அபார்ட்மென்ட் பார்க்கில் சறுக்கு பலகை பெயர்ந்து விழுந்து 4 வயது சிறுமி பலி! புனேவில் சோகம்
புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இரும்பு சறுக்கு பலகை பெயர்ந்து விழுந்ததில் 4 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பான இடமாகக் கருதி விளையாட அனுப்பும் குடியிருப்பு வளாக விளையாட்டு மைதானத்திலேயே, ஒரு பிஞ்சு உயிர் அலட்சியத்தின் காரணமாகப் பறிபோயுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.
புனே ஹடாப்சர் பகுதியில் உள்ள மகர்பட்டா குடியிருப்பு வளாகத்தில், கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி மதியம் 12:30 மணியளவில் அந்தச் சிறுமி துள்ளிக்குதித்து விளையாடச் சென்றாள். ஆனால், அந்த மதியம் அவளது வாழ்வின் கடைசி மதியமாக மாறும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அவள் மகிழ்ச்சியோடு ஏறி விளையாடிய அந்த இரும்புச் சறுக்கு பலகை (Slide), திடீரென அடியோடு பெயர்ந்து அந்தப் பிஞ்சின் மீதே விழுந்தது.

கனமான இரும்புப் பலகை தலையில் தாக்கியதில், அந்தச் சிறுமி ரத்த வெள்ளத்தில் துடித்தாள். அவளது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவளை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இத்தனை நாளாக மருத்துவமனையில் மருத்துவர்கள் அவளைக் காப்பாற்றப் போராடினர். எனினும், தலையில் ஏற்பட்ட ஆழமான காயம் மற்றும் அளவுக்கு அதிகமான ரத்தப்போக்கு காரணமாக, சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி இன்று உயிரிழந்தாள். தன் கண் முன்னே துள்ளித் திரிந்த குழந்தை, சடலமாகத் திரும்பியதைக் கண்டு அவளது குடும்பத்தினர் கதறி அழுத காட்சி காண்போர் நெஞ்சைப் பிழிவதாக இருந்தது.
இந்தச் சம்பவம் வெறும் விபத்து மட்டுமல்ல, இது ஒரு நிர்வாகத்தின் 'அலட்சியம்' என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். "அந்தச் சறுக்கு பலகை பழுதடைந்து இருப்பதைச் சிறுமியின் தந்தை ஏற்கனவே கவனித்துள்ளார். இது ஆபத்தானது என்று குடியிருப்புச் சங்கத் தலைவரிடமும், உறுப்பினர்களிடமும் பலமுறை புகார் அளித்துள்ளார். ஆனால், அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் அந்தப் புகாரைக் கண்டுகொள்ளவே இல்லை" என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரு தந்தையின் எச்சரிக்கையைத் துச்சமாக நினைத்ததன் விளைவாக இன்று ஒரு பிஞ்சு உயிர் மண்ணுக்குள் சென்றுவிட்டது. இது தொடர்பாக புனே காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தந்தையின் புகாரைப் புறக்கணித்து, பராமரிப்புப் பணிகளைச் செய்யத் தவறிய குடியிருப்புச் சங்கத் தலைவர் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது 'அலட்சியத்தால் மரணம் விளைவித்தல்' பிரிவின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
நிர்வாகத்தின் அலட்சியத்திற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம்? என்ற கேள்வியுடன் இந்தச் சம்பவம் புனே மக்களைப் பெரும் சோகத்திலும், ஆத்திரத்திலும் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications