கோவை: சமூகவலைதளங்களில் வியூஸ்காக யூடியூபர்கள் அடிக்கடி எல்லை மீறுவது வழக்கமாகிவிட்டது. கன்டென்டுக்காக பலவித உக்திகளை கடைபிடிக்கிறார்கள். யூடியூபில் தம்பதியாக வீடியோ பதிவு செய்வது டிரெண்டாகவுள்ளது. அந்த வகையில் யூடியூபர்கள் கிருஷ், ஐஷ்வர்யா மிகவும் பிரபலம். இந்நிலையில் ஆபாசத்தை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளதாக யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் நவேஷ் ராஜ், கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸில் யூடியூப் பிரபல தம்பதி கிருஷ் - ஐஷ்வர்யா மீது ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கிருஷ் மற்றும் ஐஷ்வர்யா ரகு தம்பதி, தங்களின் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசமான கருத்துகளை வெளியிட்டுள்ளதாக கூறி நடவடிக்கை கேட்டு புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், "கிருஷ், ஐஷ்வர்யா தம்பதி சமூகவலைதளங்களில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றி பிரபலமானவர்கள். இவர்கள் சமீபத்தில் நாட்டி அமெரிக்கா (Naughty America) என்கிற பெயரில் ஆபாசமான வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வீடியோக்களை 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளும் அதிகளவு பார்க்கிறார்கள். எனவே அவர்களை திசை திருப்பும் வகையில் இந்த வீடியோக்களின் செயல்பாடு உள்ளது. இது சமூகவலைதளங்களில் வைரலாக பரவுவதால் தவறான வழி நடத்துதலாக அமையும். இது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (பிரிவு 2000), பிஎன்எஸ் சட்டம் 2023 பிரிவுகளின் கீழ் சிறுவர், சிறுமிகளை மிகவும் பாதிக்கும் என்பதால் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அந்த சட்டப் பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த வீடியோக்களை யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். தொடர்ந்து அவர்களின் சமூகவலைதள கணக்குகளை முடக்க வேண்டும். இதுபோன்ற ஆபாசத்தை தூண்டும் வீடியோக்களை பதிவேற்றுவதன் பின்னணியை ஆய்வு செய்ய வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் கோவை சைபர் க்ரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா அதிர்ச்சியடைந்துள்ளனர்.யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா
சைபர் க்ரைமில் புகார்