டெல்லி: ஃப்ளைதுபாய் விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட ஆபத்தான சூழலை சமாளித்து பெரும் விபத்து ஏற்படாமல் தடுத்த இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் பேசினார். படுகாயமடைந்த நிலையிலும் பயணிகளின் உயிரை காப்பாற்ற ஸ்மித் மச்சார் காட்டிய துணிச்சலை பிரதமர் பாராட்டினார். அவர் விரைவில் முழுமையாக குணமடையவும் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி 174 பேருடன் ஃப்ளைதுபாய் விமானம் சென்றது. அப்போது நடுவானில் துணை விமானி ஒருவர் பைலட் ஸ்மித் மச்சாரை தாக்கியுள்ளார். கையில் இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். படுகாயமடைந்த இந்திய விமானி ஸ்மித், தனது உயிரை பொருட்படுத்தாமல் பயணிகளை காப்பாற்றியுள்ளார்.
படுகாயமடைந்த ஸ்மித் இப்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உட்பட பலரும் பைலட் ஸ்மித்தை பாராட்டி வருகிறார்கள். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பைலட் ஸ்மித்துடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் பேசினார். அப்போது படுகாயமடைந்த போதிலும் விமானத்தை காப்பாற்றிய ஸ்மித்தை பிரதமர் மோடி பாராட்டினர். ஐக்கிய அமீரக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுமித் மச்சார், சம்பவத்தின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், அந்த ஆபத்தான நேரத்தில் துணிச்சலுடன் செயல்பட தனக்கு உதவிய விஷயங்களையும் பிரதமரிடம் பகிர்ந்து கொண்டார். முன்னதாக நேற்றைய தினம் தான் ஸ்மித் மச்சாரின் மனைவி மற்றும் பெற்றோருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியிருந்தார். அப்போது, விமானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகங்கள் மூலம் வழங்குவதாக அவர் உறுதியளித்திருந்தார். முன்னதாக பிரதமர் மோடி பைலட் ஸ்மித்தை பாராட்டி தனது ட்விட்டரில், "கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ.. மிக கடுமையான ஆபத்துகளுக்கு மத்தியிலும், பலத்த காயமடைந்த நிலையிலும், மற்றவர்களின் உயிரைக் காக்க அவர் அளப்பரிய துணிச்சலையும் அசைக்க முடியாத மன உறுதியையும் வெளிப்படுத்தினார். அவரது வீரச்செயல் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றவும், ஒரு பெரும் துயரத்தை தவிர்க்கவும் உதவியது. கேப்டன் மச்சார் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. அவர் விரைவில் குணமடையவும் நல்ல உடல்நலனை பெறவும் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், ஒட்டுமொத்த இந்தியாவும் கேப்டன் ஸ்மித் மச்சாரை நினைத்து பெருமை கொள்கிறது என்றும் இரட்டை கோபுர தாக்குதல் போன்ற பேரழிவை அவர் தடுத்துள்ளார் எனவும் பாராட்டியுள்ளார். கடந்த புதன்கிழமை ஃப்ளைதுபாய் விமானத்தில் துணை விமானியுடன் ஏற்பட்ட மோதலின்போது சுமித் மச்சார் பலத்த காயமடைந்தார். இருப்பினும், காயங்களைப் பொருட்படுத்தாமல் காக்பிட் கதவை திறந்துள்ளார். அதன் பிறகே விமானக் குழுவினரும் பயணிகளும் காக்பிட்டுக்குள் சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடிந்ததுள்ளது. பலத்த காயத்திற்கு மத்தியிலும் ஸ்மித் செய்த இந்த ஒரு செயலே விமானம் விபத்திற்குள்ளாகாமல் தடுத்துள்ளது. அந்த நேரத்தில் சுமார் 34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போயிங் 737 விமானம், சில நொடிகளில் சுமார் 23,000 அடி வேகத்தில் கீழ்நோக்கி சரிந்துள்ளது. பின்னர் அது சுமார் 15,600 அடி உயரத்தை எட்டியது. சரியாக அப்போது பயணிகள் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.பிரதமர் மோடி
உதவிகள்
பாராட்டு
பின்னணி