சிக்கும் லாலு பிரசாத் யாதவ்? கடைசி நேரத்தில் மொத்த குடும்பத்திற்கும் எதிராக வந்த நீதிமன்ற உத்தரவு
பாட்னா: பீகாரில் சில வாரங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், ஆர்ஜேடி தலைவர்களுக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஐஆர்சிடிசி ஹோட்டல் தொடர்பான ஊழல் வழக்கு ஒன்றில் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்குப் பாதகமான தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
பீகார் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் இப்போது மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதாவது ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் மனைவி ரப்ரி தேவி ஆகியோருக்கு எதிராக ஊழல் வழக்கில் இன்று குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ள டெல்லி நீதிமன்றம், சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளது.. இது ஆர்ஜேடி கட்சிக்குப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

டெல்லி நீதிமன்றம்
இந்தியத் தண்டனைச் சட்டத்தில் மோசடி, கிரிமினல் சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. பீகார் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் சூழலில் டெல்லி நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை ஆர்ஜேடிக்கு பின்னடைவையே ஏற்படுத்தும்.
பின்னணி
கடந்த 2004 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் லாலு யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ஐஆர்சிடிசி ஹோட்டல்களின் பராமரிப்பு ஒப்பந்தங்களை வழங்குவதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுகிறது. பிஎன்ஆர் ராஞ்சி மற்றும் பிஎன்ஆர் பூரி ஆகிய இரண்டு ஐஆர்சிடிசி ஹோட்டல்களின் பராமரிப்பு ஒப்பந்தம் சுஜாதா ஹோட்டலுக்கு வழங்கப்பட்டதே இந்த வழக்கின் பிரதானக் குற்றச்சாட்டு.
அந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதற்காக லாலு யாதவ் ஒரு பினாமி நிறுவனம் மூலம் மூன்று ஏக்கர் நிலத்தைப் பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக 2017ஆம் ஆண்டில், லாலு யாதவ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளதாக டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ கூறியுள்ளது. ஆனால் லாலு யாதவின் வழக்கறிஞர், குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், ஒப்பந்தங்கள் நியாயமாகவே வழங்கப்பட்டன என்றும் வாதிட்டார்.
நீதிமன்றம் சொல்வது என்ன
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "மோசடி நடந்ததாகச் சந்தேகம் எழுந்தாலே அது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டது. மேலும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருந்தால் அது சாதாரணக் குற்றச்சாட்டு இல்லை, நிதி இழப்பு என்றும் நீதிமன்றம் கூறியது. லாலு யாதவ் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, குறிப்பிட்ட நிலங்களை ராப்ரி தேவி (லாலு யாதவ் மனைவி) மற்றும் தேஜஸ்வி யாதவுக்கு (லாலு யாதவ் மகன்) மாற்றியதற்கான ஆதாரங்கள் முதற்கட்ட விசாரணையில் தெரிவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது
டெல்லி நீதிமன்றம் மேலும் கூறுகையில், "லாலு பிரசாத் யாதவ் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவர்களுடன் சேர்ந்து சதி செய்து, தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, ஹோட்டல் பராமரிப்பு ஒப்பந்தத்திற்குப் பதிலாக நிலத்தைக் குறைந்த விலைக்கு வாங்கத் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இருப்பதாகவே ஆரம்பக்கட்ட விசாரணைகள் காட்டுகிறது.
முறைகேடு
இந்த விவகாரத்தில் சிபிஐ சமர்ப்பித்த ஆதாரங்களின்படி, டெண்டர் நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, சதி செய்ததாக சிபிஐ ஆதாரங்களை முன்வைத்தது. ஒப்பந்தம் வழங்கப்பட்டதும் நிலங்கள் ராப்ரி தேவி மற்றும் தேஜஸ்வி யாதவுக்கு மாற்றப்பட்டதாகவும் சிபிஐ கூறுகிறது. இது சந்தேகங்களை எழுப்புவதாகவே இருக்கிறது" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
லாலு பிரசாத் யாதவ் சொல்வது என்ன
அதேநேரம் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், ரப்ரி தேவி உள்ளிட்டோர் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். இந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பீகார் தேர்தலுக்குச் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், டெல்லி நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வந்துள்ளது. இது ஆர்ஜேடி கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம் எனச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications