மண்டையை உடைத்தும் ஜெயிலுக்கு போகல.. வைரல் வீடியோவால் மீண்டும் போராட்டத்தில் குதித்த சிஜேபி

  • டெல்லி: டெல்லியில் நடந்த ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் மாணவர் ஒருவரின் தந்தையைத் தாக்கியதாக வலதுசாரி இன்ஃப்ளூயன்ஸர் ஒருவர் பாட்காஸ்ட் வீடியோவில் வெளிப்படையாகப் பேசிய விவகாரம், தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரை உடனடியாகக் கைது செய்யக் கோரி காக்ரோச் ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை காலை படேல் சவுக்கிலிருந்து பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையம் நோக்கிப் பேரணியாகச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Advertisement

    வைரல் வீடியோவும் வெடித்த சர்ச்சையும்

    கடந்த ஜூன் 23 அன்று நீட் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் சிஜேபி அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட மோதலில் மாணவர் செயற்பாட்டாளர் நிஷு ஆசாத்தின் தந்தை சஞ்சய் குமார் என்பவர் தலையில் பலத்த காயமடைந்தார்.

    இந்நிலையில், அண்மையில் வெளியான பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய வலதுசாரி இன்ஃப்ளூயன்ஸர் சுதந்திர பரத்வாஜ் என்பவர், "அன்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் தந்தையின் மண்டையை நான்தான் உடைத்தேன்.. அவருக்கு 60 தையல்கள் போடப்பட்டன, அவர் ஆம்புலன்ஸில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.

    Advertisement

    என் மீது கொலை முயற்சி வழக்கு பாய்ந்திருக்க வேண்டும். ஆனால், அரசியல் தலைவர்களின் தொடர்பு இருந்ததால் நான் சிறைக்கே செல்லவில்லை. இரவு முழுவதும் சுதந்திரமாகத்தான் சுற்றிக்கொண்டிருந்தேன்" என்று வெளிப்படையாகப் பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    காவல் நிலையத்தை நோக்கிப் பேரணி

    இந்த வீடியோ ஆதாரத்தை முன்வைத்து, சிஜேபி செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், இணை ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரான்கா, பாதிக்கப்பட்ட சஞ்சய் குமார் மற்றும் அவரது மகள் நிஷு ஆசாத் ஆகியோர் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். அசம்பாவிதங்களைத் தடுக்க காவல் நிலையத்தைச் சுற்றி பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு, துணை ராணுவப் படையினருடன் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

    Advertisement

    போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரான்கா, "அமைதியான முறையில் போராட்டம் நடத்திய எங்கள் மீது ரவுடி கும்பல் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. சஞ்சய் குமார் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சுதந்திர பரத்வாஜ் மீது கொலை முயற்சி மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாகப் பிணையில் வெளிவர முடியாதபடி கைது செய்ய வேண்டும். வெளிப்படையாகக் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னரும் டெல்லி காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது?" எனக் கேள்வி எழுப்பினர்.

    இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஆசாத் சமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத் எம்.பி மற்றும் டெல்லி இளைஞர் காங்கிரஸ் தலைவர் அக்ஷய் லக்ரா ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

    Advertisement

    மோடி, அமித் ஷாவை நோக்கி ராகுல் காந்தி பாய்ச்சல்

    இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "ஒருபுறம் மாணவர்களுக்கு எதிராக டெல்லி காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறது; மறுபுறம் ஒரு தலித் மாணவியின் தந்தையின் தலையை உடைத்ததாகத் திமிராகப் பேசும் நபர் சுதந்திரமாகச் சுற்றுகிறார். அந்தப் பெண்ணுக்கு நான் உறுதுணையாக நிற்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இத்தகைய குற்றவாளிகளுக்குத் தங்களது கட்சியில் அடைக்கலம் தருகிறார்களா?" எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    சர்ச்சை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "ஜூன் 23 அன்று ஜந்தர் மந்தரில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சஞ்சய் குமார் என்பவருக்குக் கையில் அணிந்திருந்த வளையல் பட்டதால் மட்டுமே லேசான காயம் ஏற்பட்டது.. மண்டை உடைந்துவிட்டதாகக் கூறுவது தவறான தகவல். இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சுதந்திர பரத்வாஜிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளத.. விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை" என்று காவல்துறை மறுத்துள்ளது.

    இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த சுதந்திர பரத்வாஜ், "என்னை 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் சூழ்ந்து அடித்துக் கொல்ல முயன்றது. தற்காப்புக்காக நான் செயல்பட்டபோதுதான் அவருக்குக் காயம் ஏற்பட்டது. பாட்காஸ்ட்டில் நான் கிண்டலாகப் பேசியதை தவறாகச் சித்தரித்துப் பரப்பி வருகிறார்கள்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

    இன்ஃப்ளூயன்ஸரின் வீடியோ ஒப்புதல் வாக்குமூலம், எதிர்க்கட்சிகளின் கடுமையான கண்டனம் மற்றும் தொடர் போராட்டங்களால் டெல்லி அரசியல் களம் தற்போது தகிக்கத் தொடங்கியுள்ளது.

    English Summary

    Jantar Mantar Row: CJP Marches to Police Station Over Viral Video Boast