“ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாகவும் நடந்துகொள்ள வேண்டும்.. விஜய்க்கு அறிவுரை சொன்ன எடப்பாடி

  • கோவை: "பெண்கள் பாதுகாப்பில் வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாகவும் நடந்து கொள்ள வேண்டும். விளம்பர நடவடிக்கைகளில் மட்டும் அல்லாமல், நிலையான மற்றும் பயனுள்ள பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதிலும் இந்த அரசு தீவிரம் காட்ட வேண்டும்" என தவெக அரசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    கோவை அருகே சூலூரை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி நேற்று முன் தினம் மாலையில் கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திவீர விசாரணை நடத்தி வந்தனர்.

    Advertisement

    இதனிடையே, சூலூர் அருகே கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் முட்புதரில் நேற்று இரவு சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியை 2 பேர் கடத்திச்சென்று கொலை செய்து உடலை முட்புதரில் வீசியுள்ளனர். இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா? என்பது குறித்து பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும்.

    இந்த சம்பவம் கோவை மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், தவெக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த அரசு பெண்கள் பாதுகாப்பு குறித்து வெறும் விளம்பர நடவடிக்கைகளில் மட்டும் அல்லாமல், நிலையான மற்றும் பயனுள்ள பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்ட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி மக்களிடையே மேலும் அச்சத்தையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது.

    பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இந்த அரசு, இத்தகைய கொடூர சம்பவங்களைத் தடுக்கத் தவறியது வேதனைக்குரியது. சிறுமி காணாமல் போன சில மணி நேரத்திலேயே புகார் அளிக்கப்பட்டிருந்த போதிலும், துரிதமான நடவடிக்கை எடுக்கப்படாதது சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக திறனில் உள்ள குறைபாடுகளை வெளிக்காட்டுகிறது.

    Advertisement

    பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக இருவர் கைது செய்யப்பட்டிருந்தாலும், ஒரு ஏதுமறியா சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியாத நிலை அரசின் அலட்சியத்தையும் செயல்திறன் குறைவையும் சுட்டிக்காட்டுகிறது.

    இந்த அரசு பெண்கள் பாதுகாப்பு குறித்து வெறும் விளம்பர நடவடிக்கைகளில் மட்டும் அல்லாமல், நிலையான மற்றும் பயனுள்ள பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்ட வேண்டும். வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாகவும் நடந்து கொள்ள வேண்டும். இந்த மனிதாபிமானமற்ற குற்றச்செயலை வன்மையாக கண்டிப்பதுடன்,

    குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அரசு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    “TVK government must act as a ‘real’ government—rather than merely a ‘Reels’ government—when it comes to women's safety. It must demonstrate earnestness not only in publicity stunts but also in establishing sustainable and effective safety mechanisms,” AIADMK General Secretary Edappadi Palaniswami has urged Vijay government.