சீனாவில் விஞ்ஞானிகள்.. இந்தியாவில் நடிகர்கள்.. தொழில் அதிபர் ஹர்ஷ் கோயங்கா எழுப்பிய 'நச்'கேள்வி

  • டெல்லி: சீனா விஞ்ஞானிகளைப் பொது இடங்களில் உள்ள பிரம்மாண்டத் திரைகளில் காட்டி(பேனர்களில்) பெருமைப்பபடுத்துகிறது, ஆனால் இந்தியாவில்.. அரசியல்வாதிகள் மற்றும் நடிகர், நடிகைகள் படங்கள் பிரம்மாண்ட விளம்பர பேனர்களில் உள்ளனர். அரசியல்வாதிகள் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு பேனர் வைத்து போற்றுவதற்கு பதிலாக, விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஏன் காட்சிப்படுத்தக்கூடாது என்று தொழில் அதிபர் ஹர்ஷ் கோயங்கா கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    இன்றைக்கு திரையில் தோன்றும் நடிகர்களை அதிகம் பார்க்கும் குழந்தைகள்,அவர்களுக்கு கிடைக்கும் பெயர், புகழை பார்த்து அவரை போல ஆக விரும்புகிறது. உண்மையில் நடிகர், நடிகைகளுக்கு இந்தியாவில் கிடைக்கும் பணம், புகழ் மற்ற துறைகளில் இருப்பது இல்லை.. இதனால் குழந்தையாக இருக்கும் போதே பலர் எனக்கு அந்த நடிகரை பிடிக்கும், இந்த நடிகைகைய பிடிக்கும் என்று மனரீதியாக அவர்களை குருவாகவும், அவர்களை வழிகாட்டியாகவும் நினைக்க தொடங்குகிறார்கள்.

    Advertisement

    அப்படி நினைப்பது எங்கே கொண்டு போய் நிறுத்திவிடுகிறது என்றால், அவர்கள் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்பதாக வந்து நிற்கிறது. அவர்கள் அரசியலில் இறங்கி வெற்றியும் பெறுகிறார்கள். மக்கள் தங்களை ஆள்பவர்களை திரையில் தேடாமல் நிஜத்தில் தான் தேட வேண்டும்.. ஆனால் வெறும் சினிமா புகழை வைத்து அவர்கள் ஆட்சியாளர்கள் என்கிற அளவிற்கு வருவதால் அவர்களை போல் நடித்தால் போதும். அவர்களை போல மாற வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால் படித்து முன்னேற வேண்டியவர்கள் நடித்தால் முன்னேறலாம் என்ற மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். படிப்பவர்களை விட நடிப்பவர்கள் தான் பெரிய ஆளுமை என்கிற பிம்பம் பதிந்து வருகிறது. இதனை மாற்ற வேண்டும் என்று குரல்கள் வலுத்து வருகிறது.

    Advertisement

    இதுபற்றி பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா கூறுகையில், "சீனா பொது இடங்களில் உள்ள ராட்சத திரைகளில் அறிவியல் அறிஞர்களின் படங்களை வெளியிடுகிறது. ஆனால் இந்தியாவில், நமது விளம்பரப் பலகைகளில் அரசியல்வாதிகளும் சினிமா நட்சத்திரங்களுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நாம் யாரைக் கொண்டாடுகிறோமோ, அதைப்பார்த்துதான் நமது குழந்தைகள் எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். நமது அறிவியல் அறிஞர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தேசத்தை உருவாக்குபவர்களை நாம் ஏன் அந்த விளம்பரப் பலகைகளில் வைக்கக் கூடாது?" என வினா எழுப்பினார்.

    சம்பவத்தின் பின்னணி

    அண்மையில் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் புதிதாக திறக்கப்பட்ட சாண்ட்விச் கடை ஒன்றுக்கு 'மனித உருவ ரோபோ' (Humanoid Robot) ஒன்று சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தது. அந்த ரோபோவுக்கு காவி ஆடை அணிவிக்கப்பட்டு, திலகமிட்டு, பூஜை செய்து பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அது நடனமாடி அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.

    Advertisement

    இந்த சுவாரஸ்யமான திறப்பு விழா வீடியோவை ஹர்ஷ் கோயங்கா தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்து, ரோபோவை சிறப்பு விருந்தினராக ஆக்கியதன் பின்னணியைத்தான் கோயங்கோ கேள்வி எழுப்பினார். இது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்கள் மீதான மக்களின் ஈர்ப்பு அதிகரித்துவரும் வேளையில், அறிவியல் அறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களைப் பொதுவெளியில் முன்னிலைப்படுத்தி பெருமைப்படுத்த வேண்டும் என்று கோயங்கா வேண்டுகோள் வைத்துள்ளார்.

    English Summary

    Harsh Goenka questioned why Indian hoardings feature politicians and actors instead of scientists, teachers, and doctors like in China, urging India to celebrate real nation-builders for children.