டெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் இப்போது அடுத்தகட்டத்திற்குத் தீவிரமடைந்துள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் இந்த போராட்டத்தில் இணைந்து, உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான பொதுத் தேர்வுகளில் நடந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கையைக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக அவர்கள் கடந்த ஜூன் 20ம் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே இப்போது இந்த போராட்டம் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வலியுறுத்தியும் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். சோனம் வாங்சுக் தனது இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பாக, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனரான அபிஜீத் திப்கேவுடன் இணைந்து டெல்லியில் உள்ள ராஜ்காட் பகுதிக்குச் சென்று மகாத்மா காந்தியினுடைய நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு ஜந்தர் மந்தரில் திரண்டிருந்த போராட்டக்காரர்கள் முன்னிலையில் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, உண்ணாவிரதப் போராட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. இந்த போராட்டத்தில் இளைஞர்கள் ஆதரவு அதிகமாகவே இருக்கிறது. சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கெடுக்க ஜந்தர் மந்தர் பகுதியில் நூற்றுக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும், பல்வேறு விவசாயச் சங்கப் பிரதிநிதிகளும் திரண்டுள்ளனர். இந்தப் போராட்டம் தீவிரமடைந்து வரும் சூழலில், உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரவிருந்த பல விவசாயச் சங்கத் தலைவர்கள் தங்களது வீடுகளிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அபிஜீத் திப்கே குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில், "விவசாயத் தலைவர்கள் ஜந்தர் மந்தர் போராட்டக் களத்திற்கு வருவதைத் தடுக்கும் நோக்கத்தில் அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்" என்று சாடினார். கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனரான அபிஜீத் திப்கே கடந்த சில நாட்களாகவே மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு பொது இயக்கங்கள் இந்த போராட்டத்திற்கு தங்களது ஆதரவைத் தர வேண்டும் என்று தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார். மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் உள்பட ஒட்டுமொத்த தேர்வு முறைகளிலும் நிலவும் குழப்பங்களுக்கும் முறைகேடுகளுக்கும் தார்மீகப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் விலக வேண்டும். மேலும், மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே அவர்கள் கோரிக்கையாக உள்ளது. இந்தப் பிரச்சனை என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட தேர்வு தொடர்பானது இல்லை என்றும் ஒட்டுமொத்த கல்வித் துறையின் மீதான இந்திய மாணவர்களின் நம்பிக்கை மற்றும் தேர்வு முறைகளின் வெளிப்படைத்தன்மை போன்ற விவகாரங்களுடன் தொடர்புடையது என்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தரப்பில் சொல்லப்படுகிறது.உண்ணாவிரதப் போராட்டம்
இளைஞர்கள் ஆதரவு
கோரிக்கை