நடிகை ஸ்ரீ லீலா அந்த பிரபலத்தை காதலிக்கிறாரா? ஓபனாக விளக்கம் கொடுத்த அம்மா.. குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: தென்னிந்திய சினிமாவில் வேகமாக முன்னணி நடிகையாக உயர்ந்து வரும் நடிகை ஸ்ரீலீலா குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஒரு விஷயம், கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலில் இருக்கிறார் என்ற வதந்திதான். எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லாமல் சமூக வலைதளங்களில் பரவிய இந்த தகவலுக்கு தற்போது ஸ்ரீலீலாவின் அம்மா டாக்டர் ஸ்வர்ணலதா நேரடியாக விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

நடிகை ஸ்ரீலீலா பற்றிய சர்ச்சை
சமீப காலமாக ஸ்ரீலீலா மற்றும் இந்திய இளம் கிரிக்கெட் வீரர் திலக் வர்மா காதலில் இருக்கிறார்கள் என்ற பேச்சு இணையத்தில் அதிகமாக பரவியது. இருவரும் ஒன்றாக எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை என்றாலும், சில சம்பவங்களை இணைத்து சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் இந்த கதையை உருவாக்கி வைரலாக்கினர்.
இந்த வதந்தி எப்படி ஆரம்பித்தது என்றால், கடந்த 2025 டிசம்பரில் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலுக்கு ஸ்ரீலீலாவும், திலக் வர்மாவும் தங்களது குடும்பத்தினருடன் தனித்தனியாக சென்றிருந்ததாக கூறப்பட்டது. அவர்கள் ஒன்றாக இல்லை என்றாலும், இதை வைத்து காதல் வதந்தி கிளம்பியது.
வைரலான வீடியோஸ்
அதோடு, சமீபத்தில் ஐபிஎல் போட்டியொன்றை ஸ்ரீலீலாவின் அம்மா நேரில் பார்த்ததாகவும், அதுவும் மும்பை இந்தியன்ஸ் அணியின் போட்டி என்பதால் திலக் வர்மாவுடன் ஏதோ தொடர்பு இருக்கலாம் என்று சிலர் பேச ஆரம்பித்தனர். மேலும், ஸ்ரீலீலாவின் குழுவில் இருந்த ஒருவர் திலக் வர்மா பெயர் கொண்ட ஜெர்சி அணிந்திருந்ததாகவும் கூறப்பட்டது. இதையெல்லாம் இணைத்து சமூக வலைதளங்களில் கற்பனை கதைகள் வேகமாக பரவின.
இதற்கிடையே, திலக் வர்மாவை அவரது அணித்தோழர் சூர்யகுமார் யாதவ் கலாய்க்கும் ஒரு வீடியோவும் வைரலானது. ஹோட்டல் லாபியில் ஹெட்போன் போட்டு சென்ற திலக் வர்மாவை பார்த்த சூர்யகுமார், காதலில் விழுந்துவிட்டார் என்பது போல கிண்டல் செய்ததும், இந்த வதந்தி இன்னும் தீவிரமானது.
நடிகை ஸ்ரீலீலா அம்மா விளக்கம்
இந்த சூழ்நிலையில் ஸ்ரீலீலாவின் தாயார் டாக்டர் ஸ்வர்ணலதா விளக்கம் கொடுத்திருக்கிறார் அதில், "இந்த செய்திகளில் கொஞ்சம்கூட உண்மை இல்லை. ஸ்ரீலீலா தற்போது ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள NEET-PG தேர்வுக்காக தயாராகி வருகிறார். இப்போதைய முழு கவனமும் படிப்பிலும், சினிமா கேரியரிலும் தான் இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யோசிக்க இன்னும் ஐந்து ஆறு ஆண்டுகள் இருக்கிறது. சமூக வலைதளங்களில் சம்பந்தமில்லாத விஷயங்களை இணைத்து கதைகள் உருவாக்குகிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.
மேலும், இதற்கு முன்பும் நடிகர் கார்த்திக் ஆர்யனுடன் ஸ்ரீலீலாவை இணைத்து பேச்சு வந்ததை குறிப்பிட்ட அவர், "நானும் கார்த்திக் ஆர்யனின் அம்மாவும் இருவரும் மருத்துவர் என்பதால் தொழில்முறை காரணமாக சந்தித்தோம். அதையும் தவறாக புரிந்து கொண்டு வதந்தி கிளப்பினர்" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

நடிகை ஸ்ரீலீலா பின்னணி
ஸ்ரீலீலா பற்றி சொல்ல வேண்டும் என்றால், அமெரிக்காவின் டெட்ராய்டில் பிறந்த அவர், பெங்களூருவில் வளர்ந்தவர். மருத்துவ படிப்பையும் முடித்தவர். MBBS பட்டம் பெற்றிருந்தும், சினிமா மீது இருந்த ஆர்வத்தால் நடிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். கன்னடத்தில் Kiss படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர், பின்னர் தெலுங்கு சினிமாவில் அதிவேகமாக உயர்ந்தார்.
தமாகா, பகவந்த் கேசரி, குண்டூர் காரம் போன்ற படங்கள் மூலம் பெரிய அளவில் கவனம் பெற்ற ஸ்ரீலீலா, தற்போது தென்னிந்திய சினிமாவின் பிஸியான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழ் ரசிகர்களிடமும் அவருக்கு நல்ல வரவேற்பு உருவாகி வருகிறது.
மறுபக்கம், திலக் வர்மா இந்திய கிரிக்கெட்டின் இளம் நட்சத்திரங்களில் ஒருவர். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் அவர், இந்திய அணியிலும் தனது இடத்தை உறுதிப்படுத்தி வருகிறார்.
இருவருமே தங்களது துறைகளில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், காதல் வதந்தி ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியிருந்தது. ஆனால் தற்போது ஸ்ரீலீலாவின் தாயார் கொடுத்த விளக்கத்தால் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications