவர் அகிலன் வீட்டுக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவர் அகிலனின் மரணத்திற்கு காரணமாக இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் பீளமேடு போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து தலைமை ஆசிரியர் அருண்குமார் (வயது 43), அகிலன் படித்த 11 ஆம் வகுப்பின் வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் மற்றும் 2 மாணவர்கள் என 4 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, ஆசிரியர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார். தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, மாணவர் அகிலன் தற்கொலை விவகாரத்தில் புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் ரம்யா பாரதிக்கு எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வகுப்பறையில் யாரெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவீர்கள் என ஆசிரியர் விஜயகுமார் கேட்டதாகவும் அதனை தொடர்ந்து மாணவர்கள் கிண்டல் செய்ததாகவும் அகிலனின் தாய் புகார் அளித்து இருந்த நிலையில், வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டமும் பாய்ந்துள்ளது.மாணவர் விடுதியில் மாட்டுக்கறி தருவோம் என்ற வன்னியரசு எங்கே? அகிலன் தற்கொலையில் பெருத்த மௌனம்