டெல்லி: அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு நடந்துள்ளதாகக் கூறி, இது குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாஜக ஆட்சியில், ராமர் கோயில் உண்டியலிலிருந்து பணம் திருடப்பட்டிருக்கும் சம்பவம், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்படி இருக்கையில் இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. கே.சி. வேணுகோபால் எழுதியிருக்கும் கடிதத்தில், ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் நடந்துள்ள முறைகேட்டை "சந்தா சோரி" (நன்கொடை திருட்டு) மெகா ஊழல் என்று அவர் வர்ணித்துள்ளார். இது கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் என்று அவர் சாடியுள்ளார். மரியாத புருஷோத்தமர் என்று போற்றப்படும் பகவான் ராமரின் பெயர், இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டுள்ளது என்று வேணுகோபால் குற்றம் சாட்டியுள்ளார். இந்த முறைகேட்டை மறைப்பதற்காக கடந்த 7 முதல் 8 மாத கால முக்கியமான சிசிடிவி காட்சிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். உத்தரப் பிரதேச அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழுவின் (SIT) விசாரணை வெறும் கண் துடைப்பு என்றும், இது அதிகார மட்டத்தில் உள்ள பெரிய புள்ளிகளை காப்பாற்றுவதற்காகவே நடத்தப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் வெறும் சிறிய பணியாளர்கள் மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார். ராமர் கோயில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், மத்திய அரசால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை மூலம் பொது நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. எனவே, கோயில் நிர்வாகத்தில் நடக்கும் முறைகேடுகளுக்கு மத்திய அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டுமானால், ஒரு சுதந்திரமான அமைப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கே.சி. வேணுகோபால் பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.